உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

சி.ஆர்.ஹரிஹரன், ஆலுவா, கேரளா: 'ஊழலை ஒருபோதும் சகிக்க மாட்டேன். தவறு செய்தால், அமைச்சர் பதவி பறிக்கப்படும்...' என்று, முதல்வர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளாரே... அமைச்சர்கள் மட்டுமல்ல... அரசு ஊழியர்களைக் கூட, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்யலாம்; செய்தால் தான் ஊழலை ஒழிக்க முடியும் என்று ஆலோசித்து வருகிறார், முதல்வர் விஜய். 'சிஸ்டம்' சீராகிறதா என்று பார்ப்போம்! பா.பொன்ரோஸ், சென்னை: 'தமிழகத்தில் இறுதி செய்யப்பட்ட மூன்று யானை வழித்தடங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்...' என, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதே... யானைகள் ஒரு வழித்தடத்தை உருவாக்கி இருந்தால், பல ஆண்டுகளுக்கு மறக்காமல், அதே வழித்தடத்தில் தான் செல்லும். அப்படி செல்லும் பாதையை ஆக்கிரமித்து வீடுகளும், சொகுசு விடுதிகளும் கட்டிவிட்டு, 'ஊருக்குள் யானை வருகிறது...' என்று குறை கூறி, அவைகளை விரட்டுகின்றனர். உயர் நீதிமன்றம் சரியான உத்தரவை பிறப்பித்துள்ளது! * எம்.சுப்பையா, கோவை: 'மதுப்பழக்கத்திலிருந்து, அடுத்த தலைமுறையைக் காப்பதே அரசின் இலக்கு...' என, தமிழக அமைச்சர், விக்னேஷ் கூறியுள்ளாரே... மதுப்பழக்கம் மட்டுமல்ல; தலையாய பொறுப்பாக, போதைப் பழக்கத்திலிருந்து, நம் இளைஞர்களைக் காப்பாற்றியே ஆக வேண்டும்! * எஸ்.கதிரேசன், வேலுார்: மும்மொழியை, 6ம் வகுப்பில் இருந்தே தொடங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது வரவேற்கத்தக்கதா? ஆறாம் வகுப்பிலேயே ஆரம்பித்தால், மாணவர்களுக்கு சுமை தெரியாது. ஒன்பதாம் வகுப்பில் ஆரம்பித்தால், அடுத்தடுத்து பொதுத் தேர்வுகளுக்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தயாராக வேண்டிய மாணவர்கள் திணறிப் போவர். உச்ச நீதிமன்றம் கூறி இருப்பது சரியே! கே.வல்லவன், வேலுார்: 'சாலை விபத்துகளைக் குறைக்க, தனி செயல் திட்டம் உருவாக்கப்படும்...' என்று, முதல்வர் விஜய் அறிவித்திருப்பது ஏற்புடையதா? சிறந்த திட்டம். சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டு, நல்ல முறையில் கையாளப்பட வேண்டும். முதல்வர் எந்தவொரு நல்ல விஷயம் செய்ய முற்பட்டாலும், அதை கையாளும் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை, முதல்வரின் சிந்தனையை ஒட்டி சிந்தித்து செயல்பட வேண்டுமே... நடக்கிறதா பார்ப்போம்! ஆர்.ஜனனி, மதுரை: முன் அறிவிப்பு இல்லாமல் முதல்வர், ஆய்வுக்கு வருவதால், அரசு ஊழியர்கள், அச்சத்தோடேயே பணிபுரிய வேண்டிய நிலை ஏற்படுமா? நேர்மையாக பணி புரிந்தால், எதற்கு அச்சப்பட வேண்டும், ஜனனி? * ஆர்.குறிஞ்சி, தஞ்சை: 'மே.வங்கத்தில், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால், மூன்று மடங்கு அபராதம் விதிக்கப்படும்...' என்று, மே.வங்க அரசு அறிவித்துள்ளதே... சாலை மறியல், போராட்டம் என்று, அக்கிரமம் செய்பவர்களின் கொட்டம் மே.வங்கத்தில் இனி அடங்கி விடும். தமிழக அரசும் இந்த தண்டனை முறையை அமல்படுத்தினால், 'டோல்கேட்'களை அடித்து நொறுக்கும், ரயில்-பஸ்களை துவம்சம் செய்யும் கும்பல்கள், பெட்டிப் பாம்பாக அடங்கி விடும். மத்திய அரசு இந்த நடைமுறையை மேற்கொண்டால், கரப்பான் பூச்சிகள், கொசுக்கள் மற்றும் ஒட்டுண்ணிகளின் கொட்டம் அடங்கி விடும்!எம்.பாஸ்கர், தஞ்சாவூர்: 'இப்போது இருக்கும் சுகாதாரத் துறை அமைச்சர் யாருன்னே எனக்குத் தெரியாது...' என்கிறாரே நடிகர், சத்யராஜ்... தமிழக அரசியலில் சத்யராஜ், ரொம்பவே, 'அப்டேட்' ஆக இருக்கிறார் என்று எடுத்துக் கொள்வோம்! ஜி.சுந்தரமூர்த்தி, முசிறி: எம்.பி.,க்களுக்கென, ஆண்டுக்கு, 63 கோடி ரூபாய், செலவாகிறதாமே...ஒவ்வொரு எம்.பி.,க்கும் தங்களை பராமரிக்க அரசு இவ்வளவு பணம் செலவு செய்கிறது என்ற கணக்கு தெரியும். ஆனால், ஒருநாளும் பார்லி.,யை சரியாக, முறையாக, மக்களுக்கான சபையாக சிறப்பாக நடக்க, சில எம்.பி.,க்கள் விடுவதே இல்லை. தர்ணா செய்து, நாட்டுக்கு எதிரிகள் போல செயல்படுகின்றனர். மக்கள் நினைத்தால், இவர்களை வீட்டுக்குள் முடங்க வைக்கலாம்! * கே.ஆர்.அசோகன், ஈரோடு: 'காமராஜரின் ஆட்சியைப் போல, விஜயின் ஆட்சி, நேர்மையாக இருக்க வேண்டும்...' என, காங்., கட்சியின், ப.சிதம்பரம் விருப்பம் தெரிவித்துள்ளது பற்றி... காங்., கட்சியில், வேறு யாரையும், காமராஜருக்கு நிகராக ஒப்பிட முடியாது என்பதை, ப.சிதம்பரமே ஒப்புக்கொள்கிறார் பாருங்கள்... நேரு, ராஜீவ், மன்மோகன் சிங், நரசிம்ம ராவ் உட்பட! கோ.சு.சுரேஷ், கோவை: 'தமிழக மக்கள், அனைத்தையும் அறிந்தவர்கள்...' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டி உள்ளாரே... உண்மை தானே... மிக அமைதியாக ஆட்சியை மாற்றியமைத்து, மவுனப் புரட்சி அல்லவா செய்துள்ளனர், மக்கள். பெருமையுடன், சட்டை, 'காலரை' துாக்கி விட்டுக் கொள்ளலாம்! அரசியல்வாதிகளுக்கு இது புரிந்தால் சரி! பெ.பொன் ராஜபாண்டி, மதுரை: ' கட்சியில், தலைவன் அங்கும், இங்கும் ஓடுவான்; தொண்டன் அங்கேயே இருப்பான்...' என, தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர், அனிதா ராதாகிருஷ்ண ன் பேசும் அரசியல் சித்தாந்தம் தலைசுற்றுகிறதே... என்ன சொல்ல வருகிறார், அனிதா ராதாகிருஷ்ணன்? அவருடைய தலைவர், ஸ்டாலின் தானே... ஸ்டாலின், அணி மாறப் போகிறாரா அல்லது மாற்றுக் கூட்டணிக்குப் போகப் போகிறாரா? அனிதாவுடைய புதிர், விரைவில் அவிழும் என, எதிர்பார்க்கலாம்! ஒய்.எல்.ஸ்ரீரவி ராகுல், ஈரோடு: ' பார்லி., கூட்டத் தொடரில், பிரதமர் மோடியையும், மத்திய அமைச்சர்களையும் விமர்சிக்க வேண்டாம்...' என, தி.மு.க., எம்.பி.,க்களுக்கு, ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாரே... பா.ஜ.,வுடன் தி.மு.க., நெருக்கம் காட்ட விழைகிறது என்று நினைக்கத் தோன்றினாலும், காங்.,குடனான உறவை, முற்றிலும் விடவில்லை. ராகுல் உட்பட, டில்லி தலைவர்கள் பலர், தி.மு.க.,வுடன் நெருக்கமாகவே உள்ளனர்!* உ.பார்த்திபன் ஜெயக்குமார், துாத்துக்குடி: ஊழல், லஞ்சம் என, புரையோடி இருந்த பத்திரப்பதிவு அலுவலகங்களில், காட்சி மாறி இருப்பது, மக்களிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளதே... வெறும், 500 சதுர அடி வீட்டைப் பதிவு செய்ய வேண்டி இருந்தாலும், பல மட்டங்களில், 'கட்டிங்' கொடுத்தால் மட்டுமே சாத்தியம் என்ற நிலை மாறி, 'ஆன்-லைனில்' அனைத்தையும் பதியும் முறை நடைமுறைக்கு வந்து விட்டதால், மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்! ஆர்.வித்யா, சென்னை: எல்லா பள்ளிகளிலும், மாணவியருக்கு கட்டாயமாக தற்காப்பு பயிற்சியை கற்றுக் கொடுக்கலாமே... மாணவியருக்கு மட்டுமே, தற்காப்பு பயிற்சி என்றில்லாமல், மாணவர்களுக்கும் தற்காப்பு பயிற்சி மிகவும் அவசியம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !