உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

* ஏ.முகமது ஹுமாயூன், நாகர்கோவில்: ஆளுங்கட்சி உறுப்பினர்கள் என்றும் பாராமல், தவறுகளை சுட்டிக்காட்டி, தட்டிக் கேட்கும் சபாநாயகர், ஜே.சி.டி.பிரபாகர் பற்றி... சபையை சிறப்பாக வழி நடத்துகிறார் சபாநாயகர், பிரபாகர். வாக்குவாதம் முற்றும் நிலை வந்தால், அனைவரையும் அமைதிப்படுத்தி, அமர வைத்து விடுகிறார். முந்தைய சட்டசபைக் கூட்டங்கள் போல், அமளி துமளி ஏற்பட விடுவதில்லை. பாராட்டுவோம் அவரை! சுப.ராமு, காரைக்குடி: தமிழக அமைச்சர்கள், 'தினமலர்' நாளிதழில், 'டீக்கடை பெஞ்சு' பகுதியில் வெளியாகும் செய்திகளைப் படித்தால், மக்களுக்கு நிறைய நன்மைகள் செய்யலாம்; அரசுக்கும் நல்ல பெயர் கிடைக்குமே... உண்மை தான்! முதல்வரின் பார்வைக்கு, நம் நாளிதழின் அனைத்து செய்திகளும் வைக்கப்படுகின்றன. 'டீக்கடை பெஞ்சு' பகுதியும் வைக்கப்படுகிறது; நல்லதே நடக்கும் என்று நம்புவோம்! மு.நடராஜன், திருப்பூர்: அனைத்து கட்சி, எம்.எல்.ஏ.,களுக்கும், கார் மற்றும் பராமரிப்பு செலவுக்காக, மாதம் ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று, முதல்வர் விஜய் அறிவித்துள்ளாரே... தம் வேலைகளைப் பார்ப்பதற்கான அடிப்படை வசதிகள் கூட இல்லாத எம்.எல்.ஏ.,களுக்கு, மேற்சொன்ன விஷயங்கள் மிக மிக அவசியம் தான். இந்த விஷயத்தில் முதல்வர் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது! மு.நாகூர், ராமநாதபுரம்: 'படுக்கைக்குச் சென்ற, 8 வினாடிக்குள் துாங்கி விடுவேன்; தினமும், 3 மணி நேரம் மட்டுமே துாங்குவேன்...' என, பிரதமர் மோடி கூறி இருப்பது பற்றி... மோடி, ஒரு கர்ம யோகி! நாட்டின் வளர்ச்சி பற்றிய சிந்தனையிலேயே இருக்கிறார். அவருடன் இருப்பவர்கள், அவர் மூன்று மணி நேரமே துாங்குவார் எனச் சொல்ல கேட்டிருக்கிறேன். மேலும், '60 வயதிற்குப் பிறகு, எட்டு மணி நேரமெல்லாம் துாக்கம் வராது. நான்கு மணி நேர ஆழ்ந்த துாக்கமே போதுமானது...' என, என் மருத்துவ நண்பர் கூறுவார்; அதுவே, அவர்களுக்கு புத்துணர்ச்சி தந்து விடுமாம்!* ச.ஷகீலா பானு, துாத்துக்குடி: இந்திய தேர்தல் முறைக்கு, பாராட்டு தெரிவித்துள்ளாரே, அமெரிக்க அதிபர் டிரம்ப்... உலகிலேயே, நம் நாட்டு தேர்தல் முறை தான் சிறந்தது என்பது, இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது. நம் தேர்தல் முறை குறித்து, 'நொட்டு நொள்ளை' என, குறை கூறும், நம்மூர் எதிர்க்கட்சிகளை புறந்தள்ளுவோம்! தி.திருமலைசாமி, சென்னை: 'லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்களை ஆதாரத்துடன் பிடித்துக் கொடுத்தால், ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும்...' என, தமிழக அரசு அறிவித்துள்ளது பற்றி... நல்லாட்சி வேண்டும் என, சிந்தித்து ஓட்டு போட்டுள்ள மக்களாகிய நமக்கு, மிக நல்ல சந்தர்ப்பம் இது. தைரியமாக முன்வந்து, லஞ்ச ஊழல்களை ஆதாரத்துடன் வெளிக்கொண்டு வருவோம்! சென்னை எழும்பூரிலுள்ள குழந்தைகள் நல மருத்துவமனையி ல் , பிறந்த குழந்தையை கண்ணில் காட்ட, பணம் கேட்டவனை, 'வீடியோ' எடுத்து வெளியிட்ட பெண்ணைப் போல, அனைத்து மக்களுக்கும் தைரியம் வர வேண்டும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Natarajan Ramanathan
ஆக 31, 2026 03:44

தனியார் மருத்துவ மனைகளில் செவிலியருக்கு குறைந்த சம்பளம். ஆனாலும் அவர்கள் லஞ்சம் வாங்குவதில்லை. அரசு செவிலியருக்கு மிக நல்ல சம்பளம் கொடுத்தாலும் லஞ்சம் வாங்குது.


D.Ambujavalli
ஆக 31, 2026 02:30

லட்சம். ரூபாய். கிடைப்பது இருக்கட்டும் அதை அனுபவிக்க. உயிர். இருக்கு,aa? அந்த ‘பார்ட்டிகள்’. அனுபவிக்க. விட்டுவிடுவார்களா ?