உள்ளூர் செய்திகள்

ஞானானந்தம்: சிறந்த பக்தன்!

கனகதாசர் நல்ல கவிஞர், மாபெரும் பக்தர். வேடுவர் குலத்தில் பிறந்தவர். கர்நாடக மாநிலம், தார்வாட் மாவட்டத்தில் பாதா எனும் கிராமத்தில் வாழ்ந்து வந்தார்.உடுப்பியில் கிருஷ்ணரின் கோவில் உள்ளது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அந்த கோவிலை தரிசிப்பது வழக்கம். கனகதாசரும் இசைக்கருவியை மீட்டி, பக்திப் பாடல்களைப் பாடியவாறு அங்கு சென்றார். அங்குள்ள பூசாரிகள் அவரை கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை.'வேடுவர் குலத்தைச் சார்ந்த நீ, கோவிலுக்குள் நுழைய எவ்வளவு நெஞ்சழுத்தம் பெற்றிருக்க வேண்டும்...' என, ஏசினர்.ஆனால், அங்கிருந்து நகரவில்லை, கனகதாசர். அங்கேயே நின்று பக்தி கீதங்களைப் பாடிய வண்ணம் இருந்தார். அவரை பிடித்து தள்ளினார், ஒரு பூசாரி. கோவிலை வலம் வந்து, அதன் பின்னே உள்ள சுவர் மீது சாய்ந்து நின்றார், கனகதாசர்.'கிருஷ்ணா! மாதவா! உன் கோவிலுக்குள் வரக் கூடாததற்கு நான் செய்த பாவமென்ன?' என, வருந்தினார்.திடீரென அந்த சுவர் பிளந்து, வழியை உண்டாக்கியது. கிருஷ்ணரின் விக்கிரகம், கனகதாசரின் பக்கம் திரும்பியது. சுவாமியை மிக அருகில் தரிசித்து மகிழ்ந்தார், கனகதாசர்.இன்றும் அந்த வழி, கோவிலில் உள்ளது. அதை கனகதாசர் வழி என்றே போற்றுகின்றனர்.இத்தகைய பக்தரான, கனகதாசர், தன் சிறுவயதில் ஒருநாள், வழியில் கால் தடுக்கி, ஒரு பாறை மீது விழுந்தார். அடியில் கணக்கற்ற பொற்காசுகளைக் கண்டார். அவற்றைத் தன்னிடம் மட்டும் வைத்துக் கொள்ளாமல், ஏழைகளுக்குப் பங்கிட்டு கொடுத்தார்.குரு ஒருவரிடம் சீடராக இருந்தார், கனகதாசர்.ஒருநாள் சீடர்கள் அனைவரையும் அழைத்து, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாழைப் பழம் தந்து, 'யாரும் பார்க்காத இடத்திற்கு சென்று பழத்தை சாப்பிட்டு வாருங்கள்...' என, பணித்தார், குரு.சீடர் அனைவரும் வெகுதுாரம் சென்று, மரம் மற்றும் வீட்டின் பின்புறம் நின்று பழத்தைச் சாப்பிட்டனர்.ஆனால், கனகதாசர் தான் எடுத்து சென்ற பழத்துடன் திரும்பி வந்தார்.அவரிடம், 'ஏன் சாப்பிடவில்லை...' எனக் கேட்டார், குரு. 'குரு தேவரே! நான் எங்கு சென்றாலும் இறைவன் இருப்பதாக உணரலானேன். இறைவன் இல்லாத இடம் எங்குமில்லை. அதனால், உங்கள் கட்டளையை நிறைவேற்ற இயலவில்லை...' என்றார், கனகதாசர்.பெருமிதத்துடன் சீடரைப் பார்த்தார், குரு. 'கனகதாசனே! நீ சிறந்த பக்தன். உன்னைப் போன்ற பக்தனை சீடனாக பெற்றதற்கு பெருமை அடைகிறேன்...' என்றார், குரு.எல்லாம் வல்ல இறைவன், எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளான் என்பதை உணர்ந்து செயல்படுவோம்!அருண் ராமதாசன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !