பெற்றோருக்கான டிப்ஸ்
'பதிமூன்று அல்லது 14 வயது குழந்தைகள் வெளியே சென்று, இரவு தாமதமாக வந்தால், கதவை திறக்க மாட்டோம்; நீ கோபித்து, நண்பர்கள் வீட்டுக்கு போனால், அப்படியே, மறுநாளும் அங்கேயே சென்று விடு...' என்று சொல்லுங்கள்; நீண்ட நாட்கள், நண்பர்களின் வீடுகளில் இருக்க முடியாது என்பது, அவர்களுக்கும் தெரியும். 'வீட்டை விட்டு ஓடிப் போயிடுவேன்...' என்று, 'சென்டிமென்ட்'டாக குழந்தைகள் மிரட்டினால், 'போனா போ...' என்று சொல்லாமல், 'நீ போனா, நாங்க ரொம்ப வருத்தப் படுவோம்...' என்று நீங்களும், அதே சென்டிமென்டால் அடிங்க! பிள்ளைகளுக்கு, 13 மற்றும் 14 வயது வரும் போது, குடும்ப பட்ஜெட் போடும் நேரத்தில், அவர்களையும் உட்கார வையுங்கள்; அப்போது தான், ஒவ்வொரு காசுக்கும், பெற்றோர் எவ்வளவு கஷ்டப் படுகின்றனர் என்பது புரியும். சேமிக்கும் பழக்கத்தை, சிறு வயதில் இருந்து பழக்குங்கள்; அச்சேமிப்பில் இருந்து, தன் உடன் பிறந்தோருக்கு அன்பளிப்பு வாங்கி தர சொல்லுங்கள்; அதனால், பகிர்ந்து கொடுத்தல், விட்டு கொடுத்தல் போன்ற நல்ல பண்புகள் அவர்களிடம் உருவாகும்.குழந்தைகள் வளர வளர, பிறந்தநாளை பெரிய பார்ட்டி போல, ஆடம்பரமாக கொண்டாடாதீர்கள்; ஆதரவற்ற குழந்தைகளுடன், உங்கள் பிள்ளையின் பிறந்த நாளை கொண்டாடுங்கள்; அப்போது தான், தாம் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் என்பதும், பெற்றோருடைய அருமையும் அவர்களுக்கு புரியும்.உங்கள் பிள்ளைகள் செய்யும் செயல்களுக்கான, விளைவுகளை சந்திக்க விடுங்கள்; பிரச்னையாகி விடக் கூடாது என்று, அவர்களை தப்பிக்க வைத்தால், பின், அதுவே, பெரிய விளைவுகளை ஏற்படுத்தி விடும்.பிள்ளைகளை, செல்லமாக வளர்ப்பது சரி; ஆனால், அதற்கும் ஒரு வரையறை உண்டு. அவர்களிடம், சில விஷயங்களில் விட்டுக் கொடுக்காமல், உறுதியாக இருக்க வேண்டும்.உங்கள் குழந்தையுடன், தினமும் முடிந்த அளவு நேரத்தை செலவழியுங்கள்; பிறர் மீதான கோபத்தை, குழந்தைகள் மீது காட்டாதீர்கள்.கணவன், மனைவி சண்டையை ஒருபோதும், குழந்தைகளிடம் எடுத்துச் செல்லாதீர்கள்.உங்கள் பிள்ளைகளின் நண்பர்கள், யார் யார் என்று அவர்களை பற்றியும், அவர்களின் குடும்பத்தை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்; அவர்களின் தொடர்பு எண்களையும், வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.பள்ளி, கல்லூரியில் நடக்கும், பெற்றோர் - ஆசிரியர், 'மீட்டிங்' என்றால், தவறாமல் செல்லுங்கள்; அப்போது தான், உங்கள் பிள்ளையின் நடவடிக்கைகள் பற்றி தெரிய வரும்.