உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

'ஆன்லைன் லோன்...' உஷார்!'ஆன்லைன் ஆப்' மூலம், 20 ஆயிரம் ரூபாய், 'லோன்' எடுத்தான், நண்பன். அதற்கு, ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் தன் போட்டோவை, 'ஆன்லைன் லோன்' நிறுவனத்திற்கு, 'அப்லோடு' செய்தான்.'லோன்' எடுத்த இரண்டு மாதங்களுக்கு பின், வாங்கிய கடனை விட, நான்கு மடங்கு பணம் கட்டச் சொல்லி, போனில், 'டார்ச்சர்' செய்தனர்.'அவ்வளவு தொகையை, என்னால் கட்ட முடியாது...' என்று சொல்லி, கெஞ்சினான், நண்பன்.ஆனால், அந்த நிறுவனம் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.இந்நிலையில், சில நாட்களுக்கு பின், அவன் நிர்வாணமாக இருப்பது போன்ற, 'எடிட்' செய்த போட்டோவை, அவனது மொபைல் போனில் உள்ள, அத்தனை நண்பர்களின், 'வாட்ஸ் ஆப்' எண்ணுக்கும், 'லோன்' நிறுவனம் அனுப்பியது. பெண் தோழியரும், அந்த, 'லிஸ்ட்'டில் இருந்தனர்.தன் நிர்வாண போட்டோவை கண்டு, நொந்து போனான். இதற்கு மேல் பொறுமையாக இருந்தால், இன்னும் என்னவெல்லாம் செய்வரோ என்று பயந்து, காவல் நிலையத்தில் புகார் கொடுத்தான், நண்பன்.அதன் பின்னரே அந்த, 'ஆன்லைன் லோன்' நிறுவனத்திடமிருந்து விடுபட முடிந்தது.வாசகர்களே... இப்போதெல்லாம், 'ஆன்லைனில் லோன்' தரும் நிறுவனங்கள், புற்றீசலாய் முளைத்து விட்டன.எனவே, அவர்கள் தரும் கவர்ச்சிகரமான விளம்பரத்தை நம்பி, 'ஆன்லைனில் லோன்' எடுப்பதை தவிருங்கள்; இல்லையேல், என் நண்பனுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் தான், உங்களுக்கும் நேரிடும், ஜாக்கிரதை!பி.ராமகிருஷ்ணன், அறந்தாங்கி.தேனா, கருப்பட்டி பாக்?நான் வேலை பார்க்கும் கல்லுாரியில், நான்காவது மாடி வெளிப்புறம், தேனீ, கூடு கட்டியிருந்தது.தேன் எடுப்பவரை தொலைபேசியில் அழைத்தேன்.தேன் எடுக்க, நான்கு பேர் வந்தனர். தீ பந்தம் கொளுத்தி, தேனீக்களை விரட்டினர். பின், தேன் அடைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்தனர்.கண்ணும் கருத்துமாக கண்ணில் விளக்கெண்ணை விட்டு கண்காணித்தேன்.திடீரென அவர்கள், தேன் அடைகளை வேறு பாத்திரத்தில் போட முயன்றனர்.அவர்களை தடுத்து, 'தேன் எடுக்க, கூலி கொடுத்து விட்டேன்; தேனை கொடுங்கள்...' என்றேன்.'தயவுசெய்து, தேனை பிழிந்து தந்து விடுகிறோம். காலியான தேன் அடையை எங்களிடம் கொடுங்கள்; அதை வைத்து வியாபாரம் செய்து கொள்கிறோம்...' என்றனர்.காலியான தேன் அடையை வாங்கி, அவர்களிடம் இருக்கும் கருப்பட்டி பாகை ஊற்றி, தேன் என்று விற்பது, அப்போது தான் தெரிய வந்தது.'ஐயா, வெளியில் சொல்லி விடாதீர்கள். வயிற்றுப்பிழைப்புக்கு வேறு வழி தெரியவில்லை...' என்று, கெஞ்சினர்.நண்பர்களே... தேனை பிழிந்த பின் உள்ள தேன் அடையில், பாகை ஊற்றி, நம்மை ஏமாற்றுகின்றனர். கவனம் தேவை.தே.மாதவராஜ், கோயம்புத்துார்.ஏமாற்ற எப்படியெல்லாம் யோசிக்கின்றனர்!சமீபத்தில், நண்பர் ஒருவர், மதுரைக்கு சென்று, பின் தன் சொந்த ஊரான காரைக்குடிக்கு திரும்ப, பேருந்தில் ஏறி உட்கார்ந்திருக்கிறார்.அப்போது, இரண்டு பேர், அதே பேருந்தில் ஏறி இருக்கையை பிடித்தனர். பேருந்து புறப்பட ஐந்து நிமிடம் இருக்கவே, டீ சாப்பிட நினைத்து, இருவரும் பையை இருக்கையில் வைத்து விட்டு கீழே இறங்கினர். போன வேகத்தில் ஒருவர் மட்டும் வந்து, இரண்டு பையையும் எடுத்து, இறங்கி விட்டார்.சிறிது நேரத்திற்கு பின், இன்னொரு ஆசாமி பேருந்திற்குள் ஏறி, 'ஐயையோ, இங்க இருந்த என்னுடைய பை எங்கே...' என்று, மற்ற பயணியரிடம் கேட்டார்.'உங்களோடு வந்தவர் தான் எடுத்துக்கிட்டு, இறங்கி போய் விட்டார்...' எனக் கூறியுள்ளார், நண்பர்.'ஐயையோ, அவர் என் கூட வரவில்லை. அவர் யார் என்றே எனக்கு தெரியாது. கீழே நின்றிருந்தவரிடம், 'இந்த பேருந்து காரைக்குடிக்கு போகுமா'ன்னு கேட்டேன். 'போகும் ஏறுங்க; நானும் அங்கே தான் போறேன். வாங்க'ன்னு, என்னுடன் ஏறி, இந்த இடத்தில் பையை வைத்துப் போனோம்...' என்றார்.'அப்படியானால், 'பையை பத்திரமா பார்த்துக் கொள்ளுங்கள். டீ சாப்பிட்டு வந்து விடுகிறேன்...' என்று, எங்களிடமாவது சொல்லிப் போயிருக்கலாம் இல்லையா... நீங்கள் இருவரும் பேசியபடியே வண்டியில் ஏறி இருக்கையை பிடித்து, பையை வைத்து விட்டு, ஒன்றாக இறங்கிப் போனீர்கள்.'அதனால் தான், அவன் உங்கள் பையை எடுத்து போகும் போது கூட, இருவரும் வேறு பேருந்தில் ஏறி போவதாக நினைத்து, பேசாமல் இருந்து விட்டோம்...' என்று, நண்பர் உட்பட பேருந்திலிருந்த அனைவரும் கூறியுள்ளனர்.இந்த உலகில் எப்படியெல்லாமோ ஏமாற்றுகின்றனர். நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.ஆ. மோகன், காரைக்குடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !