உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

முதுமையை மதிப்போம்!ஆடி மாதம், ஆடிப்பூரம் அன்று, அம்மன் கோவிலில், வளையல், குங்குமம் மற்றும் மஞ்சள் நிரம்பிய தாம்பூலப் பையை, அனைவருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தார் ஒரு பெண். அப்போது, கணவனை இழந்த, 70 வயது மதிக்கத்தக்க முதிய பெண் ஒருவர், இந்நிகழ்ச்சியை பார்த்தபடி இருந்தார்.அவரிடமும் தாம்பூலப் பையை கொடுத்தார் இப்பெண். அவர் வாங்க தயங்கவே, 'ஏன்ம்மா தயங்குகிறீங்க... வாழ்க்கையில் பல்வேறு தடங்கல்களையும் தாண்டி, பூரணமாக வாழ்ந்து விட்ட நீங்க, அந்த கருவறையில் உள்ள தெய்வத்திற்கு சமம். உங்களிடம் தான், என்னை போன்ற இளையவர்கள், ஆசி வாங்கணும்; இதை நீங்க உபயோகிக்காவிட்டாலும், வீட்டில் யாருக்காவது கொடுங்க...' என்று சொல்லி, பையை கொடுத்து, அவரை நமஸ்கரித்தாள்.அந்த முதிய பெண் மட்டுமல்ல, இதைப் பார்த்த நாங்களும் சிலிர்த்து போனோம். தன் அழகான பேச்சால், அவரின் நொந்த மனதை, மயிலிறகால் வருடி விட்ட அப்பெண்ணை பாராட்டியதோடு, நாங்களும் முதிய பெண்ணிடம் ஆசிர்வாதம் வாங்கினோம்!— வரலட்சுமி முத்துசாமி, சென்னை.இப்படியும் உதவலாமே!போதிய பேருந்து வசதியில்லாத கிராமத்தை சேர்ந்த என் நண்பன், தினமும், டூ வீலரில் தான், நகரத்தில் உள்ள தன் அலுவலகத்திற்கு வருவான். அச்சமயங்களில், பேருந்திற்காக காத்திருப்போர் சிலர், அவனிடம், 'லிப்ட்' கேட்டு, செல்வர். அவனும் இன்முகத்துடன் உதவி செய்வான்.சமீபத்தில், நண்பனை பார்க்க அவன் கிராமத்திற்கு சென்றிருந்த போது, அவனது டூ வீலரில், ஒரு உண்டியல் வைத்திருந்ததை கவனித்தேன். அதில், அருகில் இருக்கும் அனாதை இல்லத்தின் புகைப்படம் ஒட்டப்பட்டு, 'உங்களுக்கு நான் உதவி செய்கிறேன்; நீங்கள் இவர்களுக்கு உதவி செய்யுங்கள்...' என்று எழுதியிருந்தது.அதுகுறித்து அவனிடம் கேட்டபோது, 'லிப்ட்' கேட்போர், பேருந்து கட்டணத்தை அந்த உண்டியலில் போடுவர் என்றும், மாதம் ஒருமுறை, உண்டியலில் சேரும் தொகையை எடுத்து, ஆதரவற்றவர்களுக்கு கொடுத்து உதவுவதாக கூறினான். என் நண்பனின் யோசனையை, மனதார பாராட்டினேன்.— ரா.புஷ்பராஜ். புதுச்சேரி.சொந்த வீட்டிலேயே...எங்கள் பக்கத்து வீட்டு அம்மா, வெளியூரில் உள்ள தன் மகளை பார்க்க, அடிக்கடி செல்வார். அப்படி செல்லும்போது பை நிறைய, பொருட்கள் வாங்கி செல்வார்.ஒருமுறை, அப்படி கஷ்டப்பட்டு பையை தூக்கிச் சென்ற போது, பரிதாபப்பட்டு, பஸ் ஸ்டாப் வரை, தூக்கிச் சென்றேன். பையை கீழே வைக்கும் போது, 'ணங்'கென்று சத்தம் கேட்டது; என்னவென்று கேட்டேன்.'அதொண்ணுமில்ல... எங்கம்மா எனக்கு சீர் கொடுத்த வெண்கல பாத்திரங்க எல்லாம், பரண்ல சும்மா கிடந்துச்சு. அதனால தான் மக வீட்டுக்கு போகும் போது, ஒவ்வொண்ணா எடுத்து, மருமகளுக்கு தெரியாம பைக்கு அடியில வச்சு, மகளுக்கு கொண்டு போய் குடுத்துட்டு வர்றேன்; மருமகளுக்கு தான் அவங்கம்மா சீர் தந்திருக்காங்களே...' என்றார் கூலாக!'ஏம்மா... உங்க பொண்ணுக்கும் தான், கல்யாணத்தப்பவே சீர் தந்திருப்பீங்கள்ல... அப்புறம் எதுக்கு இந்த திருட்டுப் புத்தி...' என கேட்கவும், 'அதுக்காக மகளும், மருமகளும் ஒண்ணாயிடுவாங்களா... எம்மகளுக்கு குடுக்கிறது, என் இஷ்டம்...' என்றார்.மணமுடித்து, பெற்றோரை பிரிந்து கணவர், மாமியாரே உறவென வரும் மருமகளிடம் அன்பு செலுத்தி அரவணைக்காமல், திருட்டுத்தனமாக, வீட்டில் உள்ள பொருட்களை, மகள் வீட்டுக்கு கடத்தும் இப்படிப்பட்ட மாமியார்களை என்னவென்பது!— டி.மேரிராணி தேவராஜன், மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !