இது உங்கள் இடம்!
கவனம் மக்களே...சமீபத்தில், ஒரு பிரபல துணிக்கடையில் துணிகள் வாங்கி, 'பில் கவுன்டரில்' பணம் கொடுக்கும்போது, 2,050 ரூபாய் கட்ட வேண்டி இருந்தது. நான், நான்கு 500 மற்றும் ஒரு, 100 ரூபாய் கொடுத்தபின், கவுன்டரில் இருந்த பெண், 'பில்'லில், 'கேஷ் பெய்டு' என்று, முத்திரை பதித்து கொடுத்தாள்.'மீதி, 50 ரூபாய் எங்கே...' என்று கேட்டதும், 'நீங்க கரெக்டா தான் கொடுத்தீங்க...' என்று சாதித்தாள். 'என்னிடம், 500ம், 100 ரூபாயும் தான் இருந்தது. 50 ரூபாய் இல்லை...' என்று அழுத்தமாகச் சொன்னேன். 'மேடம், தயவுசெய்து இதைப் பெரிது படுத்தாதீங்க. நீங்க, 100 ரூபாய் கொடுத்திருந்தாலும், கம்ப்யூட்டரில், 50 ரூபாய் என்று போட்டு, 'பில்' பண்ணிட்டேன். இனி, மேனேஜர் தான் மாத்தணும். அப்படி செஞ்சா, என்னைத் திட்டி, வேலையை விட்டே துாக்கிடுவாங்க...' என்று கெஞ்சினார்.போனால் போகட்டும் என்று விட்டு விட்டேன். இது, ஒரு நவீனத் திருட்டாகவும் இருக்கலாம் அல்லது அந்தப் பெண்ணின் கவனக்குறைவாகவும் இருக்கலாம். அன்றைய கணக்கை ஒப்படைக்கும்போது, அதிகப்படியான, 50 ரூபாயை அப்பெண்தானே எடுத்துக் கொள்வாள்; அது அவளுக்கும் தெரியும்தானே.கடைகளில், 'பில்'லுக்கு பணம் கொடுத்த பின், மீதியை எண்ணிப் பார்க்காமல் வாங்கி பர்சில் வைப்பவர்கள் ஏராளம். அப்படி பலர் இருப்பதால்தான், இப்படி ஏமாற்றுவது சுலபமாகிறது. வாசகர்களே... இதைப் படித்த பின்பாவது, மீதி பணத்தை எண்ணிப் பாருங்கள். மேலும், கடை ஊழியர்கள் வேலையைக் காப்பாற்றிக்கொள்ள அவர்கள் தான் கவனமாக வேலை செய்ய வேண்டும். நம் இரக்க குணம், நம்மை ஏமாளிகள் ஆக்கிவிடக் கூடாது.- ஹேமலதா சீனிவாசன், சென்னை.மணமகனின் அசத்தல் பரிசு!நண்பர் மகனின் நிச்சயதார்த்த நிகழ்வுக்கு சென்றிருந்தேன். நிகழ்ச்சி நடக்கும் அரங்கினுள், இரு வீட்டாரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குழுமியிருந்தனர். அனைவர் முன்னிலையிலும், திருமண ஒப்பந்தம் படித்து காண்பிக்கப்பட்டு, மணமக்கள் மோதிரம் மாற்றிக் கொண்டனர்.அதன்பின், மணமகன் செய்த காரியம் தான், மணமகளை மட்டுமின்றி, விழாவில் கூடியிருந்த அனைவரையும் அசத்தியது.மணமகளின் பெற்றோர், உறவினர் மற்றும் அவரது நெருங்கிய தோழியரிடம் ரகசியமாக விசாரித்து, நீண்ட நாட்களாக அவர் வாசிப்பதற்கு தேடிக்கொண்டிருந்த, 20 புத்தகங்களை வாங்கி சேகரித்து, மணமகளுக்கு பரிசாக கொடுத்தார், மணமகன். இச்செயலால், மகிழ்ச்சியில் சிலையாக நின்றாள், மணமகள்.மனைவியாக வரப்போகிறவளின் மனமறிந்து, அவள் ஆசையை நிறைவேற்றிய மணமகனை அனைவருமே பாராட்டி மெச்சினர். வாசகர்களே... உங்களுக்கு பிடித்தமானவர்களின் நிகழ்வில், நீங்களும் இதுபோல், அவர்கள் வாசிக்க ஆசைப்படும் புத்தகங்களை வாங்கி, எதிர்பாராத பரிசாக வழங்கி மகிழ்விக்கலாமே!- சி. அருள்மொழி, கோவை.இப்படிச் செய்யலாமே!உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியராக இருந்து பணி ஓய்வு பெற்றவன், நான். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தகங்கரையில் உள்ளது, ஓய்வூதியர் சங்கம். சமீபகாலமாக ஒரு நற்பணியை திறம்பட செய்து வருகிறார், எங்கள் ஓய்வூதிய சங்க செயலர். ஒவ்வொரு மாதமும், உடன் இரு சங்க நிர்வாகிகளை அழைத்துக் கொண்டு, ஓய்வூதியர் சங்கத்தில், அதிக வயதுடைய மூன்று உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும், வெவ்வேறு நாட்களில் நேரில் சந்தித்து பேசுகிறார்.ஓய்வூதியருக்கு, தோளில் ஒரு துண்டு போட்டு, அவருடன் சங்க நிர்வாகிகளை நிற்க வைத்து, புகைப்படம் எடுக்கிறார். பிறகு, அதை ஓய்வூதியர் சங்க, 'வாட்ஸ் ஆப்' குழுவில் பதிவிடுகிறார். வயது முதிர்ந்த ஓய்வூதியரிடம், ஒரு மணி நேரம் பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார். இதனால், வயது முதிர்ந்த ஓய்வூதியர்கள் அடையும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. பழைய நினைவுகளை பகிர்வதால், அவர்களின் மகிழ்ச்சி பன்மடங்கு அதிகரிக்கிறது. உடல் நலம் மேம்படுவதோடு, குடும்பத்தில் அவர்களின் மதிப்பு அதிகரிக்கிறது.இதேபோல, ஓய்வூதியம் பெறாத பல முதியவர்கள், வீடுகளில் இருக்கின்றனர். சமூக நலனில் அக்கறை கொண்டோர், இவர்களை சந்தித்து, நம்பிக்கை வார்த்தைகளை கூறினால், அவர்களும் மகிழ்ச்சியடைவர், நம் சமுதாயமும் மேம்படும்.ரா. வசந்தராசன், கிருஷ்ணகிரி.'155377'ன் சேவை தெரியுமா?நண்பரின் அப்பா, அரசு மருத்துவமனையில் இறந்து விட்டார். சொந்த ஊருக்கு உடலை எடுத்துச் செல்ல நிறைய செலவாகுமே என்று கவலையில் ஆழ்ந்தார், நண்பர்.அரசின், '155377' என்ற எண்ணுள்ள ஆம்புலன்ஸ் சேவை பற்றி சொல்லி, 'அப்பாவின் உடலை, உங்கள் சொந்த ஊருக்கு எந்த செலவுமில்லாமல் இலவசமாக எடுத்துச் செல்லலாம்...' என்று கூறி ஆச்சரியப்படுத்தினர், மருத்துவர்கள்.நமக்கு, '108' ஆம்புலன்ஸ் சேவை பற்றி மட்டுமே தெரியும். '155377' சேவையை பற்றி அதிகம் தெரியாது. 100 கி.மீ., வரை, இவர்கள், உடலை ஆம்புலன்சில் எடுத்துச் செல்வர். அதற்கு மேல் செல்ல வேண்டுமென்றால், ரயிலில் இலவசமாக எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்து தருவர். இறந்தவரின் உடலுடன் ஒருவர் செல்ல, அவருக்கான டிக்கெட்டும் எடுத்து தருகின்றனர்.தமிழகத்தில் மட்டுமல்ல, வெளிநாட்டில் ஒருவர் இறந்தாலும் கூட, விமான நிலையத்திலிருந்து, உயிரிழந்தவரின் உடலை அவரின் சொந்த ஊருக்கு கொண்டு செல்ல, இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். ஜெ. கண்ணன், சென்னை.