இது உங்கள் இடம்!
முன்மாதிரி இளைஞன்!'டூ வீலரில்' மரப்பெட்டி ஒன்றில், சிறிய எவர்சில்வர் பாத்திரங்களில், ராகியில் செய்த முறுக்கு, தோசை, களி, கம்பு புட்டு, கம்பு அடை மற்றும் தினையில் செய்த முறுக்கு, அதிரசம், அல்வா, சாமை இடியாப்பம் என, பலதரப்பட்ட சிறுதானிய தின்பண்டங்களை, மாலை நேரங்களில் மட்டும், ஒரு இளைஞன் வியாபாரம் செய்வதை கவனித்தேன்.இவை போக, கொண்டைக்கடலை, மொச்சை, பட்டாணி, பச்சைப்பயறு சுண்டல்களும் இருந்தன.'இந்த வியாபார யோசனை எப்படி வந்தது...' என்று, இளைஞனிடம் கேட்டேன்.'படித்து முடித்தும், சில ஆண்டுகளாக வேலை தேடி அலைந்தேன். கிடைத்த ஓரிரு வேலைகளிலும், எதிர்பார்த்த ஊதியம் கிடைக்கவில்லை. அதன்பின், பாட்டி மற்றும் அம்மாவின் யோசனைப்படி, இந்த வியாபாரத்தில் இறங்கினேன். இப்போது, சராசரியாக மாதம் ஒன்றுக்கு, 30 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறேன்...' என்றான்.இளைஞர்களே... வேலை கிடைக்கவில்லை என்று காலத்தை விரயமாக்காமல், அந்த இளைஞனை முன்மாதிரியாகக் கொண்டு, சுயதொழிலில் ஈடுபட்டு, உழைத்திடுங்கள். உங்கள் வாழ்க்கை, நிச்சயம் முன்னேறிவிடும்.— வி.சங்கர், சென்னை.தோழியின் நெத்தியடி!தோழியின் வீட்டிற்கு சென்றிருந்தேன். தோழியிடம் பணம் கேட்டு நச்சரித்துக் கொண்டிருந்தான், அவரது மகன்.தோழியோ, 'தரவே முடியாது...' என, கறாராக மறுத்தார்.'நண்பர்கள் எல்லாம், 'ஷேர்' பண்ணி, ஒரு நண்பர் வீட்ல, 'பார்ட்டி' பண்றோம். எல்லாரும் பணம் தரும்போது, நானும் தரலேன்னா, அசிங்கமாயிடும். ஒரு தடவை தானே, 'பீர்' மட்டும் தான். பணம் தா, ப்ளீஸ்ம்மா...' என்று, கெஞ்சினான்.'ஒரு தடவை தப்பு பண்ணினா, அது தப்புல சேர்த்தி இல்லியா? திருட்டு, கொலை மற்றும் 'ரேப்' பண்ணிட்டு, ஒரு தடவை தானே பண்ணினேன்னு சொல்லி தப்பிக்க முடியுமா? ஒரு தடவையோ, பல தடவையோ, தப்புன்னா தப்பு தான்.'தும்பை விட்டு வாலை பிடிக்கிறதுல எனக்கு இஷ்டமில்ல. நீ, ஒரு தடவை மட்டும்ன்னு கேட்கிறதால, குடிக்க அனுமதிக்க மாட்டேன். உன் அப்பா, குடிச்சு குடிச்சு செத்துப் போனதால தான், இப்ப நான் வீட்டு வேலை செஞ்சு, கஷ்டத்துடன் வாழற நிலைமை நமக்கு வந்து விட்டது.'உன்னைக் கட்டிக்கப் போற என் மருமகளுக்கு, நல்ல புருஷனை கொடுக்கிற பொறுப்பு, எனக்கு இருக்கு. முதல்ல, குடிக்க வற்புறுத்தற, குடியை ஊக்குவிக்கிற நண்பர்களை, நீ புறக்கணிச்சுடு. இந்த விஷயத்துல, என் மனசு மாறிடும்ன்னு நினைக்காத...' என்றாள், தோழி.இதைக்கேட்ட தோழியின் மகன், எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்று விட்டான்.நெத்தியடி வார்த்தைகளால், மகன் தவறான பாதையில் போகாமல் தடுத்த தோழியை, மனதார பாராட்டி வந்தேன்.— எஸ். நாகராணி, மதுரை.அம்மாவுக்காக...நெருங்கிய உறவினர் வீட்டில், ஒரு விசேஷத்திற்காக தங்க நேர்ந்தது. பெரிய நிறுவனத்தில் பொறுப்பான பதவியில் இருந்த போதும், வீட்டில், வயது முதிர்ந்த தாய்க்கு தினமும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி, அவரின் உடல்நிலை பற்றி விசாரிப்பார். அவரின் பழங்கால நினைவுகளை நினைவுபடுத்தி, அன்று நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை கேட்டு மகிழ்வார், உறவினர்.அதுமட்டுமின்றி, வீட்டில் எந்த முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தாலும், தாயிடம் ஆலோசனை கேட்டு, அவர் ஆசிர்வாதத்துடன் செய்ய துவங்குவார்.இதுபற்றி அவரிடம் கேட்டேன்.நாம் பொழுதை போக்க, சினிமா தியேட்டர், பீச், சுற்றுலா என்று வெளியில் ஜாலியாக சுற்றுகிறோம். ஆனால், என்னை ஆளாக்கிய வயது முதிர்ந்த தாய்க்கு, இந்த வீடு தான் உலகம்.இந்த சின்ன உலகத்தில் அவரை ஏன் தனிமையில் விட வேண்டும். அதனால் தான் தினமும் அவருக்கென நேரம் ஒதுக்கி, அவரின் தேவைகளை நிறைவேற்றுவதுடன், மனைவி, பிள்ளைகளுக்கும் அவரை கவனிக்க கட்டளையிட்டுள்ளேன்.அதுமட்டுமின்றி, எந்த சுப நிகழ்ச்சி என்றாலும், தாயிடம் ஆலோசனை கேட்டு செயல்படுவதால், விழா சிறப்பாகவும், சிக்கனமாகவும் நடைபெறுவதாக கூறினார்.பெற்றோரை முதியோர் இல்லத்தில் விடும் இந்த காலத்திலும் இப்படி ஒருவர் இருப்பதை எண்ணி, மனம் நெகிழ்ந்தேன்.எம். அருள்பிரகாசம், கோவை.