இது உங்கள் இடம்!
அவசியமான கடமை!சிறிய அளவிலான, ஜவுளிக் கடை ஒன்றை நடத்தி வருகிறார், கணவரின் நண்பர். அவரிடம், 10க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் பணிபுரிகின்றனர்.ஒவ்வொரு மாத துவக்கத்திலும், மன நல ஆலோசகர் ஒருவரை கடைக்கு வரவழைத்து, பணியாளர்களுக்கு, 'கவுன்சிலிங்' வழங்கச் செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார், அந்த நண்பர்.இதுபற்றி அவரிடம் கேட்டதில், 'இன்றைய காலகட்டத்தில், மனச்சிதைவுக்கு ஆளாகாத நபர்களே இல்லை. இதனால், நிதானம் காக்காமல், சாதாரண விஷயத்திற்கும் சண்டைக்குப் போய் விடும் சூழல் உள்ளது.'தோல்விகளையும், அவமானங்களையும் தாங்கிக் கொள்ளும் பக்குவமும் குறைந்து, சிறிய விஷயத்திற்கே, தற்கொலை அளவிற்கு சென்று விடும் மோசமான நிலையும் காணப்படுகிறது.'இதனால் தான், என் பணியாளர்களுக்கு, மாதா மாதம், மன நல ஆலோசகர் மூலம், மனவளப் பயிற்சியும், மன நல ஆலோசனையும் வழங்கச் செய்து வருகிறேன்.'இதனால், எனக்கு இரண்டு நன்மைகள். பணியாளர்களை மன அழுத்தத்திலிருந்து விடுவிக்க முடிகிறது. வாடிக்கையாளர்களிடம், அவர்களை கனிவோடு நடந்து கொள்ளச் செய்து, வியாபாரத்தை பெருக்க உதவுகிறது...' என்றார்.நிறுவனங்கள் வைத்திருப்போர், இதைப் பின்பற்றலாமே!டி. யாஷினி, திருப்பூர்.தோழியின் கனிவுவீட்டிலிருக்கும் தோழிக்கு, எப்போது போன் செய்தாலும், 'ரிங்' போகும். உடனே அழைப்பை ஏற்க மாட்டாள். சிறிது நேரத்தில், அவளே என்னை தொடர்பு கொள்வாள். இதுபற்றி, என் ஆதங்கத்தை அவளிடம் கொட்டினேன்.'என் மாமனாருக்கு, 85 வயது; இதய நோயாளி. மாமியாருக்கு, 80 வயது; அவர் மூட்டு வலியால் அவதிப்படுகிறார். இருவருமே, பகலில் சிறிதுநேரம் உறங்குவர். அந்த நேரத்தில் போன் வந்தால், அவர்களின் உறக்கம் கெடும்.'மேலும், வீட்டு வேலையில் நான், 'பிசி'யாக இருக்கும்போது, வயதானவர்களுக்கு வீண் சிரமம் வேண்டாம் என்று தான், போனை, 'சைலண்ட் மோடில்' வைப்பேன். அவ்வப்போது, 'மிஸ்டு கால்' பார்த்து, நானே பேசுவேன்...' என்றார்.வயதான, சொந்த பெற்றோரையே பராமரிக்காமல் புறக்கணிப்போர் மத்தியில், கணவனின் பெற்றோரை கனிவுடன் கவனித்துக் கொள்ளும் தோழியை, மனதார பாராட்டினேன்!-எஸ்.நாகராணி, மதுரை.உழைப்பை நாடிய ஜோசியர்!எங்கள் பகுதிக்கு, ஜோசியர் ஒருவர், அவ்வப்போது வருவார். அவரிடம், ஓரிருவரே ஜோசியம் பார்ப்பர்.சமீபத்தில் அவர், பெண்களுக்கான நைட்டி, பாவாடை, புடவை, பிளவுஸ் பிட், ஆண்களுக்கான லுங்கி, வேட்டி, துண்டு, குழந்தைகளுக்கான ரெடிமேட் ஆடைகள் மற்றும் தலையணை உறைகளை, தெருத் தெருவாக விற்பனை செய்து கொண்டிருந்தார். இதுபற்றி அவரிடம் வினவினேன்.'இப்பல்லாம் எங்களை போன்றவங்ககிட்ட, ஜோசியம் பார்க்கறது குறைஞ்சு போச்சு. இந்த தொழிலை மட்டுமே நம்பி, குடும்பம் நடத்துறது சிரமமா இருந்தது. அதனால், உழைப்பை நம்பி களத்துல இறங்கலாமேன்னு, இந்த வியாபாரத்துக்கு வந்துட்டேன்.'ஜோசியம் பார்க்க வந்தப்ப, வெறுப்பா பார்த்து விலகிப் போனவங்க, கேலி பேசி விரட்டி விட்டவங்க கூட, இப்ப என் உழைப்பை மதிச்சு, ஆடைகளை வாங்கி, உதவி செய்றாங்க. ஜோசியத் தொழிலை விட, இந்த வியாபாரத்துல, நல்லாவே சம்பாதிக்கிறேன்; கவுரவமாவும் இருக்கு...' என்றார்.கால மாற்றத்திற்கு ஏற்றார் போல், தொழிலையும் மாற்றி, உழைப்பை நாடி வாழ்க்கையில் உயர்ந்து வரும் அவரை, பாராட்டினேன்.— எம். முகுந்த், கோவை.