இது உங்கள் இடம்!
வருமானத்துக்காக பொய் சொல்லாதீர்!என் தோழிக்கு, திருமணமாகி, மூன்று ஆண்டுகளாகியும், குழந்தை இல்லை; மருத்துவரிடம் பரிசோதனை செய்ததில், 'பிரச்னை எதுவும் இல்லை; விரைவில், குழந்தை பிறக்கும்...' என்று, கூறியுள்ளார். ஆனால், புகுந்த வீட்டினரோ, அதையெல்லாம் பொருட்படுத்தாமல், அவளை, ஒரு ஜோதிடரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். அவரோ, 'இதற்கு முன், இவள் ஒரு கருவை கலைத்து இருக்கிறாள்; அந்த பாவம் தான், இப்போது, இவளுக்கு சாபமாக உள்ளது...' என்று, வாய்க்கு வந்ததை உளறி, பரிகாரம் என்ற பெயரில், பணத்தையும் பிடுங்கியுள்ளார்.அவர் சொன்னதை நம்பிய தோழியின் புகுந்த வீட்டினர், 'நீ, திருமணத்துக்கு முன் தவறு செய்துள்ளாய்...' என்று சந்தேகப்பட்டு கூறி, சண்டை போட்டு, விவாகரத்து வரை சென்றுள்ளனர். பின், உறவினர்கள் பேசி, சமாதானப்படுத்தி, சேர்த்து வைத்துள்ளனர்.ஜோதிடர்களே... வருமானம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, இம்மாதிரி கண்டதைச் சொல்லி, அடுத்தவர் வாழ்க்கையை கெடுத்து, பரிகாரமே இல்லாத பாவத்தை சம்பாதிக்காதீர்!— பிரேமா கார்த்திகேயன், சென்னை.அதிசய பிறவி!சமீபத்தில், இரவு பேருந்தில் சொந்த ஊருக்கு பயணித்த போது, என் அருகில் அமர்ந்திருந்த பெண்மணி, தண்ணீர் குடித்த போது, என்னிடம் திரும்பி, 'வேண்டுமா...' என்று கேட்டார். தாகமாயிருந்ததால், 'கொடுங்கள்...' என்றேன். அவரோ, புதிய பாட்டிலை நீட்ட, 'வேணாம்; ஓப்பன் செய்த பாட்டிலையே கொடுங்க...' என்றேன்.'இல்ல; இது, எச்சில் செய்தது. உங்களை போன்றவர்களுக்கு கொடுப்பதற்கென்றே, இன்னொன்றை வாங்கி வைத்திருக்கேன்...' என்று கூறி கொடுத்தார். நான், ஆச்சரியமாக அவரைப் பார்க்க, 'எப்போதும், ரெண்டு, மூணு தண்ணீர் பாட்டில்கள் வாங்கி வைத்து, தேவைப்படுவோருக்கு கொடுப்பேன். அதே போன்று, கைப்பையில், 'ஆஸ்ப்ரின்' மாத்திரைகள், மிட்டாய்கள் வைத்திருப்பேன். யாருக்காவது, திடீரென்று மாரடைப்பு வந்தாலோ, சர்க்கரை நோயாளிகளுக்கு, மயக்கம் ஏற்பட்டாலோ கொடுக்க பயன்படும்...' என்றார்.எவ்வகையிலாவது, பிறருக்கு உதவ வேண்டுமென, முன்னேற்பாட்டோடு இருக்கும் அப்பெண்ணைப் பார்த்த போது, பிரமிப்பாக இருந்தது. இவரைப் போன்றோர், அதிசய பிறவிகள் தானே! நாமும், ஏதாவது ஒரு வகையில், தினமும் ஒருவருக்காவது உதவ வேண்டுமென்பதை, புத்தாண்டு சபதமாக கொண்டுள்ளேன்.— மல்லிகா அன்பழகன், சென்னை.டிஜிட்டலுக்கு தயார்!வீட்டில், சில மின் சாதனங்களை பொருத்துவதற்காக, எலெக்ட்ரிஷியனை அழைத்திருந்தேன். அவர் வேலையை முடித்ததும், கூலி, 1,200 ரூபாய் கேட்டார். 'என்னிடம் அவ்வளவு பணம் கையில் இல்லை; நிலைமை சரியானவுடன் வங்கியில் இருந்து எடுத்து தருகிறேன்...' என்றேன்.உடனே, அவர், தன் வங்கி கணக்கு எண்ணை கொடுத்து, 'ட்ரான்ஸ்பர்' செய்யும்படி கூற, பணத்தை, ஒரே நிமிடத்தில், 'ட்ரான்ஸ்பர்' செய்தேன்.பின், 'வங்கியில் போட்ட பணத்தை எடுக்க முடியாதே; எப்படி பொருட்கள் வாங்குவீர்கள்...' என்று கேட்டேன்.'என் பாக்கெட்டில், 50 ரூபாய் தான் இருக்கு; பெட்ரோல் முதல் எலக்ட்ரிக்கல் சாமான்கள் வரை, வங்கி அட்டை மூலம் வாங்க ஆரம்பித்து விட்டேன்; பணப் புழக்கம், குறைந்து விட்டதே என்று புலம்புவதை விட, மாற்று பண பரிவர்த்தனை முறைக்கு மாறுவதால், பிழைப்பு கெடாமல் பாத்துக்கலாம்...' என்ற அவருடைய பதில், என்னை ஆச்சரியப்பட வைத்தது. எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஒருவருடைய பொருளாதார பரிவர்த்தனை புரிதல், படித்தவர்களுக்கு ஒரு பாடம்!— எஸ்.ராமன், சென்னை.சபாஷ் கிராமம்!சமீபத்தில், என் நண்பனை சந்திக்க, அவனது கிராமத்திற்கு சென்றிருந்தேன். ஊருக்குள் நுழைந்ததும், முக்கிய இடத்தில் அனைவரது பார்வையிலும் படும்படி, கொட்டை எழுத்துக்களில், 'மாட்டின் கொம்புகளில், கட்சி கொடியின் வண்ணத்தை பூசுபவர்களுக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்; அத்துடன், மாட்டின் கொம்பில், உள்ள அவ்வண்ணத்தை அழிக்கா விட்டால், அவர்கள் வீட்டு விசேஷத்தில், ஊர்க்காரர்கள் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள்...' என்ற பலகை வைக்கப்பட்டிருந்தது.அதுபற்றி, என் நண்பனிடம் கேட்ட போது, 'தங்களது மாடுகளின் கொம்புகளில், தாங்கள் சார்ந்த கட்சிக் கொடியின் வண்ணத்தை பூசுவதால், அவர்கள் போடும் அரசியல் சண்டையில், அப்பாவி மாடுகளை வெறித்தனமாக தாக்குகின்றனர். இதை தடுக்கவே, எங்கள் கிராமத்தில், இப்படி, ஊர் கட்டுப்பாடு விதித்திருக்கிறோம்...' என்றான்.விவசாயம் மற்றும் வண்டி இழுக்க என, நமக்காக உதவும் மாடுகளை, அரசியல் காரணம் காட்டி, வதை செய்வது, தடுக்கப்பட வேண்டிய செயல் தான்; அதை தடை செய்த அக்கிராமத்தினரை, மனமாரப் பாராட்டினேன்.— எஸ்.தங்கமுடிராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர்.