'ரிசர்வேஷன்' செய்தால் மட்டும் போதாது!
சமீபத்தில், ராமேஸ்வரம் சென்று வர, 'ஆன்லைனில்' ரயில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தோம். 30 பேர் கொண்ட குழுவாக இருந்ததால், வெவ்வேறு கோச்சில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.வயதான பலருக்கும், 'மிடில், அப்பர் பர்த்'கள் தான் கிடைத்தது. டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, வயதை குறிப்பிட்டும், இவ்வாறு ஒதுக்கியிருந்தனர். அதனால், 'லோயர் பர்த்'தில் இருந்தவர்களிடம் கெஞ்சி, நிலைமையை எடுத்துச் சொல்லி, மாற்றி அமர வைத்தோம்.'ஏன் இப்படி இஷ்டத்துக்கு ஆட்களை மாற்றி அமர வைத்துள்ளீர்கள்... இப்படியெல்லாம் செய்யக் கூடாது...' என்றார், டி.டி.ஆர்., 'வயதானவர்கள் சிரமப்படுவர் என்று தான் செஞ்சோம்...' என்றோம்.'அப்படியெல்லாம் செய்யக் கூடாது. முன்பதிவு செஞ்சா மட்டும் போதாது. விதிமுறையை கடைப்பிடிக்கணும். ஏதாவது திடீர் விபத்து ஏற்பட்டு இறப்பு, கை கால் இழப்பு, ஆளைக் கண்டுபிடிக்க முடியாத நிலை போன்ற காரணங்களால், பயணம் செய்யும் நபர்களின் பெயர், வயது, ஆதார் நம்பரை வைத்துதான் அடையாளம் காண முடியும்.'அப்படிப்பட்ட சூழ்நிலையில், இடம் மாறி அமர்வதால், பெரும் குழப்பம் ஏற்படும். ரயில்வே நிர்வாகத்தால், எல்லாருக்கும், 'லோயர் பர்த்' கொடுக்க முடியுமா? அப்படி பண்ணனும்ன்னா திருமண மண்டப ஹாலில் பெட்ஷீட் விரிச்சு படுக்கிற மாதிரி தான் ரயிலிலும் விரிச்சு படுக்கணும்...' என்று கடிந்து கொண்டார். அவர் சொல்வதும், நியாயம் என்று புரிந்தது.குடும்பத்துடன் ரயிலில் பயணிக்கும் அனைவரும், இதை உணர்ந்து செயல்படுவது நல்லது.- எ.எஸ். யோகானந்தம், ஈரோடு.
துணிந்து செயல்பட்டால், வெற்றி உறுதி!
நண்பரது மகன், பொறியியல் பட்டதாரி. சுமாராக படித்திருந்தார். குறைந்த மதிப்பெண்ணில் தேர்ச்சி அடைந்த காரணத்தால், பெரிய நிறுவனங்களில் வேலையில் சேர முடியவில்லை. அவரின் விடா முயற்சிக்கு, சென்னையில் உள்ள ஒரு கம்பெனியில், மாதம், 10 ஆயிரம் சம்பளத்தில் வேலை கிடைத்தது.சென்னையில் அறை வாடகை, சாப்பாடு மற்றும் இதர செலவுகள் என, மாதம், 12 ஆயிரத்திற்கு மேல் ஆனது. மகனுக்கு, மாதா மாதம், 2,000 ரூபாய் அனுப்பிக் கொண்டிருந்தார், நண்பர். ஆறு மாதங்களுக்கு பிறகு, நண்பரது மகன் வேலையை ராஜினாமா செய்து, சொந்த ஊருக்கு வந்து, துணிச்சலாக ஒரு முடிவு எடுத்தார்.வங்கி கடன் மூலம், ஆட்டோ ஒன்றை வாங்கி, அவரே ஓட்ட ஆரம்பித்தார். மூன்றே ஆண்டுகளில், ஆட்டோவுக்கான கடன் தொகை முழுவதும் செலுத்தி, இப்போது அவருக்கு சொந்தமாகி விட்டது. டீசல், பராமரிப்பு, தேய்மானம் என, எல்லா செலவும் போக, மாதம், 30 ஆயிரம் வருமானம் கிடைப்பதாக கூறினார். இவரைப் போல, படித்த இளைஞர்கள் துணிந்து முடிவெடுத்து, சொந்த தொழிலில் இறங்கினால், உறுதியான வெற்றி தான்!க. சரவணகுமார், திருநெல்வேலி.
வலைத்தள மோசடிகளிலிருந்து தப்பிக்க...
'ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பர்' என்பர்.இன்றைய உலகில் எங்கோ அமர்ந்து, வங்கியிலுள்ள உங்கள் பணத்தை சில நொடிகளில் திருடும் நுாதனத் திருடர்கள் அதிகம். இவர்களின் மூலதனம் மனிதனின் பேராசை, அறியாமை, தேவையற்ற பயம், கவலை, இவை யாவற்றிற்கும் மேல், அவசர புத்தி.இந்த நுாதனத் திருடர்கள், 'ராஜுவும் 40 திருடர்களும்' என்ற சித்திரக் கதையின் மூலம், எவ்வாறெல்லாம் ஏமாற்றுகின்றனர் என்று பட்டியலிட்டுள்ளது, மத்திய ரிசர்வ் வங்கி. ஆங்கிலத்தில், பி.டி.எப்., வடிவில் உள்ளது. இதை கீழ்க்கண்ட இணைப்பிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.'raju and 40 thieves- RBI Ombudsman Mumbai 11_Mobile landscape'மோசடி அழைப்புகளை அறிந்து கொள்ள இது உதவும். ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் உள்ள இந்த விழிப்புணர்வு வாசகங்களை, மற்ற இந்திய மொழிகளிலும், ரிசர்வ் வங்கி வெளியிட்டால், பலரும் பயனடைவர்.இதில் குறிப்பிட்டுள்ளவற்றில், 10க்கும் மேலான மோசடி அழைப்புகள் எனக்கு வந்தன; வந்து கொண்டும் இருக்கின்றன. 'உங்கள் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது, ஆதார் இணைக்கப்படவில்லை, கே.ஒய்.சி., பதிவிடப்படவில்லை, இந்த இணைப்பை அழுத்தவும்' என்று குறுஞ்செய்தி வந்தால், உடனே நீக்கி விடுங்கள். உங்களுக்கு உதவுவது போல நடிக்கும் தந்திரக்காரர்களிடம் ஏமாந்து விடாதீர்கள்.- கே.என்.சுவாமிநாதன், கனடா.