உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

தனிமையில் தவிக்க விடாதீர்கள்! கடந்த, தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன், பக்கத்து வீட்டு பெரியவர், என்னை காண வந்தார். நான், அவரை வரவேற்று பேசுகையில், 'எனக்கு ஒரு உதவி செய்வீங்களா தம்பீ...' என கேட்க, 'சொல்லுங்க...' என்றேன்.'இந்த வருஷ தீபாவளிக்கு, நீங்க உங்க குடும்பத்தோடு எங்க வீட்டுக்கு வந்து, கங்கா ஸ்நானம் செய்து, லட்சுமிய கும்பிட்டு, புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து, எங்களோட தீபாவளி கொண்டாடணும்...' என்றவர், 'என்னோட ஒரே மகன் கல்யாணமாகி, வெளிநாட்டில் செட்டிலாகி, ஏழெட்டு வருஷமாச்சு. ஒரு தடவை கூட, குடும்பத்தோட இங்க வந்து தீபாவளி கொண்டாடல; எங்களையும் அவன் இருக்கற இடத்துக்கு கூப்பிடல. போன்ல தீபாவளி வாழ்த்து சொல்றதோட சரி... விசேஷ நாள்ல ஊரே கோலாகலமா இருக்கறப்ப, எங்க வீடு மட்டும் வெறிச்சோடி இருக்கு... ஏதோ, நீங்க வந்து கொண்டாடினா, என் மகனும், மருமகளும், பேத்தியும் வந்து கொண்டாடின மாதிரி மனசுக்கு ஒரு ஆறுதல் கிடைக்கும்...' என்றார்.அவர் விருப்பத்தை நிறைவேற்ற, அவர் வீட்டுக்கு சென்றோம்.ஆண்டு முழுதும் பெற்றோரை தனியாக தவிக்க விட்டாலும், பண்டிகை நாட்களிலாவது அவர்களுடன் சேர்ந்து கொண்டாடி, மகிழ்விக்க வேண்டும். இதை, 'துாரத்தில் உள்ள பிள்ளைகள்' உணர்வரா?-கே.ஜெகதீசன், கோவை.காலி மனையை வீணாக்காதீர்! வெளியூரில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த போது, 'தான் புதிதாக வாங்கியிருக்கும் இடத்தை பார்த்து வரலாம்...' எனக் கூறி, அழைத்துச் சென்றார்.அவர் வீட்டிலிருந்து, 1 கி.மீ., துாரத்தில், வானம் பார்த்த பூமியாக இருந்தது, அந்த இடம். 'இன்னும் ஐந்து ஆண்டுகளில், இந்த இடம், 'டெவலப்' ஆகிடும்; அதன்பின், வீடு கட்டி, வாடகைக்கு விடும் ஐடியாவில் இருக்கேன்...' என்றார். அந்த இடத்தை பார்த்தவுடன், அதிக தண்ணீர் தேவைப்படாத முருங்கை மற்றும் செவ்வரளி செடிகளை வைத்தால், வீட்டிற்கு பயன்படும். தேவையில்லாத களைகளும் வளராது என்று தோன்ற, என் எண்ணத்தை அவரிடம் சொன்னேன்.'நல்ல ஐடியா...' என, பாராட்டி, மரம் நடும் பணியில் இறங்கி விட்டார்.மூன்று மாதங்களுக்கு பின், எனக்கு போன் செய்து, நான் கொடுத்த ஐடியா நல்ல பலன் அளிப்பதாகவும், பக்கத்தில் உள்ள நபர்கள் முருங்கைக்காய், முருங்கை கீரையை விலைக்கு வாங்கிச் செல்வதாகவும், செவ்வரளி பூவை, பூஜைக்கு பயன்படுத்துவதாகவும் கூறி, மகிழ்ந்தார்.காலி இடங்களை வைத்திருப்போர், இதுபோன்று தண்ணீர் அதிகம் தேவைப்படாத மரங்களை நட்டு பயன் பெறுவதுடன், ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து நிலத்தையும் காப்பாற்றலாம்! — மகேஷ் அப்பாசுவாமி, கன்னியாகுமரி.நல்ல யோசனை!சமீபத்தில், கேரளாவுக்கு சுற்றுலா சென்றிருந்தேன். அங்குள்ள பெரும்பாலான வீடுகளில், காம்பவுண்டு கேட்டில், பால் பையின் அருகில் ஒரு, பி.வி.சி., பைப், படுக்கை வசமாக கட்டி தொங்கவிடப்பட்டிருந்தது. ஒரு அடி நீளமுள்ள அந்த பைப், ஒவ்வொரு வீட்டிலும் மாறுபட்ட சுற்றளவில் இருந்தது. இது பற்றி கேரள நண்பர் ஒருவரிடம் விசாரித்தபோது, 'கேரளாவில் பெரும்பாலான நாட்களில் மழை பொழிவதால், பேப்பர் போடுவோர், அதை, இந்த பைப்பினுள் சொருகிச் சென்று விடுவர்; அதனால், பேப்பர் நனைவதில்லை. 'பேப்பர் மட்டும் வாங்குவோர், சிறிய சுற்றளவுள்ள பைப்பும், வார இதழும் சேர்த்து வாங்குவோர் கொஞ்சம் பெரிய சைஸ் பைப்பும் தொங்க விட்டிருப்பர். 'மழைக் காலங்களில், சென்னையிலும் இது போன்று செய்தால், பேப்பரும், வார இதழும் நனையாமல் படிக்கலாம்...' என்றார். இது, நல்ல யோசனை தானே! — ரா.ஸ்ரீதரன், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !