உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம் !

மனுஷனா பாருங்க!சமீபத்தில், ஒரு நாள், பகல் பதினொரு மணி அளவில், திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் உள்ள கல் பலகையில் அமர்ந்திருந்தேன். சிறிது தள்ளி ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர், சோகத்தோடு உட்கார்ந்திருந்தார். அப்போது, இரண்டு கால்களும் ஊனமான ஒருவன், கைகளை ஊன்றித் தவழ்ந்தவாறு அவரிடம் வந்து காசு கேட்டான். அதற்கு அவர்,  'தம்பி... எங்கிட்ட காசு இல்லை. என் பழைய நண்பரைப் பார்ப்பதற்கு இங்கு வந்தேன். பஸ்சை விட்டு இறங்கும் போது, கூட்டத்தில் யாரோ என் பர்சைத் திருடிட்டாங்க. அதில், நண்பரோட வீட்டு முகவரி, மொபைல் நம்பர் இருந்தது. இப்ப எல்லாமே போச்சு. திரும்ப ஊருக்குப் போகக் கூட பணமில்லை;  இங்கே தெரிஞ்சவங்களும் இல்லை.  இருபது ரூபா இருந்தாக் கூடப் போதும்... ஊருக்குப் போயிடுவேன்!' என்று கவலையோடு சொன்னார்.அவர் சொன்னதைக் கேட்ட அந்த பிச்சைக்காரன், என்னைப் பார்த்தான். நான் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கி விட்டதால், பஸ்சுக்காக 5 ரூபாய் மட்டுமே வைத்திருந்தேன்.  அதனால், கையை விரித்தேன். அவன் எதுவும் பேசாமல், திரும்பி கைகளை ஊன்றி வேகமாகத் தவழ்ந்து சென்றான்.ஐந்து நிமிடம் சென்றதும் திரும்பவும் வந்தான். அவன் கை விரல் இடுக்கில், ரெண்டு பத்து ரூபாய் நோட்டு இருந்தது. நோட்டை, அந்த பெரியவரிடம் நீட்டியபடியே, 'ஐயா... இந்தாங்க இருபது ரூபா. வாங்கிக்கிட்டு நீங்க ஊருக்குப் கிளம்புங்க...'  என்றான். அவர் பணத்தை வாங்காமல், அவனை வியப்புடன் பார்த்தார்; நானும் பார்த்தேன். 'என்னய்யா யோசிக்கிறீங்க... மனிதனுக்கு மனிதன் செய்யும் சின்ன உதவிதான் இது. ஆனா, நீங்க என்னை மனுஷனா நினைக்கல. ஒரு நொண்டி பிச்சைக்காரரிடம் பணம் வாங்குவதை அவமானமா நினைக்கிறீங்க. என்னையும் மனுஷனா நினைங்க. எனக்கும் மனசு இருக்கு, மனசாட்சி இருக்கு!' என்றான். 'தம்பி... அப்படியெல்லாம் நினைக்கல. உன் அன்பை பார்த்து அசந்திட்டேன்!'  என்றவர், அவனிடம் பணத்தை வாங்கிக் கொண்டார். 'நாளைக்கே உன்னை வந்து பார்க்கிறேன்...' என்று  சொல்லிவிட்டுப் புறப்பட்டார். மனித நேயம் என்பது, நல்ல உள்ளங்களில் மட்டுமே வாழ்கிறது என்று கேள்விப்பட்டிருக்கேன். அப்படி ஓர் உயர்ந்த உள்ளத்தை அந்தப் பிச்சைக்காரரிடம் கண்டேன். —  ஆ.சந்திரன், கன்னிவாடி.மலிவு விலை...  சொல்லாத அர்த்தம்!என்னுடைய தோழி கல்லூரி பேராசிரியை. அவளுடைய  கணவர் ஒரு நல்ல பதவியில் இருக்கிறார். இருவருமே வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான். நான், அவள் வீட்டிற்குள் போகும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், வாஷிங் மிஷின், 'ஏசி', ஹீட்டர், பிரிட்ஜ் என்று ஏதாவது ஒன்றின் பழுது நீக்கும் பணி நடந்து கொண்டிருக்கும். குறைந்தபட்சம் கிரைண்டர், மிக்சி போன்றவைகள் சரியாக செயல்படாதது தொடர்பாக, அந்த கம்பெனி டீலரிடம் போன் செய்து பேசிக் கொண்டிருப்பாள். வேதனையாகவும், வேடிக்கையாகவும் இருக்கும். சென்ற முறை அவள் வீட்டிற்கு சென்ற போது, என்னையறியாமல் சிரித்து விட்டேன். 'ஏண்டி சிரிக்கிறாய்? உன் வீட்டில் எந்த பொருளும் ரிப்பேரே ஆகாதா?' என்று கேட்டாள்.'நிச்சயமாக இப்படி ஆகாது! அத்தி பூத்தாற்போல் தான் எங்க வீட்டுப் பொருள் ரிப்பேராகும்!' என்றேன். 'அதெப்படி... உங்க வீட்டில் மட்டும்?' என்றாள். 'சொன்னால் கோபித்துக் கொள்ளக் கூடாது... உனக்கு என்ன வசதியா இல்லை? மலிவு விலை என்றால் படிக்காத பாமரப் பெண்களை போல ஓடி ஓடி, தேடிப் பிடித்து வாங்குகிறாய்? 'காசுக்கு தகுந்த பணியாரம்...' என்று கிராமத்தில் கூட சொல்வரே...  'குறைந்த விலையில் வாங்கும் எந்த பொருளும், நீண்ட நாள் உழைக்காது. அதன் உள்ளே இருக்கும், 'பார்ட்ஸ்'களின் தரம் 100க்கு 100 மட்டமாகத்தான் இருக்கும். 'காஸ்ட்லி'யான பொருட்களை போட்டு, தரமாக செய்து, மலிவு விலையில் தர அவர்களுக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? நான் எந்த பொருளாக இருந்தாலும், விலை கூட கொடுத்து, உயர்ந்த, தரமுள்ள நல்ல கம்பெனி பொருளாகத்தான் வாங்குவேன்.'நான் உபயோகிக்கும் பொருட்களில் ரிப்பேர் என்பது அரிது. உனக்கு ஆகும் ரிப்பேர் செலவுகளை, நீ வாங்கும் பொருட்களின் விலையோடு கூட்டிப் பார். வாங்கும் பொருளின் விலையை விட கூடுதலாகத்தான் வரும். அலைச்சல், நிம்மதியின்மை, நேரத்தில் வேலையை முடிக்க முடியாத டென்ஷன்... இது எல்லாம் எதனால்? 'விலை மலிவு என்றால், உடனே ஓடிப்போய் வாங்கும் பாமரப் பெண்களின் புத்தி உனக்கு இருப்பதால் தான்! 'மலிவு விலை என்று சொன்னாலே, 'தரம் குறைந்தது' என்று சொல்லாத அர்த்தமும் அதற்குண்டு!' என்றேன். என் தோழி சிந்திக்கத் தொடங்கினாள்; புத்திசாலிப் பெண்கள் சிந்திப்பர்! — மலர்விழி, கோவை.தோழியிடம் கற்றேன்!சக தோழியின் மகள் திருமணத்திற்கு அன்பளிப்பு வாங்க நானும், என் சிநேகிதியும் கடைக்குச் சென்றோம்; ஆளுக்கொரு பொருளைத் தேர்ந்தெடுத்தோம். நான், என் அன்பளிப்பு பொருளை, 'கிப்ட் கலர்' பேப்பரால், 'பேக்' செய்யச் சொன்னேன். என் தோழியோ தான் தேர்ந்தெடுத்த பொருளை, 'பேக்' செய்யச் சொல்லாமல், கலர் கிப்ட் பேப்பர், சாடின் ரிப்பன், லேபிள் என தனித்தனியாக கேட்டு வாங்கிக் கொண்டாள். எனக்குப் புரியவில்லை. அவளிடம் காரணம் கேட்டேன். அதற்கு அவள், 'கடையில பரிசுப் பொருளை, 'பேக்' செய்வதால் வீட்டிலுள்ளவர்கள் அதைப் பார்க்கவே முடிவதில்லை. என் மாமியார், மாமனார் எல்லாம் இந்தப் பரிசுப் பொருளை ஆர்வமா, ஆசையாக பார்க்கிறாங்க... அதனால், நான் கடையில பேக் செய்வதில்லை...' என்றாள். 'மற்றவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பது தான், உலகிலேயே மிகப் பெரிய சந்தோஷம்...' என்பதை அன்று என் தோழியிடம் கற்றேன். அன்று முதல் அதை செயல் படுத்தியும் வருகிறேன். என்ன... இனிமே நீங்களும் தானே?  —  சியாமளா ராஜகோபால்,  சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !