உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

பாசம் ஒன்றே போதுமே!நான், புதிதாக சேர்ந்துள்ள நிறுவனத்தில், அங்குள்ள, 'போர்மேனை' அனைவரும், அப்பா என்றும் சித்தப்பா என்றும் உறவுமுறை சொல்லி அழைப்பதை பார்த்தேன். பதிலுக்கு அவரும், 'மகனே...' என, அழைத்து வந்தார்.சமீபத்தில், ஒருநாள், என்னிடம், 'மகனே... வர்ற ஞாயிற்றுக்கிழமை, என் பையனுக்கு திருமணம்; அவசியம் வரணும்...' என்று கூறி, பத்திரிகை கொடுத்தார். நானும், அலுவலக ஊழியர்களோடு, திருமண விசேஷத்தில் கலந்து கொண்டேன். அங்கே வந்திருந்த பலரும், அவரை, அப்பா, சித்தப்பா என்று அழைப்பதை கண்டு ஆச்சரியமடைந்தேன்.விருந்து முடிந்து, புகைப்படம் எடுத்துக் கொண்ட பின், கூட்டமாக அமர்ந்திருந்த போது, ஊழியரில் ஒருவர், 'சித்தப்பா... உங்களுக்கு ஒரே பையன் தானா, அதுக்கப்புறம், 'டிரை' செய்யவேயில்லையா...' என்று நக்கலாக கேட்க, அங்கே சிரிப்பலை எழுந்தது.அவர் அதை கண்டுகொள்ளாமல், 'எங்களுக்கு திருமணமான ரெண்டு வருஷத்துல, மூணு முறை கரு தங்காமல் கலைஞ்சு போச்சு. டாக்டரிடம் சென்ற போது, 'கர்ப்பப் பையில் கட்டி இருக்கு; உடனடியாக, 'ஆபரேஷன்' செய்து, கர்ப்பப் பையை நீக்கணும்'ன்னு சொல்லிட்டாங்க. வேறு வழியில்லாம கர்ப்பப் பையை நீக்கியாச்சு...' என்று நிறுத்திய போது, அதுவரை கேலியும், கிண்டலுமாக இருந்தவர்கள், அசைவின்றி அடங்கிப் போனோம்.தொடர்ந்த அவர், 'என் மனைவி, என்கிட்ட, 'நீங்க வேணும்ன்னா, இன்னொரு கல்யாணம் செய்துக்கங்க'ன்னு சொன்ன போது, அவள் என் மீது வைத்திருந்த பாசத்தை நினைச்சு, மறுத்துட்டேன். அப்புறம் நாங்கள், ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்தோம். அவனுக்கு தான் இன்னைக்கு கல்யாணம்...' என்றார்.அனைவரும், அவரிடம் வருத்தம் தெரிவித்த போது, 'விடுங்கடா... எனக்கு எல்லாருமே மகன் தான்டா... என் மனைவி, என் மீது வைத்துள்ள பாசத்திற்கு, இந்த ஜென்மம் பத்தாதுடா...' என்றார்.குழந்தையில்லாததை, ஒரு குறையாகவே கருதாமல், ஆத்ம திருப்திக்காக ஒரு குழந்தையை தத்து எடுத்து, வளர்த்து ஆளாக்கியதோடு, எல்லாரையுமே தன் பிள்ளையாக பாவித்த அவரின் மனோபாவம், எங்களை வியக்க வைத்தது!— பா.அமலோற்பவநாதன், மதுரை.நிலத்தடி நீரை காப்போம்!புறநகர் பகுதியில் வீடு கட்டி, சமீபத்தில் குடியேறினேன். புதிதாய் முளைத்த நகர் என்பதால், வீடுகளை விட, புதர்களும், செடிகளுமே மண்டிக் கிடந்தன.என் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவர், எப்போதும், ஏதாவது செடிகளை பிடுங்கியும், முள் மரங்களை வெட்டியபடியும் இருப்பார்.இதுபற்றி அவரிடம் விசாரித்த போது, அவர் கூறிய விஷயம் சிந்திக்க வைத்தது.'நம் நாட்டில் நல்ல மழை வளம் இருந்தும், நிலத்தடி நீர் குறைந்து, தண்ணீர் பஞ்சம் வர, இது போன்ற தேவையற்ற செடிகள் தான் காரணம். இவைகள் நிலத்தடி நீரை இழுத்துக் கொள்வதால், விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதில்லை. அதனால் தான், என்னால் முடிந்த அளவு, ஒரு நாளைக்கு, 200, 300 செடிகளை பிடுங்குகிறேன்.'ஒவ்வொருவரும் தங்கள் வீட்டருகே இருக்கும், மூலிகை செடிகளை தவிர்த்து, பூண்டு செடி எனப்படும், மூக்குத்தி செடி, முள்வேலி மற்றும் கருவேல மரம் என, தேவையற்ற மரம், செடிகளை அழித்தால், நிலத்தடி நீரை தக்க வைக்கலாம்...' என்றார்.அவரது இந்த யோசனை, மிகவும் பயனுள்ளதாக தெரிந்தது. இதை, அனைவரும் பின்பற்றலாமே!— பா.ஜெயக்குமார், வந்தவாசி.வாயில் முத்தம்!என் பக்கத்து வீட்டில், குடியிருக்கும் இளம் தம்பதியருக்கு, இரண்டரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. அந்த இளம் தாய், தன் குட்டி மகனுக்கு, வாயில் முத்தம் கொடுப்பதை பார்த்து, அதிர்ந்து போனேன்.அப்பெண்ணை தனியே கூப்பிட்டு, 'ஒரு தாய், தன் மகனுக்கு வாயில் முத்தம் கொடுப்பது, நம் கலாசாரத்துக்கு எதிரானது. தொடர்ந்து, வாயில் முத்தம் கொடுப்பதன் மூலம் குழந்தையின் உணர்ச்சி தூண்டப்பட்டு, பின்னாளில் தவறான வழிக்கு போக வாய்ப்பிருக்கிறது; தவிர, வாயில் கொடுக்கப்படும் முத்தத்தால் நோய் பரப்பும் கிருமிகள் பரவ வாய்ப்பிருக்கிறது...' என்றேன்.என் அறிவுரையை கேட்டு அந்த இளம் பெண், மகனுக்கு வாயில் முத்தம் கொடுப்பதை நிறுத்திக் கொண்டாள்.வேறு யாராவது இது போன்று நடந்து கொண்டிருந்தால், இக்கடிதம் படித்தாவது திருந்தட்டும்.— ஆர்.ஜெயமாலினி, மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !