இது உங்கள் இடம்!
அட... நாங்களும் ராசியானவங்கதாம்மா!தனியார் நிறுவனத்தில் பணி புரியும், விவாகரத்தான பெண் நான்; என்னுடன் பணிபுரியும் பெண்களில் சிலர், பல நேரங்களில் சகஜமாக பழகினாலும், முக்கிய நிகழ்வுகளில் என்னை தவிர்க்க நினைக்கின்றனர். குறிப்பாக திருமணம், வீடு பால் காய்ச்சுதல் போன்ற சுப நிகழ்ச்சிகளை என்னிடம் சொல்லவே தயங்குகின்றனர்.என் நேரடி உயர் அதிகாரியின் வீட்டில் நடந்த விசேஷம் கூட, என் கீழ் பணிபுரியும் நபர் சொல்லித்தான் தெரிய வந்தது; பரிசுப் பொருட்கள் வாங்க செல்லும் போது கூட, என்னை ஒரு தடையாகத் தான் பார்க்கின்றனர். இவர்கள் சகுனம் பார்க்கின்றனரா அல்லது இதற்கெல்லாம் என்னை போன்றவர் ஏங்குவர் என்று நினைக்கின்றனரா... புரியவில்லை.வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்தித்து, முன்னேற துடிக்கும் என்னை போன்றோருக்கு, உங்கள் வீட்டு மங்கள நிகழ்ச்சிகள் சஞ்சலப்படுத்தப் போவதில்லை. மேலும், கணவனுடன் வாழ்ந்தால் மட்டுமே ஒருவரின் வாழ்த்து பலிக்கும் என்றில்லை; நல்ல மனதோடு யார் வாழ்த்தினாலும், அது சிறந்த ஆசிர்வாதமே என்பதை இனிமேலாவது புரிந்து கொள்ளுங்கள் தோழிகளே!— பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.இளம் பெண்களே... எங்கே போகிறீர்கள்!சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில், வளர்ந்து வரும் இளம் நடிகர் ஒருவரின் பேட்டியும், அதைத் தொடர்ந்து ரசிக, ரசிகைகளின் கலந்துரையாடும் நிகழ்ச்சியும் ஒளிபரப்பானது.அதில் சில இளம் பெண் ரசிகைகள், 'வெவ்வேறான கதா பாத்திரங்களில் நடிக்க வேண்டும்...' என்று தங்கள் ஆசையை தெரியப்படுத்தினர். ஆனால், இன்னும் சில ரசிகைகள் சொன்ன ஆசைகளை கேட்ட போது மிகவும் அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் இருந்தது. ஒரு இளம் ரசிகை, அந்த நடிகரின் கன்னங்களை பிடித்து கிள்ள வேண்டும் என்றும், அதேமாதிரி அந்த நடிகரும், தன் கன்னங்களைப் பிடித்து கிள்ள வேண்டும் என்று கூறினாள்.சில நிமிடம் யோசனைக்கு பின், அந்த நடிகர் ஒத்துக் கொண்டு, அந்த காட்சி நடந்தேறியது. இதை விட ஒரு படி மேலே போய், ஒரு இளம் ரசிகை, 'தான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல தெரியாவிட்டால், தன்னை அலாக்காக தூக்க வேண்டும்; இல்லையேல், மேடையில், தான் லிப்ஸ்டிக் பதித்து, முத்தம் கொடுத்த சட்டையை, அங்கேயே அணிய வேண்டும்...' என்று, தன் ஆசையை வெளிப்படுத்தினாள்; அதுவும் நடந்தது.இது என்ன புது கலாசாரம்! பல்லாயிரம் பேர் பார்ப்பார்களே என்று கொஞ்சம் கூட விவஸ்தை இல்லாமல், இந்த இளம் பெண்கள் இப்படி கேட்கின்றனரே... இதை இவர்கள் பெற்றோர் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனரா... இல்லை பிள்ளைகள் எப்படியாவது திரியட்டும் என்று, எங்காவது வனாந்திரத்தில் வசிக்கின்றனரா... இதை எல்லாம் ஒளிபரப்பும் மீடியாக்களுக்கு சமூக கடமையும், பொறுப்பும் இல்லையா...ரேட்டிங் ஏற வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் நிகழ்ச்சி என்று நடத்திக் கொள்வதா?இந்த மாதிரி சுதந்திரம் கிடைக்கவா பாரதியார் மற்றும் திலகர் போன்றோர், பல ஆண்டுகளாக, பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என போராடினர்!இளம் பெண்களே, மீடியாக்களே... சிந்தித்து செயல்படுங்கள். — எல்.பாலசுப்ரமணியன், சென்னை.'சுகர் ப்ரீ' கொள்ளை!சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள என் அப்பாவைக் காண, பிறந்த வீட்டுக்கு போகும் போதெல்லாம், 'சுகர் ப்ரீ' இனிப்புகளும், காரங்களும் வாங்கி செல்வது வழக்கம். ஒரு முறை, அவ்வாறு நான் வாங்கிச் சென்றவற்றை சாப்பிட்டவருக்கு, 'சுகர்' அதிகமாகி, மாத்திரை சாப்பிட்டதும் தான் குறைந்தது.இதனால், அடுத்தமுறை நான் செல்வதற்கு ஒரு நாள் முன்னரே, ரத்த பரிசோதனை எடுத்து வைக்க சொன்னேன். நான் வாங்கிட்டு போன, 'சுகர் ப்ரீ' ஸ்வீட்டுகளை அப்பாவுக்கு சாப்பிட கொடுத்த ஒன்றரை மணி நேரத்தில், 'ப்ளட் டெஸ்ட்' எடுக்க சொன்னேன். என்ன ஆச்சர்யம்... ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, கட்டுக்கடங்கா வகையில் உயர்ந்திருந்தது. அப்புறம் எதுக்கு ஸ்வீட் ஸ்டால்களில் தனியாக, 'சுகர் ப்ரீ' இனிப்புகள்! விலையும் இரண்டு, மூன்று பங்கு அதிகம். சாதாரண இனிப்பு வகைகளை பல மடங்கு விலை உயர்த்தி விற்க, 'சுகர் ப்ரீ' லேபிள் தேவை தானா? — கிருத்திகா, பூனாம்பாளையம்.