ஞானானந்தம்: கடமையே கடவுள் வழிபாடு!
துறவி ஒருவரைச் சந்தித்து, 'ஐயா! கடவுள் அருளால் நடக்காத காரியம், இந்த உலகத்தில் ஏதாவது உண்டா?' எனக் கேட்டார், விவசாயி. 'இல்லை...' என்றார், துறவி. 'அப்படியானால் என்னுடைய தரிசு நிலத்தில் பயிர் விளையுமா?' எனக் கேட்டார், விவசாயி. 'முதலில் ஆழ்ந்த பக்தி இருக்க வேண்டும். கடவுள் அருளால் நிச்சயம் நடக்கும் என்றும், நடப்பதெல்லாம் பகவான் செயல் என்றும், நீ நம்ப வேண்டும். 'பின்னர் உன்னுடைய கடமைகளை பகவானுக்கு அர்ப்பணம் செய்து விட்டு, இதை அவரது ஆணையாகக் கருதி, உன்னுடைய கடமைகளை செய்தால், நிச்சயம் தரிசு நிலத்தில் பயிர் விளையும்...' எனக் கூறினார், துறவி. ஆறு மாதங்கள் கழித்து, துறவியிடம் ஓடி வந்த விவசாயி, 'ஐயா! கடவுளை நம்பி நான், மோசம் போய் விட்டேன். அவர் என்னை நன்றாக ஏமாற்றி விட்டார். என் நிலத்தில் பயிர் விளையவே இல்லை...' எனக் கதறினான். 'என்ன! பயிர் விளையவில்லையா? ஒருவேளை உன் பக்தியிலும், நம்பிக்கையிலும் ஏதாவது குறை இருக்குமோ?' என, சந்தேகப்பட்டார், துறவி. கோபமடைந்த விவசாயியோ, 'ஐயா! நான் கடந்த, ஆறு மாதங்களாக தரிசு நிலத்தில் பயிர் விளைய வேண்டும் என, பகவானுக்கு தினமும், ஆறு வேளைகள் பூஜைகள் செய்தேன். எந்தவித கெட்ட பழக்கங்களும் இல்லாமல் சுத்தமாக இருந்தேன். 'தொடர்ந்து பல மந்திரங்களை ஜெபித்தும், பல விரதங்களை முறையாக கடைப்பிடித்தும் வந்தேன். கண்டிப்பாக பயிர் விளையும் என, கடவுளின் மேல் முழுமையாக நம்பிக்கை வைத்திருந்தேன். 'என் பக்தியும், நம்பிக்கையும் சிறிதளவு கூட குறையவில்லை. கடவுள் தான் என்னை ஏமாற்றி விட்டார். நான் செய்த பூஜைகளும், இருந்த விரதங்களும் இப்படி வீணாகி விட்டதே...' என, அழுது புலம்பினான். குழப்பமடைந்த துறவி, அந்த விவசாயியின் நிலத்துக்கு சென்று பார்த்தார். அந்த நிலம் மிகுந்த வறட்சியுடன் காட்சியளித்தது. விவசாயியிடம், 'இந்த நிலத்தை பார்த்தால், நீ உழுத மாதிரியே தெரியவில்லையே...' என, வினவினார், துறவி. விவசாயி ஆவேசத்துடன், 'என்ன துறவியாரே இப்படி முட்டாள்தனமாக பேசுகிறீர்கள். நான் வீட்டில் முழு நேரமும் பூஜைகள் செய்து கொண்டிருக்கும் போது, எப்படி என்னால் இந்த நிலத்தை உழ முடியும்?' என, கத்தினான். 'என்னதான் பக்தியோடும், நம்பிக்கையோடும் இருந்தாலும் கடமையை செய்யாமல் எப்படி பயிர் விளையும்?' என்றெண்ணி, அந்த விவசாயியின் முட்டாள்தனத்தை நினைத்து பரிதாபப்பட்டார், துறவி. ஒருவன் எவ்வளவு நல்லவனாக இருந்தாலும், அவன் தன் கடமையை செய்யாவிட்டால், அவனுக்கு கடவுளின் அருள் கிடைக்காது. கடமையை செய்பவர்களுக்கே கடவுள் உதவி புரிவார். கடமையே கடவுள் வழிபாடாகும்! - அருண் ராமதாசன்