உள்ளூர் செய்திகள்

திண்ணை - நடுத்தெரு நாராயணன்

ராஜாஜி, அப்போது கவர்னர் ஜெனரல். ஒரு நிகழ்ச்சிக்காக திருவண்ணாமலை வந்திருந்தார். ரமணாசிரமத்தில், பாதாள லிங்கேசுவரர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி. கவர்னர் ஜெனரலுக்கான விசேஷ ரயில் வண்டியில் வந்த ராஜாஜி, அதிலேயே, தங்கி இருந்தார். அப் போது ராஜாஜியை சென்று சந்தித்தார் ஈ.வெ.ரா.,திராவிடர் கழகத்தில் அப்போது பிளவு தலை தூக்கி இருந்த நேரம். மணியம் மையை ஈ.வெ.ரா., திருமணம் செய்து கொள்ளப் போவதாக ஒரு செய்தி பரவி வந்தது. அரசியலில் நேர் எதிர் துருவமான ராஜாஜியை ஈ.வெ.ரா., சென்று சந்தித்த பிறகு தான், மணியம்மையை திருமணம் செய்து கொள்ளும் தீர்மானத்துக்கு ஈ.வெ.ரா., வந்தார் என, திராவிடர் கழகத்தில் பலர் சந்தேகப் பட்டனர்; பலர் பகிரங்கமாகக் கேட்கவும் செய்தனர். அண்ணா துரையும் கூட, கோவையில் ஒரு நிகழ்ச்சியில், இந்தப் பிரச்னையை எழுப்பினார். 'நான் என் சொந்த விஷயமாகப் பேசினேன்...' என சொல்லி விட்டார் ஈ.வெ.ரா., கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜியை நிருபர்கள் சந்தித்து, 'ஈ.வெ.ரா.,வை சந்தித்தீர்களே... ஏதேனும் முக்கியத்துவம் உண்டா?' எனக் கேட்டனர்.'நான் இங்கு குறைந்த நேரம் தான் தங்கி இருந்தேன். பழைய நண்பர்களைக் காணவும், கலந்து பேசவும் இயலவில்லை. நான் ஈ.வெ.ரா.,வை சந்தித்தது பற்றி, சிலர் குழம்பியிருக்கின்றனர். 'டில்லிக்கு வருகிறேன்; சந்திக்க வேண்டும்...' என ஈ.வெ.ரா., கடிதம் எழுதியிருந்தார். இந்த பகுதியில், பல்வேறு குழப்பங்கள், அமைதிக் குறைவு, பல சூழ்நிலைகள் உள்ளன. அவற்றுக்கெல்லாம் காரணமான ஓர் இயக்கத்தின் தலைவரை நான் எப்படி சந்திக்கலாம்? அது மரபு அல்லவே என சிலர் கேட்கலாம். அது தவறு என்று கூடக் கூறலாம்.'ஆனால் உண்மை என்ன? நானும், ஈ.வெ.ரா.,வும் பழைய நண்பர்கள். உலகத்தில் எல்லாமே, மாறுதலுக்கு உட்பட்டவை என்பதை இருவருமே உணரும் அளவுக்கு மூத்தவர்கள். பல ஆண்டுகள் நாங்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து பணியாற்றினோம். பிறகு, எங்கள் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆனால், இந்த கருத்து வேறுபாடுகள், எங்கள் நட்பைப் பாதித்ததில்லை. எங்களுடைய இந்த நட்பை, மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன். 'ஈ.வெ.ரா.,வுடன் என்னுடைய சந்திப்பு, மாநில அரசியலைப் பற்றியதோ, அவருடைய இயக்கத்தைப் பற்றியதோ, அவருடைய பொதுப் பணி பற்றியதோ அல்ல; நாங்கள் சில தனிப்பட்ட விஷயங்களைப் பற்றிப் பேசினோம். அவர் சொந்த விஷயங்களைப் பற்றியே என்னுடன் பேச விரும்பினார். இது பற்றிய எல்லா வதந்தி களையும், தவறான ஊகங்களையும் நான் தெளிவாக்க விரும்புகிறேன். இது, இரு பழைய நண்பர்களின் சந்திப்பு. சொந்த விஷயம் பற்றிய கலந்துரையாடல், அவ்வளவு தான்...' என்று கூறினார் ராஜாஜி. இந்த செய்தி, மே 17, 1949 'ஹிந்து' பத்திரிகையில் வெளிவந்துள்ளது. — 'நெஞ்சை நெகிழ வைக்கும் நிகழ்ச்சிகள்' எனும் நூலிலிருந்து...***தன் பள்ளி ஆசிரியர்களுள், இன்றும் அழ.வள்ளியப்பாவின் நினைவில் நிற்பவர், கணக்கு வாத்தியார் ராஜகோபால ஐயர். சரியாகக் கணக்கு போடாத மாணவனைப் பார்த்து, 'திருவிழாவில் தீவட்டி பிடிக்கத்தான் நீ லாயக்கு...' என்று திட்டுவார். <உடனே, தன் திட்டுக்குத் தாமே ஒரு விளக்கம் கூறுவார். 'தீ வட்டி பிடிக்கவும், சிறிது மூளை வேண்டும். தீவட்டியைச் சாய்த்து பிடிக்க வேண்டும். நேராகப் பிடித்தால், அதன் தலைப் பகுதியிலிருந்து எண்ணெய் வழியும். நீ அதுக்கும் லாயக் கில்லை...' என்று கூறுவார்.மாணவர்கள் கணக்கு போடும்போது, சில சமயம் பாதி வரை போடுவர். மேலே முடிக்கத் தெரியாமல் அப்படியே விட்டு விடுவர். கணக்கு நோட்டைத் திருத்தும் போதும், இப்படிப்பட்ட பாதி கணக்குகளைக் கண்டால், அதைப் போட்ட மாணவனை எழுப்பி, 'என்ன... புது மாப்பிள்ளை சாப்பிட்ட மாதிரி கணக்குப் போடறே?' என்று கேட்பார்.புது மாப்பிள்ளை, கூச்சத்தாலும், தன்னை சாப்பாட்டு ராமன் என்று மற்றவர் நினைக்கக் கூடாது என்ற எண்ணத்தாலும், விருந்து சாப்பிடும் போது, காய்கறி முதலிய அனைத்திலும், பாதி பாதிதான் சாப்பிடுவான். இதை மனதில் வைத்தே, ஆசிரியர் அவ்விதம் சொல்வார். குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா வாழ்க்கை வரலாறு நூலில், குழந்தைகள் எழுத்தாளர் பூவண்ணன். **


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !