இது உங்கள் இடம்!
வாயால் வாழ்க்கையை தொலைத்த பெண்!நண்பருக்கும், அவர் மனைவிக்கும் நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. அவர்களுக்கு, 10 வயதில் ஒரு மகன் உண்டு. அவனுக்கு உடல்நிலை சரியில்லாமல், அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதேசமயம், உடல் நிலை சரியில்லாத தாயை, அதே மருத்துவமனையில், 'அட்மிட்' செய்துள்ளார், ஒரு பெண். நண்பனின் மனைவி, அப்பெண்ணிடம் தங்களின் குடும்ப பிரச்னைகளை விலாவரியாக கூறியுள்ளார்.கணவனுக்கும், மனைவிக்கும் இடையே இருந்த பிரச்னையைத் தெரிந்த அந்த பெண், நண்பனின் மொபைல் போன் எண்ணை தெரிந்து, அவனை தொடர்பு கொண்டு, தன் வலையில் சிக்க வைத்து விட்டாள்.இப்போது, என் நண்பர் வீட்டுக்கே வருவதில்லை, தன் மனைவிக்கு பணமும் தருவதில்லை. குடும்பம் நடத்த, சிரமப்படுகிறார். நண்பரும், அந்த பெண்ணும், தனி வீடு எடுத்து, 'ஜாலி'யாக இருந்து வருகின்றனர். ஆகவே, யார் என தெரியாமல், பிறரிடம் தன் குடும்ப விஷயங்களை கூறி, ஆபத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்!— கே.சசிகுமார், நாகப்பட்டினம்.மன கசப்புக்கு மருந்து!மகள் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக, என்னையும் அழைத்து போனார், நண்பர். முதலில் யார் யாருக்கு கொடுக்க வேண்டும் என்று, பட்டியல் போட்டார். அதில், விரோதம் பாராட்டிய முன்னாள் நண்பர்களின் பெயர்கள் இருந்தன.நண்பரின் அணுகுமுறையில் வியந்த நான், அதுபற்றி கேட்டேன். அதற்கு, 'பகையாய் இருப்பவர்களை அதே மன நிலையில் விட்டு வைப்பது, நமக்கும், அவருக்கும் நல்லதல்ல. திருமணம் போன்ற விழாக்களில், பிரிந்தவர் கூடும் விழாவாக, 'வியூகம்' அமைத்து, எதிராளியை வசப்படுத்திக் கொள்ள வேண்டும். மனக் கசப்புக்கு மா மருந்து கொடுக்க தான், இந்த அழைப்பிதழ் வைத்தியம்...' என்று கூறினார்.அவர் கூறியபடியே அழைப்பிதழ் கொடுக்கும்போது, ஆண்டு கணக்கில் இருந்த நெருடல்கள், நொடிப் பொழுதில் விலகிப் போனதை, கண்கூடாக பார்க்க முடிந்தது.- எம்.என்.ஷெரீப், கடலுார்.இப்படியும் புகைப்படம் கொடுக்கலாம்!ச மீபத்தில், ஒரு திருமண வீட்டிற்கு சென்றிருந்தேன், அங்கு, 'ட்ரோன்' முறையில் புகைப்படம் எடுத்ததால், தாலி கட்டும் முக்கிய நிகழ்வுகளை, புகைப்படக்காரர் மறைக்காமல், தெளிவாக காண முடிந்தது. அதைவிட இன்ப அதிர்ச்சி ஒன்றை கொடுத்தனர், திருமண வீட்டார்.சாப்பிட்டு முடித்து வந்தவர்களுக்கு, தாம்பூலம் கொடுக்கும் போது, திருமண நிகழ்ச்சிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை, திருமண நாள் மற்றும் மணமக்கள் பெயரையும் அச்சிட்டு வைத்திருந்தனர். 'நீங்கள் இருக்கும் புகைப்படத்தை மட்டும் எடுத்துக் கொள்ளவும்...' என்றார், திருமண வீட்டார் ஒருவர்.சில, 'குரூப்' புகைப்படங்களை, 'டிஸ்பிளே'யாக வைத்து, அதற்கு எண் குறிப்பிட்டிருந்தனர். புகைப்படம் கிடைக்காதவர்கள், தங்களுக்கு வேண்டிய புகைப்படத்தை குறிப்பிட, 'டிஸ்பிளே'யில் உள்ள எண் மற்றும் தங்களது மின்னஞ்சல் முகவரியை எழுதி செல்ல, நோட்டு வைத்திருந்தனர். திருமண வீட்டாரிடம் இதுபற்றி கேட்ட போது, 'திருமணத்திற்கு வரும் நட்பு, சொந்தங்களுக்கு, எங்கள் வீட்டு நிகழ்ச்சியின் நினைவுகளை, பரிசாக பாதுகாக்க எடுத்த சின்ன முயற்சிதான் இது...' என்றார்.மண வீட்டாரை பாராட்டி விட்டு வந்தேன். - எம்.விக்னேஷ், மதுரை.