வாசகர்கள் கருத்துகள் ( 2 )
 Mahendran Puru
     செப் 15, 2025 13:18
  நிகரற்ற என்ற வார்த்தை இந்த மகா கலைஞனின் திறமைக்கு பொருந்தும். என்றும் வாழ்க இவர் புகழ்.
 Sundararaman Sankar
     செப் 14, 2025 18:49
  Sivaji is a great man Actor.
'ஓவர் ஆ க்டிங்' - சிவாஜி சொன்ன காரணம்! சி வாஜிக்கு மிகவும் பிடித்த நடிகர், கமல்ஹாசன். கமலை பற்றி மிகவும் பெருமையாகவும், பாராட்டியும் நிறைய சொல்வார், சிவாஜி. கமலை பற்றி பேசாமல் அவரால் இருக்க முடியாது. அவர் சொன்னதில் ஒருவரி என்னால் மறக்க முடியாதது. 'நடிகன்னா அவன் தான்...' கமலின் நடிப்பு திறமைக்கு, சிவாஜி கொடுத்த நற்சான்றிதழ் இந்த ஒருவரி. உ யர்ந்த மனிதன் படத்தில், மேஜர் சுந்தரராஜனுடன் இணைந்து, சிவாஜி நடிக்கும் காட்சி எனக்கு மிகவும் பிடிக்கும். ஒருமுறை, சிவாஜியுடன் பேசிக் கொண்டிருந்த போது, அந்த காட்சியில், சிவாஜியின் உணர்ச்சிபூர்வமான நடிப்பைப் பற்றி மிகவும் பாராட்டி சொன்னேன். 'உங்களுடைய, 'எமோஷனல்' ஆன நடிப்பை சில பேர், 'ஓவர் ஆக்டிங்' என, சொல்கிற போது எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கும்...' என்றேன். இதற்கு, சிவாஜி சொன்ன பதில் கவனிக்கத்தக்கது... 'சினிமா எல்லா ஊர்லயும் ஒண்ணு தான். ஆனால், அந்த சினிமாவை பார்க்குற ரசிகர்கள் இருக்காங்க பாரு, அவங்க உலகம் முழுக்க ஒரே மாதிரி இருப்பாங்களா? இருக்கமாட்டாங்க; இருக்கவும் முடியாது. 'ஹாலிவுட்ல, ஒரு காட்சியில் லேசா கோடு காட்டினாப் போதும்; அமெரிக்காவில் இருக்குற ஜனங்க சட்டுன்னு புரிஞ்சுக்குவாங்க. ஆனால், நம்ம ஊர்ல ஜனங்கள், அப்படி இல்லை. 'நான் ஆரம்பத்துல இருந்து, அஞ்சாறு காட்சியில, டாக்டரா வெள்ளைக் கோட் போட்டுக்கிட்டு, கழுத்துல, 'ஸ்டெதாஸ்கோப்'பை மாட்டிக்கிட்டு வந்திருப்பேன். அப்ப தான், 'அட, இந்த படத்துல, சிவாஜிக்கு டாக்டர் வேஷம்'னு அவனுக்குப் புரியும். 'கோட்டையும், 'ஸ்டெதாஸ்கோப்'பையும் நான் எடுத்துட்டா, டாக்டர் இல்லன்னு நினைச்சுருவான். அந்த மாதிரியான ரசிகர்களுக்கு அவனுக்கு புரியற மாதிரி நடிக்க வேண்டியிருக்கு. அப்படி தானே நடிக்கணும்? அப்படி நடிச்சா நம்ம ஊர்ல சில பேரு, 'ஓவர் ஆக்டிங்'ன்னு சொல்லிடறாங்க...' என, நீண்ட விளக்கம் சொன்னார். தன்னுடைய நடிப்பு குறித்து, சிவாஜி தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார் என்பது எனக்கு தெரிந்தது. சிவாஜியுடன் இதுபோன்று பல உரையாடல்கள். ஒவ்வொரு உரையாடலும் ஒவ்வொரு விதமான ஆச்சரியத்தை கொடுக்கும். ஒ ருமுறை சிவாஜியிடம், 'காஞ்சி பரமாச்சாரியார் தான், நீங்க, திருவருட்செல்வர் படத்துல, அப்பரா நடிச்சதுக்கு, 'இன்ஸ்பிரேஷன்'னு சொல்வாங்களே... அது நிஜம் தானா?' என, கேட்டேன். அவர் அந்த சம்பவத்தை பற்றி சொல்ல ஆரம்பித்தார்... 'ஒரு சமயம், காஞ்சி பரமாச்சாரியார், சென்னை, மயிலாப்பூரில் முகாமிட்டிருந்தார். அப்போது, என்னை சந்திக்க விரும்புவதாக தகவல் கூறினர். அவர் எதற்கு சினிமா நடிகனை சந்திக்க விரும்புகிறார் என, எனக்கு புதிராக இருந்தது. 'குறிப்பிட்ட தினத்தில் என் அப்பா, அம்மா மற்றும் மனைவி கமலாவோடு அவரை பார்க்க சென்றேன். ஒரு அறையில் எங்களை உட்கார வைத்தனர். அரை மணி நேரம் போல காத்திருந்தோம். அந்த சமயம் பார்த்து மின்சாரம் போய் விட்டது, அறை இருளானது. 'அரை இருட்டில் உள்ளே வந்த, பரமாச்சாரியார், என்னை பார்த்து, 'நீ தான் சிவாஜி கணேசனா?' என்றார். நாங்கள் அவரை வணங்கினோம். 'உன்னை பார்த்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம். திருப்பதிக்கு போயிருந்தேன். ஒரு யானை எனக்கு மாலை போட்டது. விசாரிச்ச போது, 'சிவாஜி கணேசன் இந்த யானையை, 'டொனேஷனா' கொடுத்தார்...' என்றனர். 'திருச்சிக்கு போயிருந்தேன். திருவானைக்காவல் கோவிலில் இன்னொரு யானை, எனக்கு மாலை போட்டது. விசாரிச்ச போது, அதுவும், சிவாஜி கணேசனோட, 'டொனேஷன்'னு சொன்னா. 'அப்புறம் தஞ்சாவூர் போன போது, புன்னைநல்லுார் மாரியம்மன் கோவில் யானை, எனக்கு மாலை போட்டது. அதுவும், சிவாஜி கணேசன், 'டொனேஷன்'னு சொன்னா. 'யானையைப் போலவே உனக்கும் பெரிய மனசு. அதான் கோவிலுக்கு யானை, 'டொனேட்' பண்ணறே...' எனச் சொல்லி, எங்களை ஆசீர்வதித்தார். 'அந்த சமயத்துல நான், அவரை ரொம்ப நுணுக்கமா கவனிச்சேன். அதாவது, அவரோட உடல் மொழியை கவனமாக பார்த்தேன். 'அவர் எப்படி உட்காருகிறார், நடக்கிறார், கைகளால் ஆசி வழங்குகிறார், முகபாவங்கள், பேச்சு எல்லாவற்றையும் கவனிச்சேன். அதெல்லாம், திருவருட்செல்வர் படத்துல, அப்பரா நடிக்க ரொம்ப உதவியாக இருந்தது...' என, மிகவும் நெகிழ்ச்சியோடு கூறினார், சிவாஜி. சிவாஜி சொன்ன இந்த சம்பவம், எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. நடிப்பு, சிவாஜிக்கு எங்கிருந்தெல்லாம் கிடைக்கிறது என்ற பிரமிப்பு ஏற்பட்டது. அ மெரிக்காவின் ஒஹையோ மாநிலத்தில் உள்ள ஊர், டொய்டன். அமெரிக்க பாராளுமன்றத்தின் சபாநாயகராக இருந்த ஜொனதன் டொய்டன் என்பவரது பெயர் தான், அந்த நகரத்துக்கு சூட்டப்பட்டது. அங்கே அமெரிக்க விமானப் படையின் மிகப்பெரிய, தேசிய மியூசியம் இருக்கிறது. 100 ஆண்டு பழமையான மியூசியம் அது. உலகின் மிகப்பெரிய விமானப் படை மியூசியமான அங்கே, பல வகையான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றன. சிவாஜிக்கு சரித்திர சம்பந்தமான விஷயங்கள் பிடிக்கும் என்பதால், அவரை அந்த விமானப் படை மியூசியத்துக்கு அழைத்து சென்றேன். அங்கே இருந்த பழங்கால விமானங்களை ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே வந்தோம். ஒரு குறிப்பிட்ட விமானத்தைப் பார்த்தபோது, சிவாஜி மிகவும் உணர்ச்சிவசப்பட்டு விட்டார். நவ., 22, 1963ல், அமெரிக்க ஜனாதிபதி, கென்னடி, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் டல்லாஸ் என்ற ஊரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவின் ஜனாதிபதிக்கான ஏர்போர்ஸ் ஒன் படையின், சிறப்பு விமானம் ஒன்றில் அவரது உடல், வாஷிங்டன் நகருக்கு கொண்டுவரப்பட்டது. அதே விமானத்தில், இறந்த ஜனாதிபதி கென்னடியின் உடல் அருகில் இருக்க, அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இருந்த லிண்டன் பி ஜான்சன், அமெரிக்க ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். அருகிலேயே கென்னடியின் மனைவி ஜாக்குலின் கென்னடியும் இருந்தார். அந்த விமானம், இப்போது விமானப் படை தேசிய மியூசியத்தில், 'ஜனாதிபதிகள் கேலரி' பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த விமானத்தை பற்றிய தகவல்களைத் தெரிந்து கொண்டபோது, மிகவும் உணர்ச்சிவசப்பட்டு போனார், சிவாஜி. காரணம், ஜனாதிபதி கென்னடி அவரை வெள்ளை மாளிகைக்கு அழைத்து விருந்தளித்து கவுரவித்தவர் ஆயிற்றே! ஜெ யலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது, அவருடைய வளர்ப்பு மகன் சுதாகரனுக்கும், சிவாஜியின் பேத்தி, சத்தியலட்சுமிக்கும் நடைபெற்ற திருமணம் பற்றி நாடே அறியும். அந்த திருமணத்துக்கு, என்னை அழைத்திருந்தார், சிவாஜி. பேத்தி திருமணத்துக்கு, சிவாஜி அழைக்கும் போது போகாமல் இருக்க முடியுமா? அது மறக்க முடியாத ஓர் அனுபவத்தை எனக்கு கொடுத்தது. அந்த திருமணமும், அதற்கு அடுத்த நாள், சிவாஜி செய்த ஒரு காரியமும், இப்போது நினைத்தால் கூட புல்லரிக்கிறது. அடுத்தவாரம் பார்ப்போம். — தொடரும் எஸ். சந்திரமவுலி
நிகரற்ற என்ற வார்த்தை இந்த மகா கலைஞனின் திறமைக்கு பொருந்தும். என்றும் வாழ்க இவர் புகழ்.
Sivaji is a great man Actor.