உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

அதீத ஆர்வத்தால் வந்த வினை!சில மாதங்களுக்கு முன் எங்கள் வீட்டின் அருகில் குடியிருக்கும், நண்பரின் ஒரே மகனுக்கு, திருமணம் நடந்தது. மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில், சொந்தக் காசில் சூனியம் என்பதைப் போல, தானே கெடுத்துக் கொண்டான், அவர், மகன்.திருமணமான ஓரிரு மாதங்களிலேயே கர்ப்பம் தரித்தாள், நண்பரின் மருமகள். குடும்பமே அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடியது.தன் மனைவிக்கென்று ஒரு ஸ்கூட்டியை வாங்கி, பரிசளித்தான், நண்பனின் மகன். அதை ஓட்டக் கற்றுக்கொள்ளுமாறு, அவனே பயிற்சியும் கொடுத்தான்.முதலில், வீதியிலும், மைதானத்திலும், சிறிது நேரம் ஓட்டிப் பழகியவளை, சாலையில் ஓட்டிக் கற்க, அவளை அழைத்து போனான், நண்பரின் மகன்.அவ்வாறு ஓட்டும்போது எதிர்பாராத விதமாக, சாலையில் குறுக்கிட்ட வேகத்தடையில் நிலைதடுமாறி, சாலையோர வீட்டுச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானாள், நண்பரின் மருமகள்.ரத்த வெள்ளத்தில் வலியில் துடித்தவளை மருத்துவமனையில் சேர்க்க, கர்ப்பம் கலைந்து போன செய்தி, இடியாக வந்தது. அதுமட்டுமின்றி, வயிற்றில் பலத்த அடி என்பதால், கருப்பையையே எடுத்துவிட வேண்டும் என்று மருத்துவர் சொன்ன தகவல், பேரிடியாக இருந்தது.கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பதை போல, கர்ப்ப காலத்தில் ஸ்கூட்டி ஓட்ட கற்றுக்கொள்ளச் செய்த, தன்னுடைய அதீத ஆர்வத்தை, இப்போது நொந்து கொள்கிறான், நண்பரின் மகன். மொத்த குடும்பமுமே தீராத சோகத்தில் தவிக்கிறது.கர்ப்பம் தரித்த பெண்களே... குழந்தை பிறக்கும் வரை, மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள்.- வடிவேல் முருகன், நெல்லை.தோழியின் சிறப்பான முயற்சி!சமீபத்தில், என்னுடைய தோழி ஒருத்தியைச் சந்திக்க, அவளுடைய வீட்டிற்கு சென்றிருந்தேன். அச்சமயம், ஐந்து மற்றும் ஏழாம் வகுப்பில் பயிலும், அவளுடைய மகனும், மகளும் மொபைல் போனில் யாரிடமோ வீடியோ அழைப்பில், உற்சாகமாகப் பேசுவதை பார்த்தேன்.அதுபற்றி தோழியிடம் வினவினேன்.அதற்கு, 'இன்றைய வாழ்க்கை சூழலில், உறவினர் வீடுகளுக்கு சென்று, சில நாட்கள் தங்கி, உறவுகளை வளர்ப்பது அரிதாகி வருகிறது. அதுமட்டுமின்றி, முக்கியமான விசேஷ நாட்களுக்கு அழைப்பிதழ் தருவதற்கு செல்வது தவிர, அவர்களோடு தொடர்பில் இருப்பது கூட குறைந்து வருகிறது.'கடிதங்கள் மட்டுமே தொடர்பு சாதனமாக இருந்தபோது கிடைத்த நெருக்கம் கூட, மொபைல் போன் வசதியிருக்கும் காலத்திலும், தொடர்பே இல்லாமல் இருப்பது உறுத்தலாக இருந்தது. அதனால் தான், ஒவ்வொரு மாதமும் சில உறவினர்களுடன், வீடியோ அழைப்பில் தொடர்பு கொண்டு, முகம் பார்த்து பேசி அளவளாவுவதை, எங்கள் குடும்பத்தில் ஒரு பழக்கமாகவே வைத்துள்ளோம். குழந்தைகளும் இதை மிகவும் விரும்புகின்றனர்...' என்றாள், தோழி.தோழியின் இந்த சிறப்பான முயற்சி, உறவுகளை இறுக்கமாகப் பிணைக்க உதவுகிறது. மொபைல் தொழில்நுட்பத்தை நல்ல வகையில் பயன்படுத்தி உறவுகளை வளர்க்கும் இந்தப் பழக்கத்தை, நானும் பின்பற்ற முடிவு செய்து விட்டேன்.- வி.நர்மதா, உளுந்துார்பேட்டை.மனிதநேயத்தை உணர்த்திய, திருநங்கையர்!உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றிருந்தேன். அங்கு, இரு, திருநங்கையர் வந்திருந்தனர். அவர்களை பார்த்த சில உறவினர்கள் விருப்பமின்றி முகம் சுளித்து, 'இவர்கள் ஏன் இங்கே வந்திருக்கின்றனர்...' என்று, மாப்பிள்ளையின் தந்தையிடம், கேட்டனர்.அதற்கு அவர், 'நான் தான் இவர்களை இந்த திருமணத்திற்கு அழைத்தேன். இன்று திருமண கோலத்தில் உங்கள் முன்னால் என் மகன் நிற்பதற்கு காரணம் இவர்கள் தான்! சில மாதங்களுக்கு முன், என் மகன் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது சாலையோரத்தில், வாகன டயர் வெடித்து முட்புதருக்குள் விழுந்து விட்டான்.'அதில், தலையில் காயம் ஏற்பட்டு முற்றிலும் மயங்கி போயிருந்தான். அந்த வழியாக சென்றவர்கள், மது அருந்தி விழுந்திருக்கிறான் என்று எண்ணி, எவரும் உதவிக்கு வரவில்லை. ஆனால், இந்த இரு திருநங்கையர் தான் அவனை மீட்டு, உடனே ஆம்புலன்சை வரவழைத்து, மருத்துவமனையில் சேர்த்தனர்.'அன்று, இவன் உயிரை காப்பாற்றிய இவர்கள் தான், எங்களுக்கு தெய்வமாக தெரிந்தனர். நன்றி மறக்கக் கூடாது என்பதால், என் மகனின் திருமணத்திற்கு அழைத்தேன்...' என்றார்.இந்த உண்மையை கேட்டதும், முகம் சுளித்திருந்த உறவினர்கள், அந்த திருநங்கையரை மரியாதையுடன் பார்த்தனர்.திருநங்கையரை ஏளனமாக பார்க்காமல், அவர்களது அன்பையும், இரக்கத்தையும் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்று புரிந்தது!- என்.மோகன், கோவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

கவி
பிப் 22, 2026 15:08

ஸ்கூட்டியை கர்ப்பகாலத்தில் கற்று கொள்வதை தவிர்க்க வேண்டும் என்பதை தாண்டி முறையாக டிரைவிங் பள்ளியில் சேர்ந்து பயில வேண்டும்... அதற்காக நன்றாக பயிற்சி எடுத்து லைசென்ஸ் எடுத்த பிறகுதான் வண்டியே வாங்க வேண்டும்!!! பழக்கமில்லாமல் சாலையில் பழகினால் இதுபோல நடக்க வாய்ப்புள்ளது!


D.Ambujavalli
பிப் 22, 2026 13:10

நாங்கள் வடக்கில் இருந்தபோது அருகிலிருந்தவர் வீட்டில் குழந்தை பிறந்தது அதற்குப் பெயரிடும் நாளில் 4 திருநங்கையர், அவர்களில் வயதானஒருவர் என்று அழைத்து வந்து, குழந்தையை மடியில் இருத்தி மெஹந்தி போன்ற ஒரு அலங்காரம் செய்து புத்தாடை அணிவித்தபின், அவர்கள் மடியில் வைத்துக்கொண்ட பிறகே பாட்டி, அத்தை எல்லாரும் இந்த மெஹந்தி சடங்கை செய்தனர். அவர்களுக்கு தாம்பூலம் பரிசுகளுடன் வழியனுப்பி வைத்தனர் அங்கு இவ்வளவு மதிப்பு அவர்களுக்கு உள்ளத்தைக்கண்டு வியந்தேன்


Natarajan Ramanathan
பிப் 22, 2026 08:20

வாராவாரம் ஒரு திருநங்கை கதை வந்துவிடுகிறது.