அன்புள்ள அம்மாவுக்கு, நான், 36 வயது பெண். என் சிறுவயதிலேயே அப்பா இறந்து விட்டார். சொத்து எதுவும் சேர்த்து வைக்கவில்லை, அப்பா. எனக்கு, மூன்று அக்காக்கள். அம்மா, மருத்துவமனை ஒன்றில் நர்சாக பணிபுரிந்து தான், எங்களை வளர்த்தார். சொந்தமாக வீடு மட்டும் உண்டு. மூன்று அக்காக்களை படிக்க வைத்து, திருமணம் செய்து வைப்பதற்கே படாதபாடு பட்டுவிட்டார், அம்மா. என்னை, 10ம் வகுப்பு வரை மட்டுமே படிக்க வைக்க முடிந்தது. நானும், குடும்ப சூழ்நிலை கருதி, மேற்கொண்டு படிக்காமல், தையல் பயிற்சி வகுப்புக்கு சென்றேன். அப்போது தான், ஒருவர் எனக்கு அறிமுகமானார். எம்.ஏ., படித்தும் சரியான வேலை கிடைக்காததால், சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டி வந்தார். என் காதலை அம்மாவிடம் சொல்ல, எங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார். நான், தையற்காரர் ஒருவரிடம் வரும் ஜாக்கெட் துணியை வாங்கி வந்து, அதை வீட்டிலேயே தைத்து கொடுப்பேன். அக்கம்பக்கத்தினருக்கும், பாவாடை, புடவைக்கு ஓரம் தைப்பது, ஜாக்கெட், சுடிதார் தைத்து கொடுத்து சம்பாதிக்க ஆரம்பித்தேன். அந்த பணத்தில், என் கணவரை, ஓய்வு நேரத்தில் 'கம்ப்யூட்டர்' பயிற்சி வகுப்புக்கு அனுப்பி, படிக்க வைத்தேன். தற்போது, தனியார் நிறுவனம் ஒன்றில் மாத சம்பளத்தில் பணிபுரிகிறார். விடுமுறை நாட்களில் ஆட்டோ ஓட்டுவார். ஓரளவு கஷ்டம் இல்லாமல் குடும்பம் நடத்த முடிந்தது. இதற்கிடையில், எனக்கு இரு ஆண் குழந்தைகள் பிறந்தனர். இப்போது, பள்ளியில் படித்து வருகின்றனர். வீட்டின் சூழ்நிலை மற்றும் வருமானம் ஈட்ட வேண்டி, இவ்வளவு காலமும் செக்கு மாடு போல் ஓடி விட்டேன். இதனால், எனக்கு நட்பு வட்டமே இல்லாமல் போய்விட்டது. யாராவது தோழிகளுடன் சிரித்து பேசியபடி செல்வதை பார்த்தால், ஏக்கமாக இருக்கும். என் குழந்தைகளுடன் நட்பாக பழக விரும்பினாலும், 'அம்மா' என்ற வட்டத்துக்குள் என்னை கட்டுப்படுத்தி விடுகின்றனர். என் கணவருக்கும், நண்பர்கள் அதிகமாக இல்லை. என்னிடம் துணி தைக்க வரும் பெண்களும், தொழில் சார்ந்து மட்டுமே பேசிவிட்டு செல்கின்றனர். 'முகநுால், எக்ஸ், போன்ற, 'டிஜிட்டல்' தொழில்நுட்பம் பற்றி அதிகம் தெரியாது. தனிமையில் இருப்பதாக உணர்கிறேன். நல்ல தோழிகள் அமையாமல் போனதற்கு, என்னிடம் தான் பிரச்னையோ என்றும் எண்ணுகிறேன். இருப்பினும், நல்ல நட்புக்காக மனம் ஏங்குகிறது. நான் என்ன செய்யட்டும் அம்மா?
- இப்படிக்கு, உங்கள் மகள். அன்பு மகளுக்கு, எதிர்பார்ப்பு இல்லாத நட்பு, நிலைக்கும்! நட்பு என்பது பூஞ்செடியல்ல; தோட்டத்தில் நட்டு வளர்த்து பூப்பறிக்க முடியாது. நட்பு என்பது, உணவுப் பண்டமுமல்ல; கிலோ கணக்கில் வீட்டுக்கு வாங்கி வந்து உண்டு மகிழ. சிறந்த ஆளுமைப்பண்புகள் உள்ளோர், எல்லாருடனும் நட்பாய் இருக்கின்றனர். எதிராளி பேசக் காத்திருக்காமல், நாமே முதலில் பேச்சைத் தொடங்க வேண்டும். சிறு புன்னகை கூட நட்புக்கான கிரியா ஊக்கி தான். நான் சொல்வதையெல்லாம் செய். உனக்கான நட்புவட்டம் இயல்பாக பெருகும். * மூன்று அக்காமார் வீடுகளுக்கு அடிக்கடி சென்றுவா. அவர்களையும் உங்கள் வீட்டுக்கு வர வைத்து உபசரி. அக்காக்கள் தோழிகளாகக் கூடாதா? * துணி தைக்க வரும் பெண்களின் கைபேசி எண்ணை வாங்கி, ஒரு 'வாட்ஸ் - ஆப்' குழுமத்தை உருவாக்கு * முகநுாலில் சேர். நம்பிக்கையான நுாறு பெண் நட்புகளை ஆதரி. யாருக்கும் தேவை இல்லாமல், 'லைக், கமென்ட்' போடாதே. மவுன பார்வையாளராக இரு * இருமகன்களின் தோழியாகு. அவர்களிடம், நீ, உன் தையல் கதையை சொல். அவர்கள் உன்னிடம் பள்ளிக்கதையை சொல்வர் * உனக்கும், உன் கணவருக்கும் எவ்வளவு வேலைகள் இருந்தாலும், இருவரும் தினசரி ஒரு மணி நேரம் அந்தரங்கமாக பேசி மகிழுங்கள் * ரேடியோவில் பாட்டு கேள். 'ஒடிடி'யில் நல்ல சினிமாக்களும், சீரியல்களும் பார். நட்பு நட்பு என எல்லாரிடமும் போய் குழையாதே. மத்திமமாய் நட்புகளை பேணு. இதம், -பதம்-, மிதம்- சுகம் மகளே!
-என்றென்றும் தாய்மையுடன்,சகுந்தலா கோபிநாத்.