உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

பெண்ணைப் பெற்றவர்களே...எங்கள் தூரத்து உறவினர் வீட்டு பெண்ணின் ஜாதகமும், எங்களது நண்பர் ஒருவரின் மகன் ஜாதகமும் பொருந்தி இருந்தது. பெண் பார்ப்பதற்கு சுமாராகவும், கருப்பாகவும் இருப்பார். பையனோ சிகப்பாக, லட்சணமாக இருப்பார். அத்துடன், பையன் கலரான பெண்ணாக தான் கேட்கிறார் என்பது எங்களுக்கு புரிந்ததால், 'பெண் கருப்பாக தான் இருப்பா; போட்டோவ பாருங்க பிடிச்சிருந்தா பொண்ணுப் பாக்க வாங்கன்னு சொல்வோம்...' என்று பெண் வீட்டாரிடம் கூறினோம். ஆனால், அவர்களோ, 'பெண்ணை நேரிலேயே பாக்கட்டும்; 'ரிசல்ட்' எப்படி இருந்தாலும் பரவாயில்லை...' என்று சொல்லி, எல்லா உறவினர்களையும் கூப்பிட்டு, பெண் பார்க்க வைத்து விட்டனர். கடைசியில், பையனுக்கு பெண்ணை பிடிக்கவில்லை. பெண் வீட்டிலோ, 'நீங்கள் எடுத்துச் சொல்லக் கூடாதா...' என்று எங்களை கேட்கின்றனர். பையன் வீட்டிலோ, 'உங்கள் பையனாக இருந்தால், இந்த வரனை முடிப்பீர்களா...' என்று கேட்கின்றனர். நடுவில் நாங்கள் தான் தர்மசங்கடத்தில் மாட்டிக் கொண்டோம்.கோவிலிலோ, ஓட்டலிலோ பெண்ணுடன் ஒருவரும், பையனுடன் ஒருவரும் சென்று பார்த்து, பிடித்திருந்தால் சம்பிரதாயப்படி பெண் பார்த்து நிச்சயம் செய்யலாமே... ஜாதகப் பொருத்தத்தோடு, ஜோடிப் பொருத்தமும் சரியாக இருக்குமா என்று பார்த்து, இனி பெண் பார்க்க அழையுங்கள் பெற்றோர்களே!— பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.உறுதி கொண்ட நெஞ்சினாய் வா... வா... வா!எங்கள் தெருவில், தினமும் இரவு, 7:00 மணிக்கு, பதினாறு வயது சிறுவன் ஒருவன், வேர்க்கடலை விற்றுக் கொண்டு வருவான். 'பள்ளிக்கு செல்ல வேண்டிய வயதில், இந்த சிறுவன் இப்படி கஷ்டப்படுகிறானே... இவனை நாம் படிக்க வைச்சா என்ன...' என்று நினைத்து, ஒருநாள் அவனிடம் என் எண்ணத்தை சொன்னேன்.'உங்க அன்புக்கு ரொம்ப நன்றிங்க. நான் படிக்கலன்னு நீங்க நினைக்க வேணாம்; நான் இப்போ, 'ப்ளஸ் ௧' படிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். எங்க அம்மா, அப்பா கூலி வேலை செய்றதுனால, அவங்க வருமானம் குடும்ப செலவுகளுக்கு பத்தல. அதனால் தான், நான் இரவு நேரத்தில கடல விக்றேன். உண்மையாகவே எனக்கு உதவி செய்ய விரும்பினா தினமும் ஒரு சிறு தொகைக்கு, கடலை வாங்குங்க; அது போதும்...' என்றான்.பிரமித்து போனேன்; தன்னம்பிக்கையுடன், நெஞ்சுறுதியோடு செயல்படும் அச்சிறுவனுக்கு அன்று முதல் வாடிக்கையாளரானேன்.— சி.ரங்கராஜன், மேட்டுப்பாளையம்.பிள்ளையார் படும்பாடு!விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு பின், பிள்ளையாரை நீர் நிலைகளில் கரைத்து வருகிறோம்; ஏன் இவ்வாறு செய்கிறோம் என்பதன் உண்மைக் காரணம் தெரியுமா?மழைக்காலத்தில் விநாயக சதுர்த்தி பூஜை வருவதால், நம் முன்னோர்கள், மழை நீரை குளத்தில் சேமிக்க, களிமண்ணால் செய்த பிள்ளையாரின் தொப்புளில் ஒரு ரூபாய் காசு வைத்து குளத்தில் விடுவர். மக்கள் அக்காசை எடுக்க குளத்தில் இறங்குவர். அப்போது, களிமண்ணால் செய்த பிள்ளையார் அமுக்கப்பட்டு, களிமண் குளத்திலுள்ள மணல் பரப்பை மூடி, குளத்து நீரை வற்ற விடாமல் செய்வதால், தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளது. இது மக்களுக்கு பயனளித்தது. மழைநீர் சேமிப்பின் அவசியம் உணர்ந்த நம் முன்னோர், அதை செயல்படுத்த ஆன்மிகத்தை பயன்படுத்தினர். இதனால், எவ்வித பணவிரயமும் அரசுக்கு ஏற்படவில்லை. ஆனால், தற்போது பிள்ளையார் உருவத்தை பலவிதமான பொருட்களால் செய்து, நீர்நிலைகளில் விட்டு தண்ணீரை மாசுபடுத்துகின்றனர். அத்துடன், குளம், ஏரி போன்ற நீர் நிலைகளில் வீடுகளை கட்டி, மழை நீரை சாலைகளில் விடுகிறோம். அது கழிவுநீராகி, கடலில் கலக்கிறது. இப்படி எல்லா வகைகளிலும் நீர் நிலைகளை மாசுபடுத்தி, தண்ணீர் இல்லை என, குடங்களை தூக்கி கொண்டு, தெருவில் போராடி வருகிறோம்.ஒவ்வொருவரும் தங்கள் ஊரில் உள்ள குளம் மற்றும் ஏரிகளை பாதுகாக்க அக்கறை எடுத்துக் கொள்வதன் மூலமும், அரசு, நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்துவதன் மூலமாகவும் தான் தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியும்.— ஏ.வி.வீரா,புதுச்சேரி.பயணிகள் ஆட்டு மந்தைகளா!அண்மையில், மாநகர பஸ்சில் பயணித்த போது, ஒரு மூதாட்டி, மூன்று ரூபாய் டிக்கெட்டுக்கு, ௫௦ காசு நாணயங்களை நடத்துனரிடம் கொடுத்த போது, 'என்னம்மா... பிச்சை எடுத்த காசையெல்லாம் கொண்டு வந்து தர்ற... ௫௦ காசெல்லாம் செல்லாது; வேறு ரூபா கொடு...' என்று கேட்டு, அவரை அவமதித்ததைக் கண்டு திடுக்கிட்டேன். அந்த மூதாட்டியோ, 'வேறு சில்லரை இல்லை...' என்று கூறி, நூறு ரூபாய் நோட்டை நீட்டினார். ௧௦ ரூபாய், ௧௫ ரூபாய் டிக்கெட்டுக்கு, நூறு ரூபாய் நோட்டை கொடுத்தாலே எறிந்து விழும் நடத்துனர், மூன்று ரூபாய் டிக்கெட்டுக்கு, நூறு ரூபாய் நோட்டை வாங்கி, மீதி சில்லரையை கொடுத்த அதிசயமும் நடந்தது.மத்திய அரசு பெட்ரோல் விலையை, லிட்டருக்கு மூன்று ரூபாய், ௫௦ காசு என்றும், டீசல் விலையை ஒரு ரூபாய், ௫௦ காசு என்றும், சமையல் சிலிண்டர் விலையை, ௪௫ ரூபாய், ௫௦ காசு என்றும், ௫௦ காசுக்கு முக்கியத்துவம் கொடுத்து விலையை உயர்த்தும் போது, பஸ் நடத்துனர்களுக்கு மட்டும், ௫௦ காசு செல்லாதாம். 'நாணயங்கள் செல்லாது...' என்று அறிவிக்கும் ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை, நடத்துனர்களுக்கு யார் கொடுத்தது? பயணிகளை அலட்சியப்படுத்தி, அவமானப்படுத்துவதற்கு இவர்களுக்கு என்ன உரிமை உள்ளது?பஸ் நடத்துனர்கள் எல்லாம் வானத்தில் இருந்து குதித்து வந்த தேவர்களும் அல்ல; பயணிகள் எல்லாம் ஆட்டு மந்தைகளும் அல்ல என்பதை, நடத்துனர்கள் இனிமேலாவது உணர்ந்து திருந்துவரா!— ஜி.கலைவாணி, பனங்கோட்டூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !