உள்ளூர் செய்திகள்

அமெரிக்காவில் என் விருந்தினராக சிவாஜி! (8)

'குமுதம்' இதழின் நிறுவனரும், முன்னாள் ஆசிரியருமான எஸ்.ஏ.பி. அண்ணாமலையின் மகன் டாக்டர் எஸ்.ஏ.பி. ஜவஹர் பழனியப்பனின் அனுபவ தொடர் சிவாஜி, அமெரிக்காவில் கேட்ட, 'ஆப்பாயில்!'உலகம் முழுவதிலும் பல்வேறு மொழிகளில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவருகின்றன. ஆனாலும், ஹாலிவுட்டுக்கு இருக்கும் மவுசு தனி தான்.ஹாலிவுட் படங்களை மக்கள் விரும்பிப் பார்த்தாலும், கூடவே 'டிவி' - 'டிவிடி' - 'ஓடிடி' போன்ற புதிய பொழுதுபோக்கு தொழில்நுட்ப வளர்ச்சியையும், மக்கள் விருப்பத்துடன் பார்க்கின்றனர்.சுமார், 25 ஆண்டுகளுக்கு முன்னரே அமெரிக்காவில், தியேட்டருக்கு வந்து படம் பார்க்கிறவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது.பெரும்பாலும் எல்லாரும் திரைப்படங்களின், 'டிவிடி'கள் வாங்கி, வீட்டிலேயே, 'டிவி'யில் படம் பார்த்து விடுவர். வசதியானவர்கள், வீட்டிலேயே ஹோம் தியேட்டர் வைத்துக் கொள்வர்.என் வீட்டில் எப்போதும் ஏராளமான, 'டிவிடி'கள் இருக்கும்.விடுமுறை நாட்களில் அந்த, 'டிவிடி'களை, வீட்டு தியேட்டரில் போட்டு படம் பார்ப்பது, எனக்கு பிடித்தமான பொழுதுபோக்கு.பல வகையான திரைப்படங்களின், 'டிவிடி'களை வாங்கி வைத்திருந்தேன். சிகிச்சைக்காக அமெரிக்கா வரும், சிவாஜியின் மனதை லேசாக்க, அவருக்கு வீட்டிலேயே படங்களை போட்டுக் காட்ட வேண்டும் என்பது, என் திட்டம்.அதற்காக, அவர் ரசிப்பதற்காக சில படங்களை தேர்ந்தெடுத்து வைத்திருந்தேன். நடிப்பு திறமையை வெளிகாட்டும் படங்கள், சிறப்பான கதையம்சம் கொண்ட திரைப்படங்கள், உருக்கமான மனதை தொடும் படங்கள் என, தேர்ந்தெடுத்தேன்.எல்லாமே கொஞ்சம் சீரியஸ் ரக படங்கள்.சிவாஜி வந்ததும், அவருக்காக ஸ்பெஷலாக எடுத்து வைத்திருக்கும், 'டிவிடி'களைப் பற்றி சொல்லி, 'அவற்றில் ஏதாவது ஒன்றைப் போடட்டுமா, பார்க்கிறீர்களா?' என, அவரிடம் கேட்டேன். 'இதெல்லாம் வேணாம், டாக்டர்! ஜாலியாக, 'ஆக்ஷன்' படம் போடுங்கள்...' என்றார். இது, நான் எதிர்பார்க்காதது. அவர் விரும்பியபடியே ஜனரஞ்சகமான ஹாலிவுட் படங்களைத் திரையிட்டேன். நம் ஊர் தியேட்டர்களில் மசாலா படங்களை, ரொம்ப ஜாலியாக ரசித்துப் பார்ப்பர், ரசிகர்கள். அப்படி ஒரு ரசிகர் போல, அந்த ஹாலிவுட் படங்களை மிகவும் ரசித்துப் பார்த்தார், சிவாஜி.குறிப்பாக, சண்டைக் காட்சிகளில், அவரும் கைகளை, தலையை ஆட்டுவார்; அது போதாதென்று, 'ம்.. அப்படித்தான் போடு! செம அடி! இன்னும் ரெண்டு குத்து...' என்றெல்லாம் சொல்லி, படத்தோடு ஒன்றிப் போய் ரசித்தார். சிவாஜியின் இன்னொரு முகத்தை நான், அன்று அறிந்து கொண்டேன்.வீட்டில் நிறைய படங்களின், 'டிவிடி'கள் இருந்தாலும், எனக்கு இந்த படம் பார்க்கணும்ன்னு சிவாஜி குறிப்பிட்டு சொல்ல மாட்டார்.ஆனால், எனக்கு இப்போது அவரது ரசனை புரிந்து விட்டது.அந்த ரசனைக்கு ஏற்ற படங்களை தேர்வு செய்து, அந்த படத்தின் கதை சுருக்கத்தையும், நடித்தவர்கள் பற்றியும் அவரிடம் சொல்வேன்.அவர், ஓ.கே., சொன்னால் திரையிடுவேன். வேண்டாம் என்றால் வேறு படம்.சில நேரங்களில் இரண்டு மூன்று படங்களைப் பற்றி சொல்லி, எந்த படத்தை பார்க்கலாம் என, அவருடைய விருப்பத்துக்கே விட்டு விடுவேன்.அவருக்கு, கிளின்ட் ஈஸ்ட்வுட், ஷான் கானரி, மார்லன் பிராண்டோ நடித்த படங்கள், ரொம்ப பிடிக்கும்.கவுபாய் படங்களையும் விரும்பிப் பார்ப்பார்.கவுபாய் படங்களில், குதிரை மீது ஏறிப் பாய்ந்து சென்று எதிரிகளை தாக்கும், 'ஹீரோ'களின் அதிரடியான சண்டைக் காட்சிகளை ரசித்துப் பார்ப்பார்.எங்கள் வீட்டில் அம்மாவும், தங்கையும் சைவம் தான் சாப்பிடுவர். சிவாஜி குடும்பத்தினர் வந்திருந்த போதும், வீட்டில் சைவ சமையல் தான்.ஒருநாள் சிவாஜி திடீரென்று, 'ஒரு, 'ஆப்பாயில்' செய்து கொடுங்கள்...' என, சொல்லி விட்டார். சமையல் அறையில் இருந்த எங்கள் அம்மாவுக்கு சின்ன பதற்றம். முட்டையில் ஆம்லெட், ஆப்பாயில் எல்லாம் செய்து, அவருக்கு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. பழக்கம் விட்டுப் போனதால், இப்போது செய்தால் சரியாக வருமா என, லேசான சந்தேகம்.ஆனால், கேட்டது சிவாஜி கணேசன். அவருக்கு செய்து கொடுக்கா விட்டால் எப்படி?பிரிஜ்ஜில் இருந்து முட்டையை எடுத்து, சிறிது நேரத்திலேயே, 'ஆப்பாயில்' தயார் செய்து, சிவாஜிக்கு கொடுத்தார்.சிவாஜி சாப்பிட ஆரம்பித்தார்.இத்தனை நாள் கழித்து, 'ஆப்பாயில்' செய்திருக்கிறோம், எப்படி வந்திருக்கிறது, சிவாஜிக்கு பிடித்திருக்கிறதா என தெரியவில்லையே, என்ற சந்தேகம் அம்மாவுக்கு.ஆனால், சிவாஜியிடம் நேரடியாக கேட்க கூச்சம். தங்கை கிருஷ்ணாவை அழைத்து காதுக்குள் கிசுகிசுத்தார்.'ஆப்பாயில் எப்படி இருக்குன்னு, சிவாஜி கிட்ட கேள்...' என, மெதுவாய் சொன்னார். ஆனால், கிருஷ்ணாவுக்கும் தயக்கம்.கடைசியில் அம்மாவே, சிவாஜியிடம் கேட்டு விட்டார்.'ஆப்பாயில் சாப்பிட்டீங்களே... எப்படி இருந்தது?'உடனே கண்களை மூடிக் கொண்டு, 'ஆப்பாயில் பிரமாதம். அந்த ருசி, நாக்கு வழியே இதயம் வரை போய் விட்டது...' என, ரசித்து சொன்னார், சிவாஜி.அதை கேட்டதும் அம்மாவுக்கு பரம திருப்தி. 'அமெரிக்காவில் சினிமா தியேட்டர் எல்லாம் எப்படி இருக்கும்?' என, ஒருநாள் கேட்டார், சிவாஜி. அமெரிக்காவில் அவர், தியேட்டரில் சினிமா பார்த்ததில்லை.'இங்கே தியேட்டர்களில், 'சவுண்ட் சிஸ்டம்' நல்லா இருக்கும். திரைகள் மிகவும் பெரிய அளவில் இருக்கும். தியேட்டரில் படம் பார்ப்பது உங்களுக்கு புதிய அனுபவமா இருக்கும். உங்களை தியேட்டருக்கு அழைத்து செல்கிறேன்...' என்றேன்.அதற்கான ஏற்பாடுகளையும் செய்தேன்.என் வீட்டருகே நல்ல தியேட்டர் இருந்தது. அதற்கு, சிவாஜியை அழைத்து சென்றேன். தியேட்டருக்கு உள்ளே சென்றதும், சிவாஜிக்கு பெரிய அதிர்ச்சி.என்ன அதிர்ச்சி?அடுத்த வாரம் சொல்கிறேன்.தொடரும்எஸ். சந்திரமவுலி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !