இது உங்கள் இடம்!
வித்தியாசமான, விசிட்டிங் கார்டு!ஆட்டோ ஓட்டுனரான என் குடும்ப நண்பரை சமீபத்தில் சந்தித்தேன். அப்போது, அவருடைய விசிட்டிங் கார்டை கொடுத்து, 'எந்த நேரமும் என்னை அழைக்கலாம்; உடனடியாக என் ஆட்டோ வரும்...' என்றார்.விசிட்டிங் கார்டை வாங்கிப் பார்த்தவன், வியந்தேன். காரணம், '24 மணி நேர சேவை - உங்களின் தேவைக்காக, சேவையுடன் காத்திருக்கும், இந்த ஆட்டோவை அழையுங்கள்...' என்ற தகவலுடன், அவருடைய, மொபைல் எண்களும், கார்டின் பின்புறம் அந்நகரில் உள்ள மருத்துவமனைகள், சிறப்பு மருத்துவர்கள், மருந்துக் கடைகள், காவல் நிலையம், தீயணைப்பு நிலையம் மற்றும் வங்கிகள் என, அத்தனை மொபைல் போன் எண்களையும் அச்சிட்டிருந்தார்.'எப்படி இந்த யோசனை வந்தது?' என்றேன்.'பணம் சம்பாதிப்பது மட்டும் என் நோக்கமல்ல; வழி தெரியாமல் தடுமாறுவோருக்கு என்னால் முடிந்த சிறு சிறு உதவி செய்வதும் தான் ...' என்றார். அவரின் சேவை நோக்கத்தை எண்ணி, பெருமிதம் அடைந்தேன். இவரைப் போல், மற்ற ஆட்டோக்காரர்களும் பின்பற்றினால், மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்குமே!— மு.சுகாரா, தொண்டி.மனைவிக்கு துரோகம் செய்யாதீர்!சுயதொழில் செய்யும் எனக்கு, அழகான மனைவியும், அறிவான மூன்று குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், என் அலுவலகத்தில், பெண் உதவியாளருடன் ஏற்பட்ட பழக்கம், தவறான தொடர்பை ஏற்படுத்தி விட்டது.ஒரு கட்டத்தில் இதை தவறு என உணர்ந்து, 'இனிமேல் இந்த உறவு வேண்டாம்; உனக்கு என்ன தேவையோ அனைத்து உதவிகளும் செய்கிறேன்...' என்றேன். அவளோ, 'காசு, பணம் தேவையில்ல; உங்களுடன் இருப்பது தான் எனக்கு மகிழ்ச்சி...' என்றாள். வேறு வழியில்லாமல், இரட்டை வாழ்க்கை வாழ்ந்தேன்.இந்த விஷயம், எப்படியோ என் மனைவியின் காதுகளுக்கு போக, அவள் இது குறித்து கேட்க, நானும் உண்மையைக் கூறி, மன்னிப்பு கேட்டேன். ஆனால், அவளுக்கோ அதிர்ச்சியில், நாக்கு இழுத்துக் கொண்டதுடன், மனநிலை பாதிக்கப்பட்டவள் போல் ஆகி விட்டாள். எவ்வளவோ வைத்தியத்திற்கு பின், இன்று, ஒரு சில வார்த்தைகள் பேசினாலும், பிரமை பிடித்தவள் போலவே இருக்கிறாள்.அவளின் இந்த நிலைக்கு காரணமான நான், 'இந்த அன்புத் தெய்வத்திற்கா துரோகம் செய்தோம்...' என நினைத்து, ஒவ்வொரு நாளும், ரத்தக் கண்ணீர் வடிக்கிறேன். யாருக்கும் என் நிலை வரக்கூடாது என்ற எண்ணத்தில் கூறுகிறேன்... இன்பத்திலும், துன்பத்திலும் நம்முடன் பங்கு போட, மனைவியை தவிர, இவ்வுலகில் யாரும் இல்லை என்பதை மறந்து விடாதீர்கள்!— பெயர் வெளியிட விரும்பாத வாசகர், கோயம்புத்தூர்.உபத்திரவம் செய்யாதீர்!என் நண்பர் ஒருவர், அவருடன் வங்கியில் பணிபுரியும் இளம் விதவைப் பெண்ணை, வீட்டில் உள்ளோரின் அனுமதியுடன் சமீபத்தில் திருமணம் செய்தார். திருமணத்திற்கு வந்திருந்த நண்பர்களில் சிலர், அவர்களுக்கு வாழ்த்து கூறாமல், 'ஏண்டா... அடுத்தவன் அனுபவிச்ச பெண்ணைப் போயா திருமணம் செய்றே...' என்றனர், நண்பரின் மனம் புண்படும்படி! ஆனாலும், நண்பர், உயர்ந்த உள்ளத்துடன், அவர்கள் பேசியதை பொருட்படுத்தாமல், 'என் மனசுக்கு பிடிச்சுருக்கு; திருமணம் செய்கிறேன்...' என்றார்.கணவனை இழந்த பெண்களின் மறுவாழ்விற்காக பாடுபட்ட பாரதியார் மற்றும் பாரதிதாசன் போன்றோர் பிறந்த இந்த நாட்டில், படித்த இளைஞர்களே இதுபோல் பேசுவது நியாயமா?கணவனை இழந்த பெண் என்றால், முற்றும் துறந்த ஞானியா? அவர்களுக்கும் உணர்வு, அன்பு மற்றும் பாசம் அனைத்தும் உண்டு. இத்தகைய திருமணத்திற்கு செல்வோர், மணமக்களை வாழ்த்தாவிட்டாலும், மனம் புண்படும்படி பேசாதீர்கள்!— எம்.சந்திரமோகன், மதுரை.