பா - கே அ லுவலகம், காலை நேர பரபரப்பில் இருந்தது. 'அப்பப்பா... வெயிலும், மழையும் மாறி, மாறி வந்து, படுத்துதுபா...' என்றவாறு, என் அருகில் வந்து அமர்ந்தார், 'திண்ணை' நாராயணன். 'கையில் குடை ஒன்றை வைத்திருங்கள் சமயத்துக்கு உதவும்...' என்றேன். மேஜை மீதிருந்த, அன்றைய நாளிதழை எடுத்து, படிக்க ஆரம்பித்தார், நாணா. 'தங்கம் விலை உயர்ந்தது!' என்றிருந்த தலைப்பு செய்தியை சத்தமாக படித்தவர், 'என் பேத்திக்கு கல்யாணம் பண்ணனும். தங்கத்தின் விலை இப்படி உசந்துட்டே போனா, எப்படி கல்யாணம் காட்சியை நடத்துவது!' என்றார், கவலையுடன். 'இங்கு மட்டுமல்ல, உலகம் முழுக்கவே இந்த பிரச்னை இருக்கு. இதற்கு பல காரணங்கள் உள்ளன...' என்றேன். 'அது என்ன மணி?' என கேட்டார், நாணா. சமீபத்தில் நான் படித்த தகவல்களை கூற ஆரம்பித்தேன்: * அமெரிக்காவும், ஐரோப்பாவும் தங்க வியாபாரத்தில் முன்னிலை வகிக்கிற நாடுகள் * 'லண்டன் புல்லியன் மார்க்கெட் அசோசியேஷன் - எல்பிஎம்ஏ' என்ற அமைப்பே காலங்காலமாக உலகத்தின் தங்க மதிப்பை நிர்ணயம் செய்கிறது. காலை 10:30 மணிக்கும், மாலை 3:00 மணிக்கும் என, இரு முறை தங்கத்தின் விலை மாறுபடும் * லண்டன் புல்லியன் மார்க்கெட் அசோசியேஷன், 100க்கும் மேலான உலகத்தின் மிகப்பெரிய வங்கிகள், நிதி நிறுவனங்களை உள்ளடக்கியது. ஐந்து நிறுவனங்கள் இதை பிரதிநிதித்துவம் செய்யும் * தங்கத்தின் விலை, தேவை மற்றும் வரத்துக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்படுகிறது. அதாவது, நம் தேவை 100 டன் என்றால், வரத்து 90 டன் மட்டுமே இருக்கும் பட்சத்தில், மீதமுள்ள அந்த தங்கத்துக்கான தேவை அன்றைய தினத்தில் அதிகமாக இருப்பதால் விலை அதிகமாக இருக்கும் * அதே நேரம், தேவை குறைவாகவும், வரத்து அதிகமாகவும் இருக்கும் போது தங்கத்தின் விலை குறையும். இவற்றில், சீனா மற்றும் இந்தியாவில் தான் தங்கத்தின் தேவை அதிகம் இருக்கிறது * சீனா உலகிலேயே அதிக அளவு நேரடி தங்கத்தை கையிருப்பாகவும், பேப்பர் கோல்டாகவும் வைத்திருக்கிறது * எப்போதெல்லாம் பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடைகிறதோ அப்போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிக்கும் * தங்கம், வெளிநாடுகளில் இருந்து, அனுமதிக்கப்பட்ட வங்கிகள் மூலம் இறக்குமதி செய்யப்படுகிறது * இறக்குமதி செய்யப்பட்ட தங்கம் அனுமதிக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவே புல்லியன் டீலர்ஸ் அல்லது புல்லியன் டிரேடர்ஸுக்கு விற்கப்படுகிறது * வாங்கும் திறன் மற்றும் அன்றைய தேவைக்கேற்ப தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது * தங்கம் எந்த நாட்டிலிருந்து வாங்கப்படுகிறதோ, அந்த நாட்டின் விலை, கஸ்டம்ஸ் டியூட்டி, மற்ற செலவுகள் சேர்த்து, 'இந்தியன் புல்லியன் ஜூவல்லர்ஸ் அசோசியேஷன் - ஐபிஐஏ' எனப்படும் மும்பையில் உள்ள இந்திய தங்க வியாபாரிகள் அமைப்புக்கு விற்கப்படுகிறது * ஒரு நாட்டின் பொருளாதாரம் வளமாக இருக்க தங்கத்தின் விலை மிகவும் குறைவாக இருக்க வேண்டும். அதிகமாக இருந்தால் அனைவரும் அதன் மீதே முதலீடு செய்வர். மற்ற பொருட்கள் மற்றும் சேவைகள் நலிவடைந்து விடும் * ஒரு காலத்தில் அதாவது, கடந்த 1970களுக்கு முன் வரை தங்கம் பிடித்து வைத்திருந்த முதல் இடத்தை இன்று அந்நிய செலாவணி எனப்படும் வெளிநாட்டுப் பணம்(பெரும்பாலும் அமெரிக்க டாலர்) பிடித்து விட்டது * ஒரு நாடு தன்னிடம் இருக்கும் தங்கத்தின் அளவை கொண்டு தான் உள்நாட்டில் பணத்தை அச்சிடும் * இப்போது நம்மிடம் இருக்கும் அந்நியச் செலாவணி கையிருப்பை கொண்டு பணம் அச்சிடப்படுகிறது * 'ஹால் மார்க்' என்பது இந்தியாவில் தங்க அணிகலன்களின் தரத்தை மதிப்பிடும் முறையாகும். 'ஹால் மார்க்' குறியிடப்பட்டிருக்கும் தங்கமானது. இந்திய தர நிர்ணயக் கழகம் வகுத்திருக்கும் விதிமுறைகளை பின்பற்றி, வாங்கும் தங்கத்தின் துாய்மை மற்றும் அளவுக்கேற்ற சரியான விலையை செலுத்துவதற்கு உறுதியளிக்கிறது.
டெயில் பீஸ்: * மனிதனின் உடலில், 0.2 மில்லிகிராம் தங்கம் இருக்கிறது. பெரும்பாலும் ரத்தத்தில் தங்கம் இருக்கிறது * ஒலிம்பிக் கோல்டு மெடலில் 1.34 சதவீதம் மட்டுமே தங்கம் சேர்க்கப்பட்டிருக்கும் * பல கோடி டன் எடையுள்ள தங்கம் சூரியனில் இருக்கிறது * உலகத்திலுள்ள கடல்கள் முழுவதிலும் சுமார், 20 மில்லியன் டன் தங்கம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது * 'ஆரோபோபியா' என்றால், தங்கத்தின் மீதான பயத்தை குறிக்கிறது. - இப்படி நான் சொல்லி முடித்ததும், 'அடடா... இதில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா?' என்று அங்கலாய்த்தார், நாராயணன். தன் கேபினில் இருந்து தலையை நீட்டிய லென்ஸ் மாமா, 'பழைய புத்தகங்களையே உருட்டிட்டு இருக்கக் கூடாது. அவ்வப்போது, 'லேட்டஸ்ட்' தகவல்களை தெரிந்து கொள்ளவும் முன்வரணும்...' என்றார். காது கேட்காத மாதிரி, 'திண்ணை' பகுதிக்கான மேட்டரை எழுத ஆரம்பித்தார், நாணா.
ப ஒருமுறை வெளியூரிலிருந்து சென்னைக்கு திரும்பி வந்து கொண்டிருந்த, என்.எஸ்.கிருஷ்ணனுக்கு சொந்தமான வேன் விபத்துக்குள்ளானது. நல்ல வேளையாக உயிர்ச்சேதம் எதுவுமில்லை. அப்போது, சென்னையில் இருந்த, என்.எஸ்.கிருஷ்ணன் செய்தி கேட்டு, காரில் விரைந்து சென்றார். 'நல்ல வேளை, எல்லாரும் பிழைச்சுட்டாங்க...' என்று சொல்லிக்கொண்டே, விபத்துக்குள்ளாகி கிடந்த வேனை சுற்றி பார்த்தார். கீழே, சாத்துக்குடி பழங்கள் சிதறிக் கிடந்தன. அவற்றை எடுத்து, அங்கு இருந்தவர்களுக்கெல்லாம் ஒவ்வொன்று தந்துவிட்டு, தாமும் ஒரு பழத்தை உரித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவ்வழியாக சென்று கொண்டிருந்த ஒரு பஸ் இவரைக் கண்டதும் நின்று விட்டது. பஸ்ஸில் இருந்த பயணிகள், கிருஷ்ணனை சூழ்ந்து கொண்டனர். 'என்ன வேன் இப்படி கிடக்கிறதே?' என்று பரபரப்போடு கேட்டார், பயணி ஒருவர். அதற்கு, 'ஒண்ணுமில்லே, நடுவழியிலே பழம் சாப்பிடணும்ன்னு நினைச்சோம். அதான் இப்படி வேனை சாச்சு வெச்சுப்புட்டு பழம் சாப்பிட்டுக்கிட்டிருக்கோம்...' என்றார், கலைவாணர். எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.