அந்துமணி பதில்கள்!
ஆர்.ஹரிகோபி, புதுடில்லி: 'பாதுகாப்பு நடவடிக்கை எனக்கூறி, இணையதளங்களைப் பயன்படுத்த குழந்தைகள் அனுமதிக்கப்படாதது நியாயமற்றது; தடை செய்வதற்கு பதிலாக, சமூக வலைதளங்களில், 'சைல்டு மோடு' போன்ற பாதுகாப்பு நெறிமுறைகளை வலுப்படுத்தலாம்...' என்று, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதே... சரி தானே! இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் இணையவழியில் கல்வி கற்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனால், சமூக வலைதளங்களில், குழந்தைகளுக்கான பாதுகாப்பு நெறிமுறைகளை வகுத்து, பயன்படுத்த அனுமதிப்பதே சிறந்தது; அதோடு, பெற்றோர் கண்காணிப்பும், மிக முக்கியம்! என்.மீரான், ராமநாதபுரம்: தமிழக சிறைகளில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க, முன்னாள் சிறைத்துறை டி.ஜி.பி., சந்தீப் ராய் ரத்தோரின் உத்தரவு பற்றி... தமிழக சிறைகளில், பல கைதிகளின் நிலை பரிதாபத்துக்குரியதாக உள்ளது; சிலருக்கோ, ராஜ உபசாரம் நடக்கிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டே, இப்படி உத்தரவிட்டிருந்தார், ரத்தோர். அவரைத் தான் அரசு மாற்றிவிட்டதே! கே.சக்கரபாணி, சென்னை: கூட்டங்களில் பேசும்போது, 'லேடீஸ் அண்டு ஜென்டில்மென்' என்று சொல்கின்றனர்... ஏன், 'ஜென்டில் உமன்' என்று சொல்வதில்லை? 'லேடீஸ்' என்ற சொல்லுக்கு, 'ஜென்டில்மென்' என்ற சொல்லுக்கு இணையான மதிப்பு கொடுக்கப்படுகிறது. அரச குடும்பப் பெண்களை குறிக்க, 'ஜென்டில்உமன்' என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இன்றும் கூட, அமெரிக்க பார்லிமென்ட்டில், ஒரு பெண் உறுப்பினரைக் குறிப்பிட்டுப் பேச, 'ஜென்டில்உமன்' வார்த்தை பயன்படுத்தப்படுகிறது!* கே.மகராஜன், சீர்காழி: அரசுத்துறை மற்றும் பெரிய, 'கார்ப்பரேட்' நிறுவனங்களில் வேலை பார்ப்பதை விட, சொந்தமாக தொழில் துவங்குவதையே, கல்லுாரி மாணவ-மாணவியர் விரும்புவதாக, ஆய்வுகள் தெரிவிக்கின்றனவே... நம் மத்திய-மாநில அரசுகள், புதிதாக தொழில் துவங்குபவர்களுக்கு பல சலுகைகள் வழங்குகின்றன. அதனால், இந்த நல்ல மாற்றம். தொழில் துவங்க விருப்பமில்லாதவர்களுக்கு, இவர்களால் வேலையும் கிடைக்கிறதே, மகராஜன்! எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சி: பிரதமர் மோடியின், 'மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சி, 12 ஆண்டுகாலமாக தொடர்கிறதே... நாட்டில் நடக்கும் நல்ல விஷயங்கள், மத்திய அரசின் நல்ல திட்டங்கள், இந்த நிகழ்ச்சியின் வாயிலாக மக்களைச் சென்றடைகின்றன. மோடி, முன்பு குஜராத் முதல்வராக இருந்ததுடன், தற்போது, நாட்டின் பிரதமராகவும் பதவி வகித்து வரும், 25 ஆண்டுகால அனுபவத்தின் முதிர்ச்சி இது!* ஜி.சத்தியமூர்த்தி, ஏனங்குடி, நாகப்பட்டினம்: யார் புதிய கட்சி துவங்கினாலும், அதற்குப் பின்னணியில், பா.ஜ.,வின், அமித்ஷா இருக்கிறார் என்று, எதிர்க்கட்சிகள் பேசத் துவங்கி விடுகிறதே... பா.ஜ.,வை வழிநடத்துவதில், சாணக்கியத்தனம் மிக்கவர், அமித்ஷா. எந்த நேரத்தில், எந்த அஸ்திரத்தைக் கையிலெடுப்பார் என, கணிக்கவே முடியாது. நாட்டின் உள்துறை நிர்வாகத்திலும், அதே பாணியை பின்பற்றுவதால், எல்லாருக்கும், அமித்ஷாவை கண்டால் பீதி. அதனால், இப்படி பேசுகின்றனர்!