உள்ளூர் செய்திகள்

ஞானானந்தம்: பொறுமை தந்த பரிசு!

ஒரு ஊரில், புதிதாக, விநாயகர் கோவில் ஒன்று கட்டப்பட்டது; கும்பாபிஷேக நாளன்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்றிரவு கோவில் அர்ச்சகரும், பணியாட்களும், கோவிலின் நடையை சாத்தி, கதவை பூட்டி சென்றனர். அப்போது, சுவாமியின் விக்ரகத்தைப் பார்த்து, கருவறைக்கு வெளியே தரையில் பதிக்கப்பட்டிருந்த ஒரு கற்பலகை பேச ஆரம்பித்தது... 'நண்பனே! நீ, இப்போது சுவாமி விக்ரகமாக இருக்கிறாய்! ஒரு காலத்தில் நாம் இருவரும் ஒரே மலையில்தான் இருந்தோம். உனக்கு இப்போது சுவாமி விக்ரக வடிவம் கொடுத்து எல்லாரும் பக்தியுடன் பூஜிக்கின்றனர். 'ஆனால் என் நிலையைப் பார். எல்லாரும் என்னைக் காலால் மிதித்துவிட்டு செல்கின்றனர். இது என்ன நியாயம்? ஏன் நம் இருவருக்கும் இப்படி ஒரு வேறுபாடு? நம்மைப் படைத்த அந்த இறைவன், எனக்கு மட்டும் ஏன் இப்படி ஓரவஞ்சனை செய்தான்?' என்று கேட்டது. கற்பலகையின் கேள்விக்கு, சுவாமி விக்ரக கல் புன்சிரிப்புடன் பதில் சொல்ல ஆரம்பித்தது: நண்பனே! நீ சொல்வது சரிதான். நாம் ஒரே மலையில்தான் இருந்தோம். அதை நான் மறக்கவில்லை. ஆனால், நீதான் முன்பு நடந்த நிகழ்ச்சிகளை மறந்து இப்படி பேசுகிறாய். ஒரு நாள், சிலை வடிக்கும் ஸ்தபதி ஒருவர், நாம் இருந்த மலைக்கு தன் உதவியாளர்களுடன், நீ இருந்த இடத்திற்கு தான் முதலில் வந்தார். உன்னைச் சுட்டிக்காட்டி தன் உதவியாளர் ஒருவரிடம், 'சுவாமி விக்ரகம் வடிக்க இந்தப் பாறை பயன்படுமா என்று பார்...' என்று கூறினார், ஸ்தபதி. உன் மீது உளி வைத்து அடித்தார், உதவியாளர். அவ்வளவுதான்! உடனே, நீ சிதறிவிட்டாய்! அதைப் பார்த்த, ஸ்தபதி, 'இது சுவாமி சிலைக்கு ஏற்றதல்ல. அதோ, துாரத்தில் இருக்கும் அந்தப் பாறைக்கு சென்று பார்க்கலாம்...' என்று, என்னைச் சுட்டிக்காட்டினார். உதவியாளர் என் மீது உளி வைத்து அடித்தார். அவர்கள் அடித்த அத்தனை அடிகளையும் பொறுமையாக தாங்கிக் கொண்டேன். அதைப் பார்த்து, மகிழ்ச்சியடைந்து, 'இந்தப் பாறைதான் சுவாமி விக்ரகம் செய்வதற்கு ஏற்றது...' என்று முடிவு செய்தனர். பிறகு கோவிலின் மற்ற பணிகளுக்காக உன்னையும் எடுத்துக் கொண்டனர். என் உடலில் எல்லா இடங்களிலும் உளியால் அடித்தனர். ஊசிமுனை அளவுகூட பாக்கி வைக்காமல் அவர்கள் என்னை செதுக்கினர். அந்தத் துன்பங்களை நான் சகித்துக்கொண்டேன். அதனால், இன்று என்னை வழிபாட்டில் வைத்து பூஜிக்கின்றனர். ஆனால், நீயோ ஓர் அடியைக்கூடத் தாங்காமல், சிதறிப் போனாய். அதனால், அவர்கள் உன்னைத் தரைத்தளத்தில் பதித்தனர். உனது இந்த நிலைக்கு நீயே காரணம், என்றது, விக்ரகம். வாழ்க்கையில் துன்பங்களை பொறுமையுடன் ஏற்கத் தயாராக இருப்பவர்களே சிறப்புகளை எட்ட முடியும். வாழ்க்கையில் துன்பங்களை அனுபவித்த மக்களுக்கே, இன்பங்களை அனுபவிக்க உரிமை உண்டு. நெருப்பில் இட்டு வாட்டுவதால் தங்கம் ஒளிபெறுகிறது. அதுபோல் துன்பம் அதிகரித்தாலும், அதைப் பொறுத்துக்கொண்டு தவம் மேற்கொள்பவர்கள், புகழ் பெறுவர்! அருண் ராமதாசன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

RAVINDRAN.G
மார் 23, 2026 12:55

அளவுக்கு மீறிய துன்பம் வந்தால் என்ன செய்வது? எதற்கும் ஒரு எல்லை உண்டே அந்த இறைவனுக்குத்தான் தெரியும்.