உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

இசை விமர்சகரின் அத்துமீறல்...திரை இசைப்பாடல் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி, பிரபல சேனல் ஒன்றில், ஓடிக் கொண்டிருந்தது. அந்நிகழ்ச்சியில், மூன்று நடுத்தர வயது ஆண்கள், நீதிபதிகளாக இருந்தனர். பாடகர்கள் ஒவ்வொருவராய் வந்து, தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.ஒரு இளம்பெண், இனிமையான குரலில், அசத்தலாய் பாடி முடித்ததும், எப்போதும் குறும்பாய் பேசும், இசை நீதிபதி ஒருவர், 'ஏம்மா... குளிச்சிட்டு நேரா இங்கே வந்திட்டீங்களோ... பார்க்க ரொம்ப ரொம்ப பிரெஷ்ஷா இருக்கீங்களே...' என, வாயெல்லாம் பல்லாக சிரித்து, 'கமெண்ட்' சொல்ல ஆரம்பித்தார். பாவம், அப்பெண்ணுக்கு, தர்ம சங்கடமாகி விட்டது. இதற்கு எப்படி, 'ரியாக்ட்' செய்வதென்று தெரியாமல், பரிதாபமாய் விழித்தார்.இதைப் பார்த்துக் கொண்டிருந்த எங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும், அந்த இங்கிதம் தெரியாத, இசை நீதிபதியின் மேல், ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது உண்மை!இதுபோன்ற நிகழ்ச்சியில், கொஞ்சம் நகைச்சுவை கலந்து பேச வேண்டும் தான். அதற்காக, இப்படி படுமட்டமாய், கொச்சையாய், ஒரு பெண்ணை கமென்ட் அடித்து, காயப்படுத்தி, நெளிய வைப்பதா?நிகழ்ச்சியை எடிட் செய்யும் போதாவது, இதை உணர்ந்து, தவிர்த்திருக்க வேண்டாமா? — பி.ஜி.பி.இசக்கி, அகஸ்தியர்பட்டி.* நல்லவேளை.. 'செக்சி'யாக இருக்கிறீர்கள் என்று சொல்லாமல், 'பிரெஷ்'ஷாக இருப்பதாக சொன்னது வரை சந்தோஷம்.— பொறுப்பாசிரியர்.பேனா நட்புக்கள்...பத்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் கூட, பேனா நட்பு இருந்தது. ஆனால், மொபைல் போன் வருகையால், பேனா நட்பு இருக்கும் இடம் தெரியாமல், அழிந்தே போய் விட்டது.முகம் பாராமல், ஒருவரை ஒருவர் ஆழமாக புரிந்து கொள்ள, பேனா நட்பு உதவியாய் இருந்தது. கடிதம் மூலம் நட்பை வளர்த்த காலத்தில், நட்பின் உண்மை தன்மைக்கு, எந்த பங்கமும் வரவில்லை. அப்படி ஒரு உணர்வு பூர்வமாக இருந்தது பேனா நட்பு.ஆண் - பெண் என்று பாராமல், எனக்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட பேனா—நண்பர்கள் இருந்தனர்; ஆனால், பேனா இன்று மிக குறைவு. அதிலும், 'கடிதம் வேண்டாம்; போன் பண்ணுங்க...' என்று கூறுபவர்கள் தான் அதிகம்.உணர்வுகளை பேப்பரில் கொடுங் கள்; அந்த அனுபவமே வேறு!— பி.பாலாஜி கணேஷ், சிதம்பரம்.பட்டிமன்றம் நடத்தலாமே!அண்மையில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் நடத்தி வரும், சமூக இதழை படித்த போது, அதிர்ந்து போனேன். 'மணமேடை' பகுதியில், 48 பேர் மறுமணத்திற்கு காத்திருப்பதாக, விளம்பரம் வெளியாகி இருந்தது.அந்த, 48 பேர்களில், ஒருவர் மட்டும் தான் ஆண். மற்ற அனைவரும், எம்.என்.சி., கம்பெனியில் பணியாற்றும், ஐ.டி., மற்றும் பொறியியல் பட்டதாரிப் பெண்கள்.அதிலும், குறிப்பாக, 24 வயது முதல், 28 வயதுக்குட்பட்ட பெண்கள் தான் அதிகம். மருந்துக்குக் கூட ஆசிரிய, மருத்துவ, வழக்கறிஞர் படிப்பு படித்த பெண்கள் இல்லை.நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது? இளைய தலைமுறைப் பெண்கள், வாழ்க்கையில் பொறுமையைக் கடைப்பிடித்தால், பெருமையுடன் வாழலாம். அவசரத்தைக் கடைப்பிடித்தால், படு குழியில் தள்ளப்படலாம்.'விவாகரத்துப் பெறுவதில், விஞ்சி நிற்பது, எம்.என்.சி., பெண்களா? இன்ஜினியரிங் பெண்களா?' என்று, பட்டிமன்றம் நடத்திப் பார்க்க வேண்டியது தான்! — சு.திருவரசன், மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !