ஊர் கூடித் தேர்! (17)
காலத்தால் அழியாத பாடல்களை படைத்த, எம்.எஸ்.விஸ்வநாதனின் சாதனைகள் என்றும் மறையப் போவதுமில்லை. அவரது, 50 ஆண்டு கலைச்சேவைக்கு பாராட்டு விழா எடுக்க, கலைமாமணி யோகா மற்றும் சுனில் மேனன் மூலம் அணுகினேன். அப்போது, உடல் சற்று நலிந்திருந்தாலும், அவர் உடனே ஒப்புக் கொண்டார்.குவைத் பாராட்டு விழாவில், இந்தியன் பிரன்ட்லைனர்ஸ் நுாலின், 10ம் பாகம் வெளியீடு மற்றும் திறமையான பாடகர்களுக்கு போட்டி வைத்து, 'மெல்லிசை மன்னர்' விருது தரவும் சம்மதித்தார்.'நிகழ்ச்சியில் நான் பாட வேண்டுமென்றாலும் சொல்லுங்கள் பாடுகிறேன். என் நிகழ்ச்சி என்பதால் என் பாடல்களை தான் பாட வேண்டும் என்றில்லை. இன்றைய பிரபல பாடல்களையும் சேருங்கள். அப்போது தான் நிகழ்ச்சி களை கட்டும்...' என்று ஒப்புதல் தந்தார்.அவரது, 'ஹேண்ட் பேக்'கை எப்போதும் கக்கத்திலேயே வைத்திருப்பார். அதில், மூக்கு கண்ணாடி, பேனா, பேப்பர் இருக்கும்.'கொடுங்கள் நான் எடுத்து வரேன்...' என்றாலும் கேட்க மாட்டார். 'வேணாம், எனக்கு, 'கன்டினியூடி' போயிரும். அப்புறம் மறந்திடுவேன்...' என்று சிரிப்பார்.பேச்சில் இயல்பான நகைச்சுவை இழையோடுவது இவரது சிறப்பு.'நான் செத்துப் போனாலும் கூட, என் ஞாபகமாய் இந்த பாடலை நீ மேடைகளில் பாட வேண்டும்...' என்று, கண்ணதாசன் கேட்டுக் கொண்டதன்படி, 'புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே' பாடலுடன் ஆரம்பித்து, உருகினார், எம்.எஸ்.வி., இன்று நாடு முழுவதும் இருக்கும் இசைக் குழுக்களுக்கு, எம்.எஸ்.வி., தான் முன்னோடி. மேல்தட்டு மக்களுக்கு மட்டும் என்றிருந்த இசைக் கச்சேரியை, இவர், 1958ல், அனைவரும் ரசிக்கும்படி, நண்பர்களுடன் சேர்ந்து இசைக் குழு ஆரம்பித்து, வெற்றி பெற வைத்தார்.ஒருமுறை பழகிவிட்டால் அப்புறம் அவர், நட்புக்கு அடிமை.ஆரம்பகட்ட சினிமா பிரவேசம் முதலே பூர்ணிமாவுடன் அறிமுகம் உண்டு. மிகவும் அன்போடும், பண்போடும் பழகுவார். பேட்டிகளுக்கு நன்றாக ஒத்துழைப்பார். மலையாளத்தில் அவர் நடிக்கும்போது, கேரளாவில் அவரை சந்தித்து நிறைய எழுதி இருக்கிறேன்.மவுனகீதங்கள் படத்தின் கதையை, அது படமாகும்போதே ஒரு வார இதழில் தொடராக எழுதினார், பாக்யராஜ். தொடரும், படமும், 'சூப்பர் ஹிட்' ஆனது.'சாவி' இதழில், அது மாதிரி ஒரு, 'ஹிட்' தரவேண்டும்; அதுவும் பாக்யராஜ் மூலம் என, ஆசைப்பட்டார், ஆசிரியர் சாவி. அதற்காக சிலர் மூலம் பாக்யராஜை அணுகியும், பலன் இல்லை.'பூர்ணிமா பாக்யராஜை உங்களுக்கு பழக்கம் தானே... அவர் மூலம் பாக்யராஜை எப்படியாவது நமக்கு ஒரு தொடர் எழுத வைங்களேன்...' என, ஆசிரியர் சாவி கூறியதும், என்னால் தட்ட முடியவில்லை.அந்த நேரம், கேரளத்தில் எங்கள் நிறுவனத்தின், 'ஸ்டிரைக்' காரணமாய் சென்னையில் தங்கி, 'சாவி' இதழுக்காக ஊர் சுற்றிக் கொண்டிருந்தேன்.பூர்ணிமாவிடம் படப்பிடிப்பு நடக்கும் இடத்தை அறிந்தேன். சின்ன வீடு படப்பிடிப்புக்கு இடையே நேராகவே பாக்யராஜை சந்தித்து என்னை அறிமுகப்படுத்தி, விபரம் சொன்னேன்.முன் அனுமதி இல்லாமல் அவரை சந்திப்பதால் கோபப்படுவார் என்று நினைத்தேன். ஆனால், பூர்ணிமாவிடமிருந்து தகவல் வந்திருக்கும் போல். என்னுடன் மென்மையாய் பேசி, தொடருக்கும் ஒப்புக்கொண்டார்.ஆசிரியர் சாவியிடம் போனில் அந்த விபரத்தை சொல்ல, அவரால் நம்ப முடியவில்லை.கண்ணை தொறக்கணும் சாமி படத்தின் முதல் இரண்டு அத்தியாயங்கள் வாங்கி கொடுத்த பின், அவருக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. பரபரப்பாய் விளம்பரம் செய்து, தொடர் ஆரம்பித்தபோது, எங்கள் நிறுவனம் திறக்கப்பட்டு விட, 'அப்செட்' ஆனார், சாவி.'நீங்க போயிட்டா பாக்யராஜிடமிருந்து, அத்தியாயங்களை யார் வாங்கி தர்றதாம்... பேசாம நீங்க, 'சாவி' இதழிலேயே வேலைக்கு சேர்ந்திடுங்க. அங்கே உங்களுக்கு என்ன சம்பளமோ அதை கொடுத்திடறேன்...' என்றார்.மத்திய அரசின் பெட்ரோலிய கம்பெனி வேலையை விடவில்லை. தொடர் வாங்கித் தர வேறு ஏற்பாடு செய்தேன். அப்புறம், பாக்யராஜை குவைத்துக்கு அழைக்க பலமுறை முயன்று, கடைசியில் பூர்ணிமாவும் இவரும், 2017ல் வந்து சிறப்பித்தனர்.பொதுவாய் குவைத் வரும் விருந்தினர்களை, பாலைவனத்தில் பரவி கிடக்கும் ஒட்டக பண்ணைகளுக்கு அழைத்துச் செல்வது வழக்கம். அப்படி, நாங்கள் இவர்களையும் அழைத்து போனபோது, மெய்சிலிர்க்கும்படி ஒரு சம்பவம் நடந்தது. — தொடரும்என்னிடம், 'சேவை மேல் உங்களுக்கு ஆர்வம் எப்படி வந்தது?' என, நிறைய பேர் கேட்பர்.அது, வேறு எங்கிருந்தும் வந்துவிடவில்லை. சிறு வயதிலிருந்தே பெற்றோரின் செயல்களிலிருந்து களவாடியது. எங்கள் அப்பா, படிக்காதவர்; தீவிர விவசாயி; மனதிலும், செயலிலும் எந்தவித வன்மமும் வைத்துக் கொள்ளாத பரோபகாரி; தான் உண்டு, தன் காரியம் உண்டு என்று இருப்பவர்.ஆனால், ஊருக்கு தேவையான சேவைகளைச் செய்ய முன் நிற்பார். ஆறு, குளம், ஏரி, வயலுக்கு பயணிக்க வேண்டிய வழித்தடம், அறுவடை நாளில் தேவைப்படும் களம் என, எல்லாவற்றையும் செப்பனிடுவார்.அதே மாதிரி, கோவில் புனரமைப்பை செய்வார். கூலிக்கு வருபவர்களுக்கு அவர் அள்ளிக் கொடுக்கும் போது, பலன் பெற்றவர்களின் சந்தோஷம், எங்களை அடிமைப்படுத்தியது. கெடுத்து மகிழ்பவர்களுக்கிடையே, கொடுத்து பார்க்கும் சந்தோஷம் பெரிது என்பது உண்மை.அதே வழியில் சகோதரர்களும், எங்கள் ஊரில் பொது காரியங்களை தொடர்ந்து செய்து வருகின்றனர். இதே மனநிலையில் கூட்டுக் குடும்பத்தில் எங்கள் வாரிசுகளும் சேவையை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர் என்பது மகிழ்ச்சியான விஷயம்.என். சி. மோகன்தாஸ்