இது உங்கள் இடம்!
இப்படியும் ஒரு விழா!சமீபத்தில், எங்களது அபார்ட்மென்ட்டின், மூன்றாவது ஆண்டு விழா நடைபெற்றது. அதற்கு, சிறப்பு விருந்தினர்களாக பேராசிரியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் என, சிலர் வந்திருந்தனர். கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் என, கலகலப்பாக நிகழ்ச்சி நடைபெற்று வந்த நிலையில், விருந்தினராக கலந்து கொண்ட காவல்துறை அதிகாரி, யாருக்கோ போன் செய்தார். சில நிமிடங்களில், 'மப்டி'யில் மூன்று காவலர்கள் வந்தனர்.இரு சக்கர வாகனத்தில் அவர்கள் நிகழ்த்தி காட்டிய சாகசம், அனைவரையும் அசர வைத்தது. 'இவர்கள் மட்டுமல்ல, பெண் காவலர்களுக்கும் இது போன்ற சாகசங்கள் அத்துப்படி...' என்றபடி, இரு பெண்களை அழைத்தார், காவல்துறை அதிகாரி.அவர்கள், பெண்களிடம், எவ்வாறு திருடர்கள் சங்கிலி பறிப்பர் என்பதை, பல்வேறு விதமாக நிகழ்த்திக் காட்டி, அதிலிருந்து எப்படி தங்களை தற்காத்துக் கொள்வது, எவ்வாறு மற்றவரை உதவிக்கு அழைப்பது மற்றும் எப்படி எதிரியை தாக்குவது என்பதைப் பற்றியும் விளக்கினர்.இறுதியில், அபார்ட்மென்ட்களில் நடக்கும் கொலை, கொள்ளை சம்பவங்கள் பற்றியும், அது சம்பந்தமான தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.இவை அனைத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்திருந்தது. மற்ற அடுக்குமாடி குடியிருப்புவாசிகளும், இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தலாமே!— டி.தவமணி, பெங்களூரு.அர்த்தமுள்ள புத்தாண்டு கொண்டாட்டம்!கடந்த ஆங்கில புத்தாண்டு அன்று, என் நண்பன் போன் செய்து, 'உடனே புறப்பட்டு வா... ஆஸ்பத்திரிக்கு போகணும்...' என்று சொல்ல, என்னமோ ஏதோவென நினைத்து, அவசர அவசரமாக, அவன் வீட்டுக்கு சென்றேன்.ஆனால், அவனோ, பிஸ்கட் பாக்கெட், பிரட், வாட்டர் பாட்டில்களை அட்டை பெட்டிகளில், அடுக்கியவாறு இருந்தான்.'எதுக்கு என்னை அவசரமா கூப்பிட்டே... இதையெல்லாம் எங்கே கொண்டு போகப் போற...' என்றேன்.'புத்தாண்டுக்கு செலவுக்கு, எங்க அப்பா, 2,000 ரூபாயும், அம்மா, 1,000 ரூபாயும் தந்தாங்க; என்கிட்ட கொஞ்சம் பணம் இருந்துச்சு. எல்லா பணத்தையும் போட்டு இதெல்லாம் வாங்கினேன். அரசு ஆஸ்பத்திரிக்கு போயி, ஏழை நோயாளிகளுக்கு இதை கொடுத்துட்டு வருவோம், வா...' என்றான்.புத்தாடை, மது, வெடி என்று காசை வீணடிக்கும் இளைஞர்களுக்கு மத்தியில், என் நண்பன் விடிவெள்ளியாக தெரிந்தான்.புத்தாண்டு கொண்டாடுவோர், இதுபோன்ற சேவையில் ஈடுபடலாமே!—எம்.வடுகநாதன், வேதாரண்யம்.அன்பளிப்பு கொடுக்க போகிறீர்களா?சமீபத்தில், என் சகோதரி மகளுக்கு, குழந்தை பிறந்தது. குழந்தையை பார்க்க உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என, பலரும் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். வழக்கமாக, குழந்தைக்கு வேண்டிய, பேபி ஆயில், சோப் மற்றும் டிரஸ் உள்ளிட்ட பொருட்கள், பரிசாக வந்தன. அப்போது, ஆசிரிய நண்பர் ஒருவர் அளித்த பரிசுப் பொருள், மிகவும் பயனுள்ளதாகவும், மறக்க முடியாத பொருளாகவும் இருந்தது.அது, வசம்பு, தேன், குழந்தையின் கழுத்தில் அணிவிக்கும் சிறிய பாசி மணி மற்றும் கையில் அணிவிக்கும் திருஷ்டி கறுப்பு வளையல்கள் போன்றவைகள்! சமய சஞ்சீவி போன்று தேடிப் பிடித்து, அவற்றை வாங்கிக் கொடுத்த நண்பரை, பாராட்டாதவர்கள் இல்லை. பரிசு என்றால் இதுவல்லவோ!— ஜி.நிர்மலா கிருஷ்ணன், கிருஷ்ணகிரி.