இது உங்கள் இடம்!.
விடுமுறையை பயனுள்ளதாக்க...பிளஸ் 2, பொதுத் தேர்வு எழுதியுள்ள என் நண்பரின் மகள், பேக்கரி வகை உணவுப் பொருட்கள், ஊறுகாய், ஜாம் மற்றும் சர்பத் போன்றவற்றை தயாரிக்கும் நிறுவனத்தில், வேலை செய்வதை பார்த்தேன்; உடன், சில மாணவியர் இருந்தனர். 'விடுமுறையை ஜாலியா என்ஜாய் செய்யாம, ஏன் இங்கு வேலைக்கு வந்தீங்க...' என்று கேட்டேன்.அதற்கு நண்பரின் மகள், 'நாங்க வேலை செய்ய வரலை; விடுமுறையில், ஏதாவது சிறு தொழில்களை கற்றுக்கொள்ள முடிவெடுத்து, என் தோழியின் அப்பா உதவியுடன், காளான் வளர்ப்பு முறை, ஜாம், சர்பத், ஊறுகாய் தயாரிப்பு மற்றும் பேக்கரி உணவுப் பொருட்கள் தயாரிப்பு முறை பற்றி தெரிந்து கொள்ளவும், பயிற்சி பெறவும் வந்துள்ளோம்... இதன்மூலம், வீட்டிலேயே சிறிய அளவில் தயாரித்து, விற்பனை செய்து, கல்லுாரி படிப்புக்கு தேவையான பணத்தை சேர்த்து விடுவோம்...' என்றாள். காலத்தை வீணாக்காமல், வித்தியாசமான, விடுமுறை கால பயிற்சியை மேற்கொள்ளும் இம்மாணவியரின் முயற்சியை, பாராட்டினேன்!தேர்வெழுதிய பின், அடுத்து என்ன படிக்கலாம் என்பதை அறிந்து கொள்ள, பல்வேறு பயிற்சி மையங்களில் மாணவ - மாணவியர் குவிந்து வருவதை பார்க்க முடிகிறது. இம்மாணவியரோ, வாழ்க்கைக்கு உதவும் வகையில் கைத்தொழிலை கற்பது, மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்கிறது.பெற்றோரே... விடுமுறை நாளில், இதுபோன்ற பயிற்சி வகுப்புகளுக்கு, உங்கள் பிள்ளைகளையும் அனுப்பி வையுங்களேன்!— சோ.ராமு, திண்டுக்கல்.சுயதொழில் செய்யலாமே!பேருந்து நிலையத்தில், என் நண்பரின் மகனை சந்தித்தேன்; உயர் அதிகாரி மாதிரி, 'டிப் டாப்'பாக டிரஸ் அணிந்திருந்தான். அதனால், 'எந்த ஆபீஸ்ல வேலை பார்க்கறே?' என கேட்டேன்.அதற்கு அவன், 'எந்த ஆபீஸ்லயும் வேலை பார்க்கல. பி.இ., படிச்சு முடிச்சதும், ரெண்டு, மூணு கம்பெனி ஏறி இறங்கினேன்; ஒண்ணுமே சரிவரல. சரி, சுயமா தொழில் செய்வோம்ன்னு இறங்கிட்டேன். ரெண்டு கறவை மாடு இருக்கு, டீ கடைக்கு, தினமும், 10 லிட்டர் பால் கொடுக்கறேன்... 10 ஆடு வளர்க்கறேன்... ஆண்டுக்கு, 50 ஆயிரம், 60 ஆயிரத்துக்கு கிடா வித்துடுவேன். ஆடு, மாடு மூலமா கிடைக்கிற எருவை பயன்படுத்தி, கத்தரி, வெண்டை, பாகல்ன்னு சாகுபடி பண்றேன்; அதுலயும் கணிசமா பணம் கிடைக்குது. யாருகிட்டயும் கை கட்டி பதில் சொல்லாம, நல்லா உழைக்கிறேன்; கவலை இல்லாம இருக்கேன்...' என, மகிழ்ச்சியோடு கூறினான்.படித்து முடித்து, வேலைக்கு அலைந்து கொண்டிருப்போர், இந்த இளைஞனை போல் சுயதொழில் செய்து, முன்னேற்றம் அடைய முயற்சிக்கலாமே!— வி.அமுதன், அகஸ்தியன்பள்ளி.புதுமையான தகவல் மையம்!எங்கள் ஊருக்கு அருகிலுள்ள திருமண தகவல் மையத்தில், வரன் பதிவு செய்ய வருவோரிடம், அவர்களின், பயோடேட்டா மற்றும் ஜாதகம் ஆகியவற்றை பதிவு செய்வதுடன், ஆண் - பெண், இருபாலரிடமும், ரத்தம் எடுத்து, பரிசோதனைக்கு அனுப்புகின்றனர். அதில், உடல் ரீதியாக என்னென்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பதை அறிந்து, அதற்கு தகுந்தபடி வரன்களை அறிமுகம் செய்து வைக்கின்றனர். மோசமான பிரச்னையாக இருந்தால், பிறருக்கு தெரியாதபடி, அவர்களின் பதிவை ரத்து செய்கின்றனர்.இதன் மூலம் சிறந்த தம்பதியரை உருவாக்கி வரும், வித்தியாசமான இத்திருமண தகவல் மையம், அப்பகுதி முழுவதும் பிரபலம். மற்ற திருமண தகவல் மையங்களும் இவ்வழியை பின்பற்றினால், சமுதாயத்திற்கு நல்லது!— ச.கண்ணன், வத்தலக்குண்டு.