இது உங்கள் இடம்!
இது ஒரு சேவையா?வெளிநாட்டில் பணிபுரியும் என் தம்பிக்கு, வரன் தேடி, தனியார் திருமண தகவல் மையம் ஒன்றிற்கு சில வாரங்களுக்கு முன் சென்றிருந்தோம். அங்கே, எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு, 'சிறப்பு' கவனம் செலுத்துவதாகவும், பதிவுக் கட்டணம் குறைவு என்றும் கூறியிருந்தனர்.எங்களுக்கு தகுந்த சில வரன்களை தேர்வு செய்து, அப்பெண்களின் விவரம் கேட்ட போது, 'நீங்க, வெளிநாட்டுல வேலைன்னு சொல்ல வேணாம்; சொந்த வீடு, சுயதொழில் என்று சொல்லுங்க; பையனின் புகைப்படத்தை, 'கிராபிக்ஸ்' செய்து, இன்னும் அழகாக, இளமையாக கொண்டு வாங்க...' என்று, பல தந்திர யுக்திகளை எங்களிடம் கூறினர்.நம்மிடம் கூறுவது போல தானே பெண் வீட்டாரிடமும் கூறியிருப்பர் என்று எண்ணி அதிர்ச்சியடைந்தோம். மேலும், அருகில் இருந்த மற்றொருவர், இன்னொருவரிடம் பேசியதும் காதில் விழுந்தது...'மனசுக்கு பிடிக்கலன்னா, கெட்ட கனவா நினைச்சு, பிரிஞ்சிட சொல்லுங்க; உங்க பொண்ணுக்கு வேற இடம் அமையாமலா போயிடும். நமக்கு தெரிந்த பெரும்புள்ளியை வைச்சு, நகைய நாங்க மீட்டுத் தர்றோம்...' என்று, கட்டப்பஞ்சாயத்து செய்ததைக் கண்டு, மிரண்டு போனோம்!கிடைக்கும் கமிஷனுக்காக, எதையும் செய்யத் துணியும், இதுபோன்ற திருமண தகவல் மையங்கள் மீது கவனமாக இருங்கள்!— பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.இப்படித்தான் செய்யணும்!கடந்த ஆண்டு, பள்ளி கோடை விடுமுறையின் போது, என் மைத்துனர் பையனை, என் வீட்டுக்கு அழைத்து வரச் சென்றிருந்தேன்.மைத்துனரிடம் விடை பெற்று கிளம்பும் போது, அவர் என்னிடம் ஒரு துண்டு பேப்பரை கொடுத்தார். அதில், பையனுக்கு என்னென்ன உணவுகள் பிடிக்கும், எந்தெந்த உணவுகள் ஒத்துக் கொள்ளாது, தலைவலி, காய்ச்சல் போன்றவற்றிற்கு அலர்ஜியை ஏற்படுத்தும் மருந்து மாத்திரைகள் எவை என்று, எல்லாமே தெளிவாக எழுதப்பட்டிருந்தது.பத்து, பதினைந்து நாள் தங்கப் போகும் தன் மகன், எந்தச் சிரமத்துக்கும் ஆளாகக் கூடாது என்ற கரிசனம், அச்சீட்டைப் படித்த போது புரிந்தது.விடுமுறைக்கு, குழந்தைகளை உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைப்போர், என் மைத்துனரின் இச்செயலை பின்பற்றினால், நன்றாக இருக்குமல்லவா!— மருத.வடுகநாதன், வேதாரண்யம்.இதுவல்லவோ பொறுப்புணர்ச்சி!சமீபத்தில், உறவினரின் வீட்டுக்கு செல்லும் போது, ஒரு பள்ளியின் அருகில், சிறு வேனில், தர்பூசணி பழங்கள் விற்றுக் கொண்டிருந்தனர். பழம் வாங்கலாம் என நினைத்து, அருகில் சென்ற போது, பள்ளி மாணவர்கள் போல் இரண்டு சிறுவர்கள் பழங்கள் விற்பதை கண்டு ஆச்சரியமடைந்து, அவர்களைப் பற்றி விசாரித்தேன். அவர்கள் சொன்ன பதில், என் மனதை, மிகவும் நெகிழச் செய்தது.அவர்கள் இருவரும் அருகிலுள்ள அரசு பள்ளியில் படிக்கும் சகோதரர்கள்; அப்பா, கட்டட வேலை மற்றும் 'பெயின்ட்' அடிக்கும் தொழிலாளி; அம்மா வீட்டு வேலை செய்பவர். வாரம் முழுவதும், உழைத்து சம்பாதித்து, மகன்களை காப்பாற்றி, படிக்க வைக்கும் தங்கள் பெற்றோருக்கு ஒரு நாளாவது ஓய்வு கொடுக்கலாம் என்று, இந்த சகோதரர்கள், விடுமுறை நாட்களில், இது போன்று வியாபாரம் செய்வதாக கூறினர்.அவர்களது உயர்ந்த நோக்கத்தை தெரிந்து கொண்ட கட்டட கான்ட்ராக்டர் ஒருவர், குறைந்த வாடகைக்கு, இவர்களுக்கு வேன் கொடுத்து உதவுகிறார். இதுபோன்ற பிள்ளைகள் இருந்து விட்டால், முதியோர், பிச்சைக்காரர்களாக மாற மாட்டார்கள்.— கே.சசிகுமார், சென்னை.நித்திரை போன யாத்திரை!மூன்று மாதங்களுக்கு முன், உறவினர்களுடன் வடமாநிலங்களுக்கு சுற்றுலா சென்றிருந்தேன். பத்ரிநாத், கேதார்நாத் மற்றும் ஹரித்துவார் என திட்டமிட்டிருந்தோம். எங்களுடன் வந்த இளம்பெண் ஒருவர், சரியான, 'செல்பி' பைத்தியம். போகும் இடம் எல்லாம், 'செல்பி' எடுத்து, யாருக்கோ அனுப்பிக் கொண்டிருந்தாள். வழக்கம் போல், திரிவேணி சங்கமம் கூடும், முப்பெரி அணையை ஒன்றிணைக்கும் இடத்தில், 'செல்பி' எடுக்க முயன்ற போது, ஆற்றில் தவறி விழுந்து விட்டாள்.உடனே, நாங்கள் கூக்குரலிட்டு, எப்படியோ அவளை காப்பாற்றி, டில்லி கொண்டு வந்து, மேற்கொண்டு சிகிச்சை அளிக்க, இரு நாட்கள், எங்கள் அனைவரின் நித்திரையும் போய் விட்டது. பின், ஒரு வழியாக, அவளுக்காக, எங்கள், 'புரோகிராமை' குறைத்து, விரைவில் ஊர் வந்து சேரும்படி ஆயிற்று.செல்பி பிரியர்களே... எங்காவது நாலு பேருடன் சேர்ந்து பொது இடங்களுக்கோ, புனித யாத்திரைக்கோ போகும்போது, உங்கள், 'செல்பி' பித்தத்தை கட்டுப்படுத்தி வையுங்கள். அதில், ஏதாவது கோளாறு ஏற்பட்டால், நீங்கள் மட்டுமல்ல, கூட வரும் அனைவரும், கடுமையாக பாதிக்கப்படுவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.— சி.எஸ்.ராஜேஸ்வரி, குனியமுத்தூர்.