உள்ளூர் செய்திகள்

கோவில் வாசலில் கொட்டும் தீர்த்தம்!

குண்டாக, லட்சணமாக இருக்கும் குழந்தைகளை யாருக்கு தான் பிடிக்காது.திருவண்ணாமலை பூதநாராயணர் கோவிலில் உள்ள கிருஷ்ணர், குழந்தை வடிவில், குண்டாக இருப்பதால், பூதநாராயணர் என்ற பெயருடன் அருள்பாலிக்கிறார்.இந்த கோவிலில் தரும் தீர்த்தத்தை, பக்தர்கள் கோவில் வாசலில் கொட்டுகின்றனர்.கிருஷ்ணனால் தனக்கு அழிவு உண்டாகும் என்பதை அறிந்த, கம்சன், அவரை அழிக்க, பூதனை என்ற அரக்கியை அனுப்பினான்.அவள், அழகியாக மாறுவேடம் இட்டு, கிருஷ்ணரிடம் சென்றாள். அவரை, மடியில் வைத்து, பாசமுடன் பால்கொடுப்பது போல் நடித்தாள் .கிருஷ்ணரும் பால் அருந்துவது போல் நடித்து, அவளை வதம் செய்தார். பூதனையை கொன்றதால், குழந்தை கண்ணனுக்கு, பூத நாராயணர் என்ற பெயர் ஏற்பட்டது.ஒரு மன்னர், பூதவடிவத்தில், சுவாமிக்கு கோவில் எழுப்பினார். பிற்காலத்தில் கோவில் மறைந்து போனது.பல்லாண்டுகளுக்கு பின், இப்பகுதியில் வசித்த பெருமாள் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய சுவாமி, தான் பூமியில் புதைந்திருப்பதை உணர்த்தினார்.அதன்படி, சுவாமி சிலையை கண்ட பக்தர், அந்த இடத்தில் மீண்டும் கோவில் எழுப்பினார்.கருவறையில், சுவாமி, இடது காலை மடித்து, வலது காலை குத்திட்டு பூதாகரமான உருவத்துடன் அமர்ந்திருக்கிறார். வலது கையில் சங்கு உள்ளது.குழந்தைகள் சிறப்பாக படிக்கவும், அவர்களின் சில்மிஷம் குறையவும், இவரிடம் வேண்டுவர்.இங்கு தீர்த்தம் கொடுப்பதில் வித்தியாசமான முறை பின்பற்றப்படுகிறது.கிரிவலம் முடித்து வரும் பக்தர்கள், தீர்த்தம் வாங்கி, வாசல் முன் சிந்துகின்றனர்; மீண்டும் வாங்கி பருகுகின்றனர். அதாவது, கிரிவலம் சென்ற புண்ணியத்தை, கிருஷ்ணருக்கு சமர்ப்பணம் செய்து, மீண்டும் அதை அவரிடமிருந்து பெற்றுக் கொள்வதாக நம்பிக்கை.புரட்டாசி கடைசி சனிக்கிழமையன்று, ஒரு மூட்டை அரிசி சமைத்து, சுவாமிக்கு படைப்பர். பின், அதை பிரசாதமாக தருவர். கிருஷ்ணர் குண்டாக இருப்பதால், அதிக அரிசி சமைப்பதாக ஐதீகம்.கிருஷ்ண ஜெயந்தியன்று, சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம் நடக்கும்.திருவண்ணாமலை வடக்கு மாட வீதியில், அண்ணாமலையார் கோவில் அருகில், இந்த கோவில் உள்ளது.காலை: 5:00 முதல், 10:30 மணி வரையும், மாலை: 4:00 முதல், 8:30 மணி வரையும், கோவில் திறந்திருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !