இது உங்கள் இடம்!
சொர்க்கமே என்றாலும்...நண்பர் ஒருவர், சமீபத்தில் சிங்கப்பூர், மலேஷியா போன்ற வெளிநாடுகளுக்கு, இன்ப சுற்றுலா சென்று வந்தார். வெளிநாட்டு பொருட்கள் வாங்கி வந்து பரிசளிப்பார் என்று ஆவலோடு எதிர்பார்த்த நட்பு வட்டத்துக்கு பெருத்த ஏமாற்றம்.காரணம், தன் பயண அனுபவங்களை புகைப்படத்துடன், குறுந்தகடு ஒன்றில் பதிவு செய்து, பரிசாக கொடுத்தார். நண்பரின் செயலை கண்டு, முதலில் பிறர் கேலி செய்தாலும், அவர் கூறிய பதிலால் வாயடைத்து போயினர்.'சிடி'யில் சிங்கப்பூர், மலேஷியாவின் இயற்கை வளம், தொழில், நகரமைப்பு, சுகாதாரம், அந்த நாடு வளர்ந்த விதம், மக்களின் சுறுசுறுப்பு, பார்ப்பதற்குரிய இடங்கள், உணவு விடுதிகள் ஆகியவை பற்றி நண்பர் தெளிவாக விளக்கியிருந்தார். அத்துடன், 'அங்கு விற்கப்படும் பொருட்கள் பெரும்பாலும் நம் நாட்டில் இருந்து ஏற்றுமதி ஆவது தான் எனவும், சுற்றுலா செல்லும் நம் மக்கள், வெளிநாட்டு மோகத்தில் அங்கு பொருட்களை வாங்கி, அவர்களின் பொருளாதாரத்தை வளர்க்கின்றனர்...' என்றும் தெளிவாக கூறினார்.மேலும், பாரின் சோப்பு, சென்ட், ஷாம்பு என்று வாங்கி வந்தாலும், அதன் வாசனை, சிலருக்கு பிடிக்காமல் போகும். எனவே, எக்காலத்திற்கும் ஏற்ற நினைவு பரிசாக, தன் பயண அனுபவங்களை, 'சிடி'யில் கொடுத்ததாக கூறிய நண்பரின் முயற்சியை பாராட்டினோம்!—எம்.விக்னேஷ், மதுரை.மனம் இருந்தால்...தைக்க கொடுத்திருந்த சல்வாரை வாங்க, தையல் கடைக்கு சென்றிருந்தேன். திரும்பும் போது, 'அக்கா...' என்றொரு குரல். திரும்பி பார்த்தால், 10 வயது பெண், கையில் சுருக்கு பைகளை வைத்தபடி, கடையிலிருந்து வெளியே வந்தாள்.'கடைக்காரர் தைத்த பின், துாக்கியெறியும் துணியில் தைச்சு இருக்கேன்கா. பிரிஜ்ஜில் காய்கறி வைக்க வசதியாக இருக்கும்...' என்றாள்.விசாரித்ததில், அந்த கடை வாசலை பெருக்கி, சுத்தம் செய்யும் பணி பெண்ணின் மகளான அவளுக்கு, ஓய்வு நேரத்தில் கடைக்காரர், தையல் கற்று கொடுத்து வருகிறார். இந்த பைகளை விற்று, அப்பெண், தன் படிப்பு தேவைகளை பூர்த்தி செய்து கொள்வது, தெரிந்தது.'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்ற பழமொழிக்கேற்ப, வெட்டி எறியப்பட்ட துணிகளை வியாபாரமாக்கிய அப்பெண்ணின் உழைப்பும், சாமர்த்தியமும் என்னை ஆச்சரியப்படுத்தியது. மேலும், ஏழை பெண்ணுக்கு, ஏதோ உதவினோம் என்றில்லாமல், சம்பாதிக்கவும் வழி சொல்லித் தந்த தையல்காரரின் நல்ல உள்ளமும் புரிந்தது.அதிக பண செலவுமில்லை, பிளாஸ்டிக் கவர்களை தவிர்க்கவும் வாய்ப்பு மற்றும் ஏழை பெண்ணுக்கும் பயனுள்ள தையல் பயிற்சி. ஒரே கல்லில் எத்தனை மாங்காய்கள்.வியப்புடன் அப்பெண்ணையும், தையற்காரரையும் பாராட்டி, தேவைப்பட்ட பைகளை வாங்கி வந்தேன்.- சாரதா ராம், சென்னை.எத்தனை விதமாக தான் ஏமாற்றுவரோ!சமீபத்தில், என் தோழியை பார்க்க போன போது, இயல்புக்கு மாறாக சோர்வாக இருந்தாள். 'ஏன்...' என்று கேட்டேன். 'போன வாரம் நானும், என் கணவரும் துக்கத்துக்கு சென்று, காரில் திரும்பிக் கொண்டிருந்தோம். இரவு நேரம், நான்கு வழி சாலை ஓரத்தில், மூன்று பேர், கையை நீட்டி, காரை நிறுத்தச் சொல்லி வேண்டினர். அதில், இரண்டு பேர் ஆண்கள் மற்றும் ஒரு நிறைமாத கர்ப்பிணி தோற்றத்தில், இளம் பெண் நின்றிருந்தார். 'பரிதாபப்பட்டு காரில் ஏற சொன்னோம். 'அடுத்த ஊரில் இறக்கி விட்டால் போதும்...' என, சொல்லியபடி அமர்ந்தனர். சற்று நேரத்தில், வந்தவர்களில் ஒருவன், கர்ணகொடூர குரலில், 'மரியாதையா நகைகளை கொடுங்க, இல்லே...' என, மிரட்டியபடி, என் கழுத்திலும், கணவர் கழுத்திலும் துணியை சுற்றி நெருக்கினார்.'நிலைமையை புரிந்து, போட்டிருந்த செயினை கழற்றிக் கொடுத்ததும், காரை நிறுத்தச் சொல்லி மாயமாய் மறைந்தனர். நல்லவேளை, துக்க வீட்டுக்கு சென்றதால், மெல்லிய செயின் ஒன்று மட்டுமே போட்டிருந்தேன்...' என, நடந்த கதையை சொல்லி முடித்தாள்.'போனது போகட்டும் விடு. இதுவே, ஒரு திருமணத்திற்கு செல்லும்போது நடந்திருந்தால், உன் நகைகள் அத்தனையும் பறிபோய் இருக்குமே... எப்படியோ, தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சு...'ன்னு, ஆறுதல் கூறினேன்.இனி, நிஜமாகவே, யாராவது உதவி கேட்டால் கூட, செய்ய தயங்குவோம். ஏமாற்றுவதற்கு எத்தனை விதமாக நடிக்கின்றனர்.— எஸ்.மணிமேகலை, திருவேடகம்.