மன்னிப்பின் மேன்மை !
ஸ்ரீமத் பாகவதத்தில் குறிப்பிடப்படும், அம்பரீஷ மகாராஜா ஏகாதசி விரதத்தை முடித்துவிட்டு உணவருந்த சென்றபோது, அவரது அரண்மனைக்கு வந்தார், துர்வாச முனிவர். உணவு அருந்தும் வேளை என்பதால், துர்வாச முனிவரையும் உணவருந்த அழைத்தார், மகாராஜா. அப்போது, தான் சிறிது நேரத்தில் நீராடிவிட்டு வந்து, சாப்பிடுவதாகக் கூறி, வெளியில் சென்றார், துர்வாச முனிவர். அவர் சொன்ன நேரத்தில் வரவில்லை. நேரம் சென்று கொண்டே இருந்தது. 'குறித்த நேரத்தில் விரதத்தை முடிக்க வேண்டுமே...' என்று, மகாராஜா கவலைப்பட்டு, அங்கும், இங்கும் நடந்தார். முனிவர் வருவதாக தெரியவில்லை. பிறகு, 'இனி தாமதிக்கக் கூடாது...' என்று கருதி, அரசவை அந்தணர்களைக் கூட்டி, ஆலோசித்து முடிவெடுக்க நினைத்து, அவர்களை அழைத்து கேட்டார், மகாராஜா. அவர்கள், 'மூன்று சொட்டு நீர் மட்டும் அருந்தி, விரதத்தை முடிக்கலாம்...' என்று சொல்ல, மூன்று சொட்டு நீர் அருந்தி விரதத்தை முடித்தார், அம்பரீஷ மகாராஜா. நீராடிவிட்டு, அரசவைக்கு திரும்பினார், துர்வாசர். அப்போது, அம்பரீஷ மகாராஜா விரதத்தை முடித்த விபரம் அறிந்ததும், 'தன்னை சாப்பிட வரச் சொல்லிவிட்டு, அவன் மட்டும் சாப்பிட்டு, விரதத்தை முடித்துக் கொண்டானே...' என்று மிகவும் கோபப்பட்டு, மகாராஜாவை கொல்வதற்காக தன் தவ வலிமையால் ஓர் அரக்கனை ஏவினார், துர்வாச முனிவர். ஆனால், அம்பரீஷ மகாராஜாவோ, தன்னை எதிர்க்க வந்த அரக்கனை எதிர்த்து போராடாமல், இறைவன் நாராயணனை நினைத்து பிரார்த்தனை செய்தார். அப்போது, அங்கு நாராயணனின் சுதர்சன சக்கரம் தோன்றி, துர்வாச முனிவரால் ஏவப்பட்ட அரக்கனை கொன்றது. அதுமட்டுமல்லாமல், அரக்கனை ஏவிய துர்வாச முனிவரையும் வேகமாகத் துரத்த துவங்கியது. இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை, துர்வாச முனிவர். பயந்து போய் தன்னை பாதுகாத்துக் கொள்ள, பிரம்மலோகம், கைலாயம் என, ஓடினார். அவர், எங்கு சென்றாலும் அவருக்கு எந்தப் பாதுகாப்பும் யாராலும் கிடைக்கவில்லை. யாவரும், நாராயணனிடம் சரணடைய கூறினர். இறுதியில், வைகுண்டத்திற்கு சென்று, நாராயணனிடமே சரணடைந்தார், துர்வாசர். ஆயினும், தம்மால் எதுவும் செய்ய முடியாது என்று கூறி, மகாராஜா அம்பரீஷரையே சரணடையும்படி கட்டளையிட்டார், பகவான் நாராயணன். அதன்படி துர்வாசரும், மகாராஜா அம்பரீஷரிடம் திரும்பி வந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டினார். முனிவர் மீது கோபிக்காது, கருணை கொண்டு மன்னித்தார், மகாராஜா. முனிவரை துரத்திய சுதர்சன சக்கரம் மறைந்தது. நம்மை அவமானப்படுத்துவோர், ஏமாற்றுவோர், தீங்கிழைப்போர் ஆகியோரை பழி வாங்குவதை விட்டு விட்டு, பகவானின் திருவடிகளை பற்றிக் கொள்வதே நன்மை தரும்!அருண் ராமதாசன்