உள்ளூர் செய்திகள்

கேப்டன் விஜயகாந்த்! (9)

'வைதேகி காத்திருந்தாள்' படத்தில், முதலில் நடிகர், சிவகுமாரை நடிக்க வைக்கலாம் என்று யோசனை கூறியது, ஏவி.எம்., நிறுவனம். முடிவாக, 'கரிய நிறத்தில் உலவ வேண்டிய, வெள்ளைச்சாமி பாத்திரத்தில், சிவந்த சிவகுமார் நடித்தால் எடுபடாது...' என்றார், இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன். ஏவி.எம்., நிறுவனம் கொடுத்த பணத்தை கொண்டு புதிய வீட்டு வேலைகளை ஆரம்பித்த, ஆர்.சுந்தர்ராஜன், தான் ஓர் இக்கட்டில் சிக்கிக் கொண்டதை தாமதமாக உணர்ந்தார். கடந்த, 1970களில், தமிழ் சினிமாவின் பிரபலமான கதாசிரியர், வசனகர்த்தா, துாயவன். அவரும், பஞ்சு அருணாசலமும் இணைந்து படம் தயாரிக்க முடிவு செய்திருந்தனர். பஞ்சுவிடம், தன் பரிதாப நிலையை சொன்னார், ஆர்.சுந்தர்ராஜன். 'ஒண்ணும் கவலைப்படாதீங்க. இந்தாங்க பணம். இதை எடுத்துட்டு போய் ஏவி.எம்.,ல கொடுத்துருங்க. உங்க கதையை நாங்க சேர்ந்து எடுக்கறோம்...' என்றார், பஞ்சு அருணாசலம். ஆர்.சுந்தர்ராஜனின் முடிவை, சிலர் வழக்கம் போல எதிர்த்தனர். 'நீங்க கற்பனை செஞ்சு வெச்சிருக்கிற வெள்ளைச்சாமியா, விஜயகாந்த் வாழ்ந்து காட்டுவாரா? இளையராஜா உங்களை நம்பி அவரு பாட்டைக் கொடுத்துருக்காரு. அதை கெடுத்துராதீங்க...' என்றனர். தன் முடிவில் உறுதியாக இருந்தார், ஆர்.சுந்தர்ராஜன். படத்துக்கு, வைதேகி காத்திருந்தாள் என்று பெயர் சூட்டினார். டைரக்டருக்கு கொஞ்சமும் சளைத்தவர் அல்ல, விஜயகாந்த். 'ஏன் நம்மால் வெள்ளைச்சாமியாக மாற முடியாது? இத்தனை காலம் இப்படியொரு வாய்ப்புக்காகத்தானே காத்திருந்தோம்...' என்று கோதாவில் இறங்கினார். கடந்த, 1984 தீபாவளி திருநாள். விஜயகாந்தின் தீபாவளி ரிலீஸ், வைதேகி காத்திருந்தாள். ஏவி.எம்.மின், நல்லவனுக்கு நல்லவன், கவிதாலயாவின், எனக்குள் ஒருவன் என, ரஜினியும், கமலும் பிரமாதமான பக்க வாத்தியங்களுடன் போட்டி போட்டனர். இரு படங்களுக்கும் ஒரே இயக்குனர், எஸ்.பி.முத்துராமன். இரண்டுமே தெலுங்கு மற்றும் ஹிந்தி 'ரீ-மேக்!' இன்னோர் ஒற்றுமை, இசை இளையராஜா. எல்லாவற்றையும் மீறி, 'ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு, மேகம் கருக்கையிலே, அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட...' பாடல்கள் உரத்து கேட்டன. 40 ஆண்டுகள் கடந்தும் இன்னமும் ஒலிக்கின்றன. 'இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே, காத்திருந்து காத்திருந்து...' போன்ற மதுர கானங்கள், '5ஜி' போன்களையும் குளிர்விக்கின்றன. 'வைதேகி காத்திருந்தாள் படத்தில், காமெடி நீங்கள் எழுதியதா?' என்று, ரஜினியே வியந்து ரசித்து, ஆர்.சுந்தர்ராஜனிடம் கேட்கும் அளவுக்கு, நகைச்சுவை கரைபுரண்டு ஓடியது. 'கோழி குருடா இருந்தா என்னடா, குழம்பு ருசியா இருக்குதாங்கறது தான் முக்கியம்...' என்ற, 'பஞ்ச் டயலாக்' பேசினார், 'ஆல் இன் ஆல் அழகு ராஜா'வாக, கவுண்டமணி. தமிழ் சினிமா சரித்திரத்தில் ஒரு சிரிப்பு நடிகரின் ஊதியத்தை உச்சம் தொட வைத்தது, வைதேகி காத்திருந்தாள் படத்தின் அரிய சாதனை. கவுண்டமணி - செந்தில் இணைந்து நடித்த அட்டகாசமான ஹாஸ்யத்துக்கு பிள்ளையார் சுழி போட்டது, அந்த திரைப்படம். எரியாத பெட்ரோமேக்ஸ் ஏற்படுத்திய கலகலப்பின் வெளிச்சம் இன்று வரை ஒளிர்கிறது. அந்த ஆண்டின் சிறந்த கலைஞர்களில் ஒருவராக, 'பிலிம்பேர்' விருதுக்கு சிபாரிசு செய்யும் அளவு, விஜயகாந்தின் முன்னேற்றம் வேகமெடுத்தது. முதன் முதலாக, சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோவை மற்றும் திருநெல்வேலி என, ஏழு நகரங்களில், 100 நாட்கள் ஓடியது, வைதேகி காத்திருந்தாள். மதுரை சினிப்ரியாவில், 25 வாரங்களை கடந்து, விஜயகாந்தையும் வெள்ளி விழா நாயகனாகப் புகழ் பெறச் செய்தது. மூன்று வெவ்வேறு சம்பவங்களை கொண்ட மாறுபட்ட திரைக்கதை, இளையராஜவின் விரல்களுக்கு ஆஸ்கரை காட்டிலும், காலத்தால் அழியாத கவுரவத்தை அளித்தது. 'ஆனந்த விகடன்' இதழ், வைதேகி காத்திருந்தாள் படத்துக்கு, 44 மதிப்பெண் வழங்கியது. 'பாடகர், ஜெயச்சந்திரனின் குரலை, ராஜா அமர்களமாகப் பயன்படுத்தி இருந்தார். தவிர, சினிமா மூலமாக கர்நாடக இசையை ஜனரஞ்சகமாக பரப்பி வரும், இளையராஜாவின் பணி மகத்தானது...' என்று தன் விமர்சனத்தில் முத்தாய்ப்பு வைத்தது, விகடன். ஆனால், விஜயகாந்த் - ரேவதி பற்றி எதையும் குறிப்பிடாமல் போனது. அதைச் சுட்டிக் காட்டி, நவம்பர் 12, 2008ல், 'ஆனந்த விகடன்' இணைப்பில் மறு பிரசுரத்தில் தன்னைத் தானே குட்டிக் கொண்டது. மதுரை வாசகர், ஆர்.சண்முகராஜனின் வேண்டுகோளுக்கு இணங்கி, வைதேகி காத்திருந்தாள் விமர்சனத்தை மறு பிரசுரம் செய்தது. மு ந்தைய ஆண்டை போலவே, 1985ல், அதிக படங்களில் நடித்து முதலிடம் வகித்தார், விஜயகாந்த். விஜயகாந்த் காட்டில் பெய்த பண மழையில், வினியோகஸ்தர்கள் மனம் குளிர்ந்தனர். 'மினிமம் கியாரண்டி ஹீரோ'வாக அவரது படங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தாமல் வசூலித்தன. தேவர் பிலிம்ஸ் முதன் முதலாக, 3டி தொழில்நுட்பத்தில், அன்னை பூமி என்ற பெயரில் படம் தயாரித்தது. கதாநாயகன், விஜயகாந்த். மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் கோடை விடுமுறை முடியும் தருணத்தில் வெளி வந்தது, அன்னை பூமி. படுதோல்வி அடைந்தது. தேவர் பிலிம்ஸ் வரலாறு காணாத நஷ்டத்தை சந்தித்தது. அன்னை பூமி படத்தின் வீழ்ச்சிக்கு, விஜயகாந்த் எள் அளவும் காரணம் கிடையாது. அதனை, 'கல்கி'யின் விமர்சனம் சுட்டிக் காட்டியது. விஜயகாந்த் முதன் முதலாக நடித்த முழு நீள நகைச்சுவை படமாக, நானே ராஜா நானே மந்திரி அமைந்தது. ஆர்.சுந்தர்ராஜனின் உதவியாளர், பாலு ஆனந்த் முதன் முதலாக இயக்கியது. விஜயகாந்தின் நடிப்பு சிறப்பாக இருந்தும், கிளைமாக்ஸ் காலை வாரி விட்டது. எதிர்பார்த்த இலக்கை தொடவில்லை. கடந்த, 1985ல், விஜயகாந்தின் திரை வாழ்வில் நிகழ்ந்த ஒரே அதிசயம், அதுவரையில் அவருடன் நடிக்க மறுத்த, ராதிகா, அம்பிகா போன்ற முன்னணி நடிகையர் இணைந்து நடித்தனர். - தொடரும் - பா. தீனதயாளன்நன்றி : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் தொலைபேசி எண்: 7200050073


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !