உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்

*  இப்படி பலர் தேவை - பரிசு ரூ.1500

பெண்கள் என்றாலே சிலருக்கு கிள்ளுக்கீரை என நினைப்பு... ஆனால், தட்டிக்கேட்கும் பெண்களும் இருக்கின்றனர் என்பதை, சமீபத்தில் பெங்களூரு எம்.ஜி., ரோட்டில் நேருக்கு நேர் பார்த்தேன்.இரண்டு இளம் பெண்கள் ஜீன்ஸ் பேன்ட், டி-சர்ட் போட்டபடி சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிர் திசையிலிருந்து வந்த ஒருவன், இருவரில் ஒருவரை நெருங்கி, மார்பகத்தை தொட்டுவிட்டு, ஒன்றும் தெரியாதவன் போல் தொடர்ந்து நடந்தான். நடந்ததை அருகில் நின்று பார்த்த தோழி, உடனே திரும்பினாள். வஞ்சிக்கப்பட்ட தோழியையும் அழைத்துக் கொண்டு, வேகமாய் சென்று, அவனது முதுகை தட்டினாள்.திரும்பியதும், "பளார்' என ஒரு அறை விட்டாள். அடுத்த நிமிடம் தோழி பிடித்துக் கொள்ள, பாதிக்கப்பட்ட தோழி அறைந்தாள். மேலும் நான்கு அறை விழுந்த நிலையில், சிக்னல் போலீஸ்காரர் வந்தார். அவரிடம் நடந்ததைக் கூறி, அந்த ஆளை ஒப்படைத்துவிட்டு, ஒன்றுமே நடக்காதது போல் தோழிகள் சென்ற போது, இப்படி பலர் தேவை என, மனம் ஏங்கியது. — கு.ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன், பெங்களூரு.

* மனநல மருத்துவரிடம் சென்றால் கேவலமா ?  - பரிசு ரூ.500

என் நண்பன் ஒருவன், தன் குடும்பத்தாருக்கு ஏதாவது நடந்து விடுமோ, தன் எதிர் காலம் எப்படி இருக்குமோ என்ற பயத்தில், தேவையற்ற விஷயங்களை எந்நேரமும் சிந்தித்துக் கொண்டும், பேசிக் கொண்டும் இருந்தான். இது மனநோயின் ஆரம்ப நிலை என்று உணர்ந்த நான், அவனிடம், "உடனடியாக மனநல மருத்துவரை போய் பார்...' என் றேன். "மனநல மருத்துவரை பார்த்த விஷயம் வெளியே தெரிந்தால், என்னை அனைவரும், "மென்டல்' என்று கிண்டல் செய்வர்!' என்றான். நான் எவ்வளவோ வற்புறுத்தியும், அவன் காதில் வாங்கவே இல்லை. அவன் மனநோய் நாளுக்கு நாள் முற்றி, அவன் இப்போது முழுமையான மனநோயாளியாகி விட்டான்.ஆரம்பத்தில் அவனது குடும்பத் தாரிடம் சொன்னதற்கு, எனக்கு கடுமை யான வசவுதான் கிடைத்தது. இப்போது, அவனை பார்ப்பதற்கே பயமாகவும், பரிதாபமாகவும் உள்ளது. உடம்புக்கு ஏதாவது என்றால், உடனே மருத்து வரைப் பார்க்க ஓடுகிறோம். ஆனால், மனதுக்கு ஏதாவது என்றால், மனநல மருத்துவரைப் பார்க்கப் போவது கேவலம் என்று நினைக்கிறோம்; இந்நிலை மாற வேண்டும். — எஸ்.சரவணகுமார்,  வேப்பங்குளம்.

* மிடுக்குப் போய் கெஞ்சல் வந்து விட்டதோ ! - பரிசு ரூ. 1000

அன்று ஞாயிற்றுக்கிழமை. சென்னை அசோக் பில்லர் அருகில் உள்ள மிக பிரபலமான பாஸ்ட் புட்டில், பார்சல் வாங்க நின்று கொண்டிருந்தேன்; ஏகப்பட்ட கும்பல். பார்சல் கட்டி கொண்டிருந்த பையன்கள் படு பிசியாக இருந்தனர். எங்களுக்கு நடுவே ஒரு போலீஸ்காரரும் நின்று கொண் டிருந்தார். அவரிடம் டோக்கன் ஒன்றும் இல்லை. பணம் கட்டி பில் வாங்கினால் தானே டோக்கன்! பார்சல் கட்டும் பையன்களை அவர், தம்பி, அண்ணே, செல்லம் என்றெல்லாம் கெஞ்சிய படி, தனக்கு தேவையான பலகாரங்களை கட்டி கொடுக்கும்படி மன்றாடி கொண்டிருந்தார். பையன்களோ அவரை சட்டை செய்யவே இல்லை. யூனிபார்மில் மிடுக்காக இருக்க வேண்டிய போலீஸ்காரர், வெட்கத்தை விட்டு கெஞ்சுவதை பார்த்த போது, பரிதாபமாக இருந்தது. போலீஸ்காரர்கள் ஏன் தான் இப்படி எல்லாவற்றையும் ஓசியில் அடைய நினைக்கின்றனரோ! — எம்.ஆர்.ஆனந்த்,  சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !