உள்ளூர் செய்திகள்

சிலிர்க்க வைக்கும் சலூன் கடை!

இரு கால்கள் செயலிழந்த நிலையிலும், வாலிபர் ஒருவர், ஸ்டூல் மீது அமர்ந்து, முடிதிருத்தும் தொழில் செய்து வருவது, காண்போரை வியக்க வைக்கிறது.திருவள்ளூர் அருகேயுள்ள தண்ணீர்குளம் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாட்சரத்தின் மகன் சகாதேவன்; வயது 29. மூன்று வயதிலேயே போலியோ நோய் தாக்கி, கால்களை இழந்தவர். தரையில் தவழ்ந்தபடியே பள்ளிக்குச் சென்று, ஐந்தாம் வகுப்பு வரை படித்தார்.தொடர்ந்து பள்ளிக்கு செல்ல முடியாமல், வீட்டில் இருந்தபடியே, எட்டாம் வகுப்பு தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்றார். தன், 12வது வயதில் தாய், தந்தை இறந்து விட்டதால் சகாதேவன் தனி மரமானார். எனினும், துவண்டு விடாமல் வாழ்க்கையை எதிர்கொள்ள வழி தேடினார் சகாதேவன்.பிழைப்பதற்கு, பணம் சம்பாதித்தாக வேண்டும். பணம் சம்பாதிக்க ஏதேனும் திறன் வேண்டும். 'இரு கால்களும் செயலிழந்த நிலையில் என்ன செய்வது? கால்கள் இல்லாவிட்டால் என்ன, இரு கைகளும், மனதில் நிறைய நம்பிக்கையும் இருக்கிறதே...' என நினைத்த சகாதேவன், தனக்குள் இருக்கும் திறமையை தேடத் துவங்கினார்.சிறு வயதில் இருந்தே முடிதிருத்தும் தொழிலாளர்கள் மீது சகாதேவனுக்கு ஈர்ப்பு இருந்தது. இதனால், சிகையலங்காரக் கலையை, 'பட்'டென கற்றுக் கொண்டவர், தன், 17வது வயதில் நண்பர்கள் உதவியுடன் தண்ணீர்குளம் கிராமத்திலேயே, ஐம்பது சதுரடி இடத்தில், 'முடிதிருத்தகம்' துவக்கினார்.இங்கு வாடிக்கையாளர்களுக்கு சுழல் நாற்காலி; இவர் முடி திருத்தும் பணியை செய்ய வசதியாக ஒரு பிரத்யேக ஸ்டூல். சற்று உயரமான இந்த ஸ்டூலில் அமர்ந்து, வாடிக்கையாளர்கள் திருப்தி அடையும் வரை, சிகையலங்காரம் செய்கிறார் சகாதேவன்.தற்போது, தண்ணீர்குளம் பகுதியில் சகாவிற்கு நிரந்தர வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த வருவாயின் மூலம் இதே கிராமத்தில் ஒரு வீட்டையும் கட்டி முடித்து விட்டார் சகாதேவன். ''அப்புறமென்ன... கல்யாணத்தையும் செய்து கொள்வது தானே!'' என, சகாதேவனிடம் கேட்ட போது...''எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து, போலீஸ் துறை மீது ஒரு காதல் இருந்து வருகிறது. போலீசில் சேர்ந்து சமூகத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என ஆசை. ஆனால், என் கால்கள் சூம்பிப்போன நிலையில், அந்த ஆசை நிறைவேற வாய்ப்பில்லை.''போலீசாக சேவையாற்ற முடியாது போனாலும், போலீசுக்கு சேவை செய்யும் வேலையிலாவது இருக்க வேண்டும். இதனால், ஆவடியில் உள்ள சிறப்பு காவல்படையில், முடிதிருத்துனர் வேலைக்காக விண்ணப்பித்துள்ளேன். அவ்வேலை கிடைத்தால் தான் திருமணம் செய்து கொள்வேன்...'' என்றார், தன்னம்பிக்கை ததும்பும் லட்சியப் புன்னகையுடன். ***பெ. முத்துகிருஷ்ணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !