உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

புதுவிதமான வழிப்பறி!சமீபத்தில் என் சகோதரி, கோவில் திருவிழாவுக்கு சென்றிருந்தார். நல்ல கூட்டம். அப்போது, என் சகோதரியின் காலில் ஒரு ஜோடி கொலுசு தட்டுப்பட்டுள்ளது. அது, மணலில் பாதி புதைந்து, பாதி வெளியில் தெரிந்தபடி இருந்துள்ளது.சுற்றும் முற்றும் பார்த்தபடி அதை எடுத்து கையில் உள்ள பையில் போட்டுக் கொண்டாள், என் சகோதரி. இதை வெகு துாரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு வயதான பாட்டி, 'கீழே இருந்து கொலுசைதானே எடுத்தே... நான் அதை பார்த்து விட்டேன். பயப்படாதே, எனக்கு வேண்டாம். நான் கொலுசு போட மாட்டேன். ஆனால், கொலுசை நீ எடுத்துக் கொள். பாதி பணம் தந்து விடு... இது, 6,000 ரூபாய் இருக்கும்; 3,000 கொடு போதும்...' என்றாள்.உடனே, 3,000 ரூபாய் கொடுத்து விட்டு, கொலுசுடன் வீடு வந்தாள், சகோதரி. மறுநாள் ஆசையுடன் நகை கடைக்கு சென்று கொலுசை காட்டியுள்ளார்.'இது, வெள்ளி முலாம் பூசப்பட்ட கொலுசு. 30 ரூபாய் கூட பெறாது...' என்று கூறியிருக்கிறார், கடை முதலாளி. தான் ஏமாந்து விட்டோம் என, அப்போது தான் தெரிந்தது சகோதரிக்கு. வாசகர்களே... கீழே கிடக்கும் பொருட்களை எடுக்காதீர்கள். திருடர்களே பொருட்களை கீழே போட்டு விட்டு நாடகம் ஆடுகின்றனர்.— ஆர். சேஷாத்திரி, சென்னை.பணி ஓய்வுக்கு பின், சேவை பணி!என் நண்பரின் உறவினர் ஒருவர், நெடுஞ்சாலை துறையில் அதிகாரியாக இருந்து, பணி ஓய்வு பெற்றவர். அந்த அதிகாரியை சந்திக்க அழைத்துச் சென்றார், நண்பர். அது வீடா, இல்லை நர்சரி பண்ணையா என்பது போல, வீட்டுக்கு முன்புற தோட்டத்தில், விதவிதமான செடிகள் வளர்ந்து பசுமையாக காட்சியளித்தது.அதுகுறித்து அந்த அதிகாரியிடம் கேட்டேன். 'நான் பணியில் இருந்தபோது, சாலை விரிவாக்கத்திற்காக, சாலையோரம் வளர்ந்து நின்றிருந்த, பழமையான மரங்களை வேரோடு சாய்க்க வேண்டி வந்தது. என்ன தான் அது எங்கள் பணி என்றாலும், உயிர் மரங்களை வெட்டி போட்டது, என் மனதை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கியது.'என் மன உறுத்தல் தீரவும், பாரத்தை இறக்கி வைக்கவும், பணி ஓய்வு பெற்ற நாளிலிருந்தே, பலதரப்பட்ட மரக்கன்றுகளை வளர்த்து, உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அன்பளிப்பாக கொடுத்து வருகிறேன்.'அதுமட்டுமின்றி, 'ஆல், அரசு, வேம்பு, நாட்டு வாகை, புளியன், நாவல்' என, விதை பந்துகள் தயாரித்து தந்து, சாலையோரங்களிலும், வளர்க்க தோதான இடங்களிலும் விதைக்க வேண்டுகோள் வைத்து வருகிறேன்...' என்றார்.எனக்கு விருப்பமான செடிகளோடு, விதை பந்துகளையும் தந்து, எங்களை வழியனுப்பினார். பணி ஓய்வுக்குப் பிறகு, சேவையை பணியாக செய்து வருபவரை, பாராட்டிவிட்டு வந்தேன்.— ஆர்.ஜெயசங்கரன், வானுார்.ஊழியரின் நினைவாக...என் தோழியை பார்த்து வர, அருகிலுள்ள அவள் ஊருக்கு சென்றேன். செல்லும் வழியில், அவள் குழந்தைக்காக தின்பண்டங்களை வாங்க, டீக்கடையுடன் கூடிய ஒரு பெட்டிக்கடை முன், வாகனத்தை நிறுத்தினேன்.அந்த டீக்கடையில், அட்டை ஒன்றில், 'ஊழியரின் நினைவாக' என்று தலைப்பிட்டு, அதன் கீழே, 'குழந்தைகள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கையருக்கு, இன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு டீ, காபி, பால் இலவசம்...' என, எழுதப்பட்டிருந்தது.இதுபற்றி, அக்கடை உரிமையாளரிடம் வினவினேன். 'என் நம்பிக்கையான ஊழியராக, 20 ஆண்டுகள் டீ மாஸ்டராக இக்கடையில் பணியாற்றினார். திடீர் மாரடைப்பில் காலமானவரின் நினைவாக, ஆண்டுதோறும் அவரின் நினைவு நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு, இப்படியொரு உதவியை செய்து வருகிறேன்...' என்றார்.நினைவஞ்சலி என்றாலே, 'போஸ்டர், பிளெக்ஸ் பேனர்' என்று, பணத்தை விரயமாக்குவோர் மத்தியில், பயனுள்ள வகையில் அஞ்சலி செலுத்தி வரும் அவரை, மனதார பாராட்டினேன்.பிரியமானோர் நினைவாக அஞ்சலி செலுத்துவோர், சற்றே நிதானமாக யோசித்தால், இறந்தவரை பெருமைப்படுத்தும் வண்ணம், ஏதாவது நற்காரியங்களை செய்ய முடியும். சிந்திப்பரா!-டி.பிரேமா, மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !