கவிதைச்சோலை: ஆசிரியர்களைப் போற்றுவோம்!
அறியாமை இருளகற்றி அறிவொளியை ஏற்றுபவர்கள்... அழியாத கல்விச் செல்வத்தை அள்ளித்தரும் ஆசான்கள்! கேள்விகளைக் கேட்க வைத்து கற்றலுக்குள் அழைப்பர்... தேடலுக்கு சிறகுகள் தந்து திறமைகளை மெருகூட்டுபவர்கள்! தோல்வியிலும் துவளாதிருக்க தோள் கொடுத்து துணை நிற்பர்... வீழ்ந்தாலும் வீறுகொண்டு எழுந்திட வெற்றிப்பாதை காட்டுபவர்கள்! நல்லொழுக்கம் நிறைந்தவராகிட நாள்தோறும் அறிவுறுத்துவர்... பாருக்குள் பண்பின் சிகரமாய் வாழ்ந்திட வழிநடத்துபவர்கள்! பாடம் மட்டும் போதிக்காமல் பண்பாட்டையும் புகட்டுவர்... பாதை மாறும் நேரத்திலும் பக்குவமாய் திருத்துபவர்கள்! மதிப்பெண்ணை மட்டும் எண்ணாமல் மாணவர் திறமைகளை மதிப்பர்... மனதில் நேயம் மலர்ந்திடச் செய்து மாண்புடையோர் ஆக்குபவர்கள்! கனவுகளைக் காணச் செய்து காலத்தையும் வெல்லச் செய்வர்... கற்பனைகளை சீர்திருத்தி சிந்தனைக்கு மகுடம் சூட்டுபவர்கள்! தங்கள் வாழ்வைத் தியாகம் செய்து தலைமுறை செழிக்க செய்வர்... தன்னலத்தை துறந்துவிட்டு இந்த உலகுக்கே ஒளி தருபவர்கள்! வகுப்பறை விதைத்த சிறு விதையே வாழ்வில் பெருமரமாய் வளர்ந்திடும் ஆசிரியர்களைப் போற்றுவோம் அவர்தம் சேவையை தருபவர்கள்! - ஆர்.செந்தில்குமர், மதுரை. தொடர்புக்கு: 95977 81744