ஞானானந்தம் - தன்னையே சுட்ட வினை!
'தன் வினை தன்னைச் சுடும்...' என்ற முதுமொழிக்கான விளக்கம் தான், ராமாயண கதை. மாவீரன், சிவ பக்தன் என்றெல்லாம் புகழ்பெற்ற, ராவணன் செய்த தவறு, அவனுடைய குல நாசத்துக்கே வழிவகுத்தது. போர்க்களத்தில், ராவணனின் மகன் இந்திரஜித் ஏவிய, மாயப் படையான பிரம்மாஸ்திரத்தால், லட்சுமணன் முதலானோர், மயங்கி சாய்ந்தனர். ராவணனுக்கு செய்தி போனது. உடனே, சீதா தேவியை, புஷ்பக விமானத்தில் ஏற்றிச் சென்று, அவளுக்கு நேசமானவர்கள் இறந்து கிடக்கும் காட்சியைக் காட்ட வேண்டும் என்ற கெட்ட எண்ணம், ராவணனுக்கு வந்தது. அப்படி செய்தால், சீதை மனம் மாறி, தன் விருப்பத்துக்கு உடன்படுவாள் என, சிறுபிள்ளைத்தனமாக நினைத்தான், ராவணன்.அப்படி சீதையை அழைத்து போய் காட்டுகிற போது, தன் படை வீரர்களின் சடலம் ஒன்று கூட அவளுடைய கண்களில் படக் கூடாது என, நினைத்தான்.சேனாபதியை அழைத்து, 'நம் படையை சேர்ந்தவர்களின் சடலங்களை கடலுக்குள் தள்ளி, மூழ்கடித்து விடுங்கள்...' என்றான், ராவணன். அவ்வாறே, செய்யப்பட்டது. வானர சைனியமும், லட்சுமணன் மற்றும் அனுமன் உள்ளிட்டோர் மயங்கி கிடந்ததை கண்டு, முதலில் அனுமனின் மயக்கத்தை தெளிவித்தார், விபீஷ்ணன்.ஜாம்பவானை சந்தித்து அவர் கூறிய படி, சஞ்சீவி மலையில் உள்ள மூலிகைகளை கொண்டு வர ஏற்பாடானது. எந்த மூலிகை என்பது தெரியாமல், அந்தச் சிறு குன்றையே வேரோடு பெயர்த்தெடுத்து வந்தான், அனுமன். சஞ்சீவி மலையின் மூலிகை காற்று வீசியதும், லட்சுமணன் உட்பட போர்க்களத்தில் மயங்கி கிடந்த அனைவரும், துாங்கி விழித்தது போல், உயிர் பெற்று எழுந்தனர். ராவணனின் படை வீரர்களின் உடல்கள், கடலுக்குள் மூழ்கடிக்கப்படாமல் இருந்திருந்தால், சஞ்சீவி மலை காற்று வீசி, அவர்களும் உயிர் பெற்றிருக்க கூடும். புத்திசாலித்தனம் என்று நினைத்து, ராவணன் செய்த காரியத்தால், அவன் குலம் மற்றும் ராஜ்ஜியமே அழிந்து போனது. என்ன தான் தவ பலம், படை பலம் இருந்தாலும், கடவுளின் அருள்பார்வை, நம் மீது படாமல் இருந்தால், எதுவும் நிலைத்து நிற்காது என்பதை, இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். பி. என். பி.,