திண்ணை ! - நடுத்தெரு நாராயணன்
சிறையில் இருக்கும் போதெல்லாம், சிறை விதிக்கு கட்டுபட்டு தான் நடந்து கொள்வார் காந்திஜி; எந்த ஒரு சிறிய விதியையும் மீற மாட்டார். அவர் சிறையில் இருந்த அந்த சந்தர்ப்பத்தில், செய்தித்தாள் களைப் படிக்க அவர் அனுமதிக்கப்படுவதில்லை. ஆகவே, செய்தித்தாள்கள் அவருக்கு கொடுக்கப் படுவதில்லை.அந்த ஜெயிலுக்கு வந்து போகும் டாக்டர் ஒருவர், பத்திரிகையில் வெளியாகியுள்ள ஒரு செய்தி, காந்தியின் கவனத் திற்கு கட்டாயம் வர வேண்டும் என்று எண்ணினார். ஆகவே, தான் கொண்டு வந்திருந்த செய்தித் தாள்களை, மறந்து வைத்து விட்டுப் போவதைப் போல, காந்தியின் அறையிலேயே, அதுவும் அவருடைய படுக்கையின் மீதே வைத்து விட்டுப் போய் விட்டார். மறுநாள், காந்திஜியைப் பார்க்க டாக்டர் வந்த போது, அந்த செய்தித்தாள், காந்திஜியின் படுக்கை மீது, அவர் விட்டுவிட்டுப் போன நிலையில் அப்படியே இருப்பதைப் பார்த்தார். படுக்கையில் அமராமல், அறையில் ஒரு மூலையில் சாய்ந்து உட்கார்ந்திருந்த காந்திஜி, 'நீங்கள் செய்த காரியம், என் தண்டனையின் கடுமையை அதிகரித்துவிட்டது. இரவெல்லாம் படுக்கையில் படுக்க முடியாமல், இந்த மூலையிலேயே உட்கார்ந்து கழிக்க வேண்டியதாயிற்று!' என்றார். ***என் தந்தை, லோக்சபா உறுப்பினராக இருந்தார். அப்போது ராஜாஜியிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில், நாமக்கல் கவிஞர் வறுமையால் வாடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு அரசாங்கம் எதுவும் உதவவில்லை. தங்களுக்குக் கிடைத்து வரும் லோக்சபா உறுப்பினர் மாத ஊதியம் 500 ரூபாயை அவருக்குத் தந்து உதவினால், பேருதவியாக இருக்கும்.கலைத் துறையில் தாங்கள் சம்பாதித்து வருவதால், லோக்சபா உறுப்பினருக்குரிய தொகையை, நாமக்கல் கவிஞருக்குத் தந்து <உதவலாமே என்று எழுதியிருந்தார். அது போலவே என் தந்தை, லோக்சபா உறுப்பினராக இருந்த காலம் வரை, நாமக்கல் கவிஞருக்குத் தன் மாத ஊதியத்தை அனுப்பிக் கொண்டிருந்தார்.— அவ்வை தி.க.சண்முகம் மகன், டி.கே.எஸ்.கலைவாணன் ஒரு பேட்டியில்.***கார்ல் மார்க்ஸ் மனைவி பெரிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர். கார்ல் மார்க்சை மணந்து, வறுமையில் மிகவும் கஷ்டப்பட்டார். கடைசி வரையில், வறுமையுடன் போராட்டம் தான். கணவர் இறந்த பிறகு அவர் சோகத்துடன் சொன்னார்:'மூலதனம் நூலை எழுதியதன் மூலம் அவர், பெயரும், புகழும் பெற்றார். அதை எழுதியதற்குப் பதிலாக, மூலதனத்தை அவர் தேடியிருந்தால், எங்களுடைய வாழ்க்கை எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும்!' ***ஒரு சமையல் கலைஞரின் மகள், வாழ்வில் எத்தனையோ சோதனைகளை எதிர்கொண்டாள். தளர்ந்த மனதுடன், தந்தையிடம் வந்தாள். தன் சமையல் கூடத்திற்கு அழைத்துப் போன தந்தை, ஒரு பாத்திரத்தில் கேரட்டுகளை வேக வைத்தார்; இன்னொரு பாத்திரத்தில், கோழி முட்டைகளை வேக வைத்தார். சிறிது நேரம் கழித்து, இரண்டையும் காட்டி, 'முட்டை யின் உட்பகுதி திரவமாய் இருந்தது; உஷ்ணத்தை எதிர்கொண்டதும் இறுகிவிட்டது. கேரட்டின் உட்புறம் திடமாய் இருந்தது; உஷ்ணத்தை எதிர்கொண்டதுமே இளகிவிட்டது.'சோதனைகள், இந்த உஷ்ணம் போல. சோதனை வரும் போது, கேரட் போல் இளகி விடாதே... முட்டை போல் திடமாகி விடு!' என்றார். மகளுக்கு, சமையலும் புரிந்தது; வாழ்க்கையும் புரிந்தது.