உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

உங்கள் மகன் சிகரெட் பிடிக்கிறானா?என் நண்பரை சந்திக்க, அவரது வீட்டிற்குச் சென்றிருந்தேன். அவருடன் பேசிக் கொண்டிருந்த போது, வெளியில் சென்றிருந்த அவரது, 22 வயது மகன், வீட்டிற்குள் நுழைந்தான். தன் தந்தையைக் கண்டதும், தலையைக் குனிந்தவாறு, நைசாக உள்ளே சென்று விட்டான்.நண்பரை, புரியாமல் பார்த்தேன் நான். அவர், மெதுவான குரலில், 'அவன் சிகரெட் பிடித்து விட்டு வந்திருக்கிறான். பக்கத்தில் வந்தால் தெரிந்து விடும் என்று, பயந்து ஓடுகிறான்...' என்றார்.'அவன் வயதுப் பையன்கள் சிகரெட் பிடிப்பதெல்லாம் மிகவும் சாதாரண விஷயமாகி போன இந்தக் காலத்தில், கண்டு கொள்ளாமல் விட்டுவிட வேண்டியதுதானே...' என்றேன்.அவர் சிரித்துக் கொண்டே, 'நான் திட்டுவேன் என்பதற்காக, அவன் சிகரெட் பழக்கத்தை விடப் போவதில்லை. அது, எனக்கும் தெரியும். அவனது சிகரெட் பழக்கத்தை, நான் ஏற்றுக் கொண்டதாகத் தெரிந்து கொண்டால், அவனுக்கு மேலும் தைரியமாகி, ஒருபடி மேலே போய், நாளையே மது அருந்திவிட்டு வர கூட தைரியம் பிறக்கும்.'சிகரெட் பழக்கத்தையே நான் கண்டிப்பதாகக் காட்டிக் கொண்டால், அவனால் வேறு கெட்ட பழக்கத்தைச் ஆரம்பிக்க அதிக பயம் இருக்கும். இதனால், அவனது கெட்ட பழக்கம் சிகரெட்டோடு மட்டும் நிற்கும்...' என்றார். அவரது கண்டிப்பு, பாராட்டத் தகுந்ததுதான். — அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.மெல்லக் கொல்லும் விஷம்!சென்ற வாரம் நண்பனின் வீட்டிற்கு சென்றிருந்தேன். வீட்டில் இருந்த பிரிட்ஜில், கூல் டிரிங்க்ஸ் கடையையே வைத்திருந்தான். வியர்வை வழிய சென்றிருந்த என்னிடம், 'மிராண்டா... செவன் அப்... கோக்... என்ன சாப்பிடுறே?' என்றான்.பொதுவாக, எனக்கு கூல் டிரிங்க்ஸ் பழக்கம் இல்லை என்பதால், 'ஒரு தம்ளர் தண்ணீர் கொடு போதும்...' என்ற என்னை, என் நண்பனும், அவன் மனைவியும் வினோதமாக பார்த்தனர்.'என்ன ஆளுப்பா நீ... கூல் டிரிங்க்ஸ் வேண்டாம்ன்னு சொல்ற... இது இல்லாம எங்களால இருக்க முடியாதுப்பா. எங்க வீட்டு பசங்களே ஒரு நாளைக்கு ரெண்டு, மூணு லிட்டர் காலி பண்ணிடுவாங்களே...' என்று, பெருமையாக சொன்னான் நண்பன்.நான் பதிலுக்கு, 'இதெல்லாம் நல்லதில்லையே... உடம்பை கெடுத்துடும். இதற்காக செலவழிக்கிற பணத்திற்கு, வெயிலுக்கு குளிர்ச்சியும், உடம்புக்கு ஊட்டமும் கொடுக்குற மோர், இளநீர்ன்னு வாங்கி வைக்கலாமே...' என்றேன்.சட்டென்று நண்பனின் மனைவி, 'அந்த பழக்கமெல்லாம் எங்களுக்கு கிடையாது. இது, எங்களுக்கு பழகிடுச்சு. சாப்பாடு இல்லாமல் கூட இருந்துடுவோம்; ஆனால், கூல்டிரிங்க்ஸ் குடிக்காம எங்களால இருக்க முடியாது...' என்று, என் முகத்தில் அடித்த மாதிரி கிண்டலாக பதில் சொன்னார்.இங்கே அறிவுரை சொல்லி ஆகப் போவது ஒன்றுமில்லை என்று, அமைதியாய் இருந்து விட்டேன்.கூல்டிரிங்க்ஸ் பழக்கமும், ஒரு வகையில் நாகரிக மோகம்தான்; மெல்லக் கொல்லும் விஷம் தான். இதற்கு பழகி விட்டவர்கள், என்றுமே அதற்கு அடிமைதான். இந்த அடிமை வாழ்வு தேவையா நமக்கு?— விஜய நிர்மலன், சென்னை.பார்க்கிங் கட்டணமா, சுங்க வரியா?சினிமா தியேட்டர்களிலும், மால்களிலும், அரசு மருத்துவமனைகளிலும், இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு, பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சில இடங்களில் இந்த கட்டணம், மயக்கத்தை வரவழைக்கும்; அது வேறு விஷயம். ஆனால், இப்படி பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் இடங்களில் கொடுக்கப்படும் ரசீதுகளில் உள்ள நிபந்தனைகள் நம்மை உறைய வைக்கும்.சமீபத்தில், சென்னை அரசு பொது மருத்துவமனையில் வழங்கப்பட்ட பார்க்கிங் கட்டண ரசீதில், 'வண்டியை நிறுத்துவது, வண்டி உரிமையாளர்களின் சொந்தப் பொறுப்பு. வண்டி திருட்டு போனாலோ, பழுதடைந்தாலோ, அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல...' என, குறிப்பிட்டிருந்தது.உரிமையாளர்களின் சொந்தப் பொறுப்பில் வண்டியை நிறுத்துவதற்கும், வண்டி காணாமல் போனால் நிர்வாகம் பொறுப்பல்ல என்று கூறுபவர்கள், பார்க்கிங் கட்டணம் மட்டும் ஏன் வசூலிக்கின்றனர்?ஐ.டி., காரிடார் சாலையில் வாகனம் நுழைவதற்கு, 'சுங்க வரி' வசூலிப்பதைப் போன்று, 'பார்க்கிங் கட்டணம்' என்பதை, 'நுழைவு வரி' என்று குறிப்பிடலாமே!— அ.முத்துக்குமார், சூளைமேடு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !