உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்பு அம்மாவுக்கு - நான், 27 வயது ஆண். படிப்பு: பி.இ., ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறேன். என் பெற்றோருக்கு நான் மூத்த மகன். எனக்கு, கல்லுாரியில் படிக்கும் ஒரு தங்கை இருக்கிறாள். அப்பா, 'போஸ்ட் மேன்' அம்மா, இல் லத்தரசி. என்னுடன் பணிபுரியும் ஒரு பெண், என்னை தீவிரமாக காதலிப்பதாக கூறி, என்னுடன் பழக ஆரம்பித்தாள். காதலிப்பதைவிட, காதலிக்கப்படுவது அதிக போதை தரும் என்பதற்கேற்ப, எனக்கும் அவள் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பை பொழிந்தோம். அவள் இல்லாவிட்டால், வாழ்க்கையே இல்லை என்ற நிலைக்கு ஆளானேன். அவளிடம், எனக்கு பிடிக்காத ஒரே விஷயம், அவள் எப்போதும், யாருடனாவது, மொபைல் போனில் பேசிக்கொண்டே இருப்பது தான். அப்படி பேசுபவர்களில் பெரும்பாலோர் ஆண்களாக இருப்பது தான் எனக்கு ஆத்திரத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தும். இது சம்பந்தமாக, அவளை கண்டித்தால், உடனே கோபித்துக்கொண்டு, இரண்டு நாட்களுக்கு என்னுடன் பேச மாட்டாள். அப்போதெல்லாம் நான் படும் வேதனை சொல்ல முடியாது. மேலும், என்னுடன் பேசாமல் இருக்கும் நாட்களில், பொட்டு வைக்காமலும், பூ வைக்காமலும், பழைய, 'டிரஸ்' போட்டு, பொலிவிழந்து காணப்படுவாள். வழக்கமாக நன்றாக, 'டிரஸ்' செய்து, சிறிதளவு, 'மேக்-அப்' உடன் வரும் அவள், இப்படி வருவதைப் பார்த்தால், அழுகையாக வரும். மனம் இரங்கி, நானே அவளுடன் பேச ஆரம்பித்து விடுவேன். இரண்டு ஆண்டு காதல் வாழ்க்கை, போதும் என்று நினைத்து விட்டாளோ என்னவோ, ஒருநாள், 'உன்னை எனக்கு பிடிக்கவில்லை. இனிமேல் என்னுடன் பேசாதே, பார்க்காதே...' என்று கூறியதோடு, வேறு கிளை அலுவலகத்துக்கும் பணிமாறுதல் பெற்று சென்று விட்டாள். என்னால் இதை தாங்கிக்கவே முடியவில்லை. பலமுறை அவளுடன் பேச முயற்சித்தும், அவள் பேச மறுத்து விட்டாள். 'மீறி தொந்தரவு செய்தால், தற்கொலை செய்து கொள்வேன்...' என்கிறாள். அவள் இல்லாமல், என்னால் வாழவே முடியாது. வேலையில் கவனம் இல்லாமல், பைத்தியம் பிடித்தது போல் இருக்கிறேன். நான் என்ன தவறு செய்திருந்தாலும், மன்னிப்பு கேட்கவும் தயாராக இருக்கிறேன். அவளை சந்தேகப்பட்டது நிஜம் தான். அதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா? நான் என்ன செய்யட்டும் அம்மா. இப்படிக்கு, உங்கள் மகன். அன்பு மகனுக்கு - ஒரு புதிய விஷயத்தை புரிந்து கொள்ளவும், கேள்விகள் கேட்கவும், சந்தேகம் ஒரு துாண்டுகோலாக அமைகிறது. அறிவின் நுழைவாயிலாகவும் சந்தேகம் செயல்படுகிறது. ஆனால், உறவுமுறையிலும், காதலிலும் கொள்ளும் சந்தேகங்கள் கடுமையான சேதாரங்களை விளைவிக்கும். பரஸ்பரம் நம்பிக்கை இல்லாத உறவுமுறைகள் தோற்றுப் போகும். லட்சம் ஆண்களில், இவனை தேர்ந்தெடுத்து ஒரு பெண் காதலிக்கிறாள். லட்சம் பெண்களில், இவளை தேர்ந்தெடுத்து ஓர் ஆண் காதலிக்கிறான். இதற்கு மேல் ஓர் ஆணுக்கோ, பெண்ணுக்கோ என்ன உத்தரவாதம் வேண்டும்? உன் காதலியின் போன் பேச்சை எடுத்துக்கொள்வோம். ஆண் நண்பர்கள் வைத்திருக்கும் பெண்கள் அனைவரும் மோசமானவர்கள் அல்ல. சில பெண்கள் ஆண் நண்பர்களிடம் ஜாலியாக பேசுவர். இவ்வகை பேச்சில் எந்தவித உள்நோக்கமும் இல்லாமல் வேடிக்கையாக பேசி ஒருவரை ஈர்க்க முயற்சிப்பது தான். இவ்வகை பேச்சுகளால் இருபக்கமும் எந்த ஆபத்தும் விளையப் போவதில்லை. இப்படி பேசுவது ஒரு வகை வடிகால். மகிழ்ச்சி தரும் எந்த விஷயமும் காமம்தான் என்றார், உளவியல் நிபுணர், சிக்மன்ட் பிராய்ட். வேலைக்கு போகும் பெண்கள், அலுவலக ஆண்கள் உறவுமுறை மற்றும் பொதுவெளி ஆண்களிடம் பேசத்தான் செய்வர். அவர்களை சந்தேகப்பட முடியுமா? ஆண்மைக் குறைவானவன், திறமை இல்லாதவன் தான் அதிகம் சந்தேகப்படுவான். உன் காதலியை நீ, சந்தேகப்படும் போதெல்லாம், அவள் ஒப்பனை குறைத்து, பொலிவிழந்து காட்சியளித்திருப்பது, அவளது அஹிம்சாமுறை எதிர்ப்பை காட்டியிருக்கிறாள். ஒரு தேவதை, உனக்கு, 'டாட்டா' காண்பித்து பறந்து போய் விட்டாள். இனி, அவளை துரத்தி துன்புறுத்தாதே. சில காதல்கள், கண்ணாடி பொம்மைகள் போல உடைந்து விட்டால் ஒட்டாது. திருமணத்தில் முடிவது மட்டும் காதல் அல்ல. அவரவர் பாதையில் பிரிந்து, கைகுலுக்கிக் கொள்வதும் நல்ல காதல்தான். இனி, காதலுக்குள் பிரவேசிக்காதே...ஒருமுறை சூடுபட்டது போதும். பெற்றோரிடம் கூறி உனக்கு வரன் பார்க்கச் சொல். இறுதியாக ஒரு வார்த்தை... திருமணத்திற்கு பின் மனைவியை சந்தேகப்படாதே. சந்தேகக்கோடு அது சந்தோஷக்கேடு; இதை மறந்தவர் வீடு, துன்பம் வளர்ந்திடும் காடு! -என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Natarajan Ramanathan
ஆக 30, 2026 23:12

இந்த பெண் சும்மா டைம் பாஸுக்காக காதலித்ததாக தெரிகிறது. விலகியது நல்லதே.


Mohan Mg
ஆக 30, 2026 16:09

உள்நோக்கமும் இல்லாமல் வேடிக்கையாக பேசி ஒருவரை ஈர்க்க முயற்சிப்பது தான் : இதை ஆண் செய்தால் இந்த அம்மா அவனை பொருக்கி உட்டுட்டு ஒடிடுன்னு சொல்லும்


நிக்கோல்தாம்சன்
ஆக 30, 2026 09:59

இது போன்று செரோடோனின் , டோபோமைன் இழப்பு என்று அலையாமல் உடனடியாக நீச்சல் பழகு மகனே