உள்ளூர் செய்திகள்

சவால்களை சமாளியுங்கள்

ஆக., 28 கிருஷ்ண ஜெயந்திகடவுள், தனக்கு மட்டுமே கஷ்டத்தைக் கொடுத்து விட்டதைப் போல நினைத்து, ஒவ்வொருவரும்,'இறைவா... என் பக்கத்து வீட்டில் உள்ளோர், என் உறவுக்காரர்களில் பலர், எந்தக் கஷ்டமும் இல்லாமல் ராஜா போல வாழ்கின்றனர். எனக்கு மட்டும் ஏன் இந்தக் கஷ்டம்... மனிதனுக்கு மனிதன் பாரபட்சம் காட்டுகிறாயே... இது நியாயமா...' என்று, கடவுளிடம் முறையிடாதோர் மிகக்குறைவு.இவர்களைப் பார்த்து கிருஷ்ணர்,'அட மனித ஜென்மங்களே... நான் யார் வயிற்றில் பிறந்தேன்... தேவகியின் வயிற்றில். என் தந்தையாக வசுதேவரை ஏற்றேன். நான் பிறந்த போது, அவர்கள் எங்கிருந்தனர் தெரியுமா... சிறைச்சாலையில். என் தாய் ஏதோ குற்றம் செய்து விட்டு அங்கே போகவில்லை. அசரீரி சொன்னது என்பதற்காக, அவளது சகோதரனே, அவளை சிறையில் அடைத்து வைத்தான். என் தந்தை எந்த பாவமும் அறியாதவர்; அவரும் சிறையில் கிடந்து கஷ்டங்களை அனுபவித்தார்.'அவர்களுக்கு இருந்த புத்திரசோகம், இந்த உலகத்தில் யாருக்கும் இருந்திருக்க முடியாது. தங்களுடைய ஏழு பிள்ளைகளை... அவர்கள் கம்சனிடம் பறிகொடுத்தனரே... தங்கள் கண்முன்னால், குழந்தைகள் கொல்லப்பட்ட போது, அவர்கள் இதயம் எப்படி துடித்திருக்கும்... கடவுளுக்கே பெற்றோர் ஆகப் போகின்றவர் என்றாலும், அவர்கள், தங்களுக்கு விதிக்கப்பட்ட கஷ்டத்தை அனுபவிக்கத்தானே செய்தனர்...' என்று சொல்லி சிரிக்கிறார்.கடவுளே குழந்தையாக வந்து பிறந்தாலும் கூட, அந்தப் பெற்றோர் அனுபவிக்க வேண்டிய கர்ம வினைகளை அனுபவித்து தான் ஆக வேண்டும். இதுதான் கிருஷ்ண பிறப்பு, மனித குலத்துக்கு உணர்த்தும் தத்துவம். தங்களுக்கு, கிருஷ்ணரைப் போல புத்திசாலியான குழந்தை பிறக்க வேண்டும் என்று, ஒவ்வொருவரும் நினைக்கின்றனர். இறைவழிபாட்டை முறையாக மேற்கொள்வோருக்கு மட்டுமே இப்படிப்பட்ட குழந்தைகள் பிறக்கும் என்கிறது கிருஷ்ண பிறப்பு புராணக்கதை.கிருஷ்ணரின் தந்தை வசுதேவர், முந்தைய பிறப்பில், சுதபா என்ற மன்னராக இருந்தார். அவருக்கு பிருச்னி என்பவள் மனைவியாக அமைந்தாள். அவர்கள் இருவரும் உலக நன்மையை வேண்டி, தங்கள் உணர்வுகளை அடக்கி, தவத்தில் ஆழ்ந்தனர். அவர்கள் தவத்தில் மகிழ்ந்த திருமால், அவர்கள் முன் தோன்றினார். பிருச்னி அவரிடம், 'பகவானே... நீயே எங்கள் பிள்ளையாகப் பிறக்க வேண்டும்...' என்று வேண்டினாள்.'இன்னொரு பிறவியில் உன் ஆசை நிறைவேறும்...' என்று, வரம் கொடுத்தார் பகவான். அதன்படியே, சுதபாவும், பிருச்னியும் - வசுதேவர், தேவகியாகப் பிறந்து வாழ்வில் இணைந்த போது, திருமால், கிருஷ்ணர் என்னும் பெயரில், அவர்கள் பிள்ளையாக அவதாரம் செய்தார். புத்திசாலித்தனத்துடன் நடந்து, உலகத்தில், தர்மத்தைக் நிலைநாட்டினார்.கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமானது வெண்ணெய். அதனால் தான் அவரை, 'நவநீத கிருஷ்ணன்' என்பர். 'நவநீதம்' என்றால், வெண்ணெய். கிருஷ்ண ஜெயந்தியன்று, அவருக்கு பிடித்தமான வெண்ணெய், நெய் பலகாரங்கள் நைவேத்யம் செய்ய வேண்டும். ஏழைக் குழந்தைகளுக்கு ஆடை தானம் வழங்க வேண்டும்.கஷ்டங்களை சவாலாக ஏற்று, அவற்றை சமாளிக்கும் பக்குவத்தையும், தாங்கும் சக்தியையும் கிருஷ்ணரின் பிறந்த நாளில் வேண்டிப் பெறுவோம்.***தி. செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !