வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Haribabu Poornachari
அக் 05, 2025 13:06
அருமையான பதிவு, நன்றிகள்
சிவாஜியின் நாடகத்து கனவு நவராத்திரியில் பலித்தது!எ ங்கள் வீட்டுத் தியேட்டரில் ஏதோ ஒரு படம் பார்த்து முடித்து விட்டு, அந்த படத்தை பற்றி நானும், சிவாஜியும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது தான், சிவாஜி நடித்த, நவராத்திரி பட அனுபவம் பற்றிக் கேட்டேன். 'அந்த காலத்தில் ஒரு பழக்கம் இருந்தது. எங்களுக்கு நாடகம் இல்லாத நாட்களில் அதே ஊரிலோ, அல்லது அருகில் உள்ள வேறு ஊர்களிலோ ஏதாவது நல்ல நாடகம் நடந்தால், அதைப் பார்க்க எங்கள் எல்லாரையும் அழைத்து போவர். 'அப்படி ஒருமுறை, நாமக்கல்லில், சாமி ஐயர் என்பவர் நடித்த, 'டம்பாச்சாரி' என்ற நாடகத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. 'அதில், சாமி ஐயருக்கு, ஒன்பது விதமான வேஷம். அதை பார்த்து பிரமித்து போய்ட்டேன். நாடகத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரொம்ப ரசித்தேன். ஒரே மனிதர், ஒரே நாடகத்தில் இப்படி வெவ்வேறு வேஷத்தில் வந்து நடிக்கிறாரேன்னு, எனக்கு ஆச்சரியம். இது மாதிரி நாமும் நடிக்கணும்ங்கிற ஆசை, அப்பவே எனக்கு வந்துருச்சு. 'அப்புறம் சினிமாவுல நடிகன் ஆனேன். பெரிய, 'ஹீரோ' ஆகிட்டேன். ஆனாலும், நாடகக் காலத்தில் இருந்த, ஒன்பது வேஷ ஆசை, எனக்கு அப்பவும் இருந்தது. 'ஏ.பி.நாகராஜன், நவராத்திரி படக்கதையை சொன்னார். நான் ஆசைப்பட்ட மாதிரியே எனக்கு ஒரே படத்தில், ஒன்பது கதாபாத்திரங்களில் நவரசங்களையும் வெளிப்படுத்தி நடிப்பதற்குரிய சவாலான வாய்ப்பையும் கொடுத்தார். 'நவராத்திரி என்னோட, 100வது படம். நானும், சாவித்திரியும் நடிச்சிருந்தோம். 100 நாள் ஓடிச்சு. எங்க ரெண்டு பேர் நடிப்பை பார்க்கிறதுக்கே அந்த படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கலாம்ன்னு பத்திரிகைகள்ல எழுதுனாங்க...' என, நவராத்திரி படத்தை பெருமிதமாய் சொன்னார், சிவாஜி. நாடகக் கனவு, நவராத்திரி படம் மூலம் நிறைவேறிய மகிழ்ச்சி, அவர் கண்களில் தெரிந்தது. அ ந்த சமயம், சிவாஜியோடு, பிரபுவும் அமெரிக்கா வந்திருந்தார். ஒருநாள் நாங்கள் மூவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது, தான் 100 படங்கள் நடித்து முடித்து விட்டதாக சொன்னார், பிரபு. அப்போது, 'என்னோட மகன் என்ற, 'விசிட்டிங் கார்டை' வெச்சுக்கிட்டு சினிமாவுல வந்து, 100 படம் நடிச்சிட்டேன்னு சொல்றான், பிரபு. ஆனா, நாங்கள்லாம் மேல வர்றதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டோம். 'நாடகக் கம்பெனியில இருந்த போது, பலவிதமான கஷ்டங்களை அனுபவிச்சிருக்கோம்...' எனச் சொல்லி, தான் பட்ட கஷ்டங்களை விவரித்தார், சிவாஜி... 'சின்ன வயசுலயே நாடகக் கம்பெனியில சேர்ந்திட்டோம். அங்கே மேடையில நடிப்பு எத்தனை முக்கியமோ, அந்த அளவு கம்பெனில, 'டிசிப்ளின்' முக்கியம். ராத்திரி நாடகம் முடிஞ்சு, 'மேக்--அப்'பை கலைச்சிட்டு, சாப்பிட்டு விட்டு துாங்க, ரொம்ப, 'லேட்' ஆயிடும். 'ஆனாலும், மறுநாள் காலையில, 7:00 மணிக்கெல்லாம் எழுந்துடணும். குளிச்சிட்டு, சாமி கும்பிடணும். அடுத்து, பாட்டு, டான்ஸ் பயிற்சி நடக்கும். அதுக்கப்புறம் நாடக ஒத்திகை. 'கம்பெனியில சோறு, சாம்பார், ரசம், மோர், காய் என, வக்கணையா சாப்பாடு தரமாட்டாங்க. சாதாரண சாப்பாடு தான். நாடக கம்பெனில இருக்கும் போது, ஊருக்கு போய் அப்பா, அம்மாவை பார்த்துட்டு வர்றது, அத்தனை சுலபம் இல்லை. 'லீவ்' கொடுக்க மாட்டாங்க. 'அதுவும் முக்கிய வேஷத்துல நடிக்கிறவங்கன்னா, 'லீவே' கிடைக்காது. வேற ஆள வெச்சு நாடகம் போட முடியாதுன்னு, காரணம் சொல்வாங்க. 'ஒரு தடவை, மதுரை மேலுாரில் விளையாட்டு மைதானத்துல கொட்டகை போட்டு, நாடகம் நடத்தினர். நாங்க தங்கி இருந்த இடத்துல, தேள், பாம்பு மற்றும் பூரான் எல்லாம் சகஜமா ஓடிச்சு. தலையில் வெச்சிக்க விக்கை எடுத்தா, அதுல இருந்து ரெண்டு தேள் விழும். சட்டையை எடுத்தால், அதுல இருந்து பூரான் விழும். 'கட்டெறும்புக் கடியில் இருந்து தப்பிக்கவே முடியாது. சில சமயம், மேடையில் நடிச்சுக்கிட்டு இருக்கும் போது, தலையில் விக்குக்குள் இருந்து கட்டெறும்பு கடிக்கும். பொறுத்துக்கிட்டு வசனம் பேசுவோம்...' என, அவருடைய நாடக காலத்து கஷ்டங்களை நினைவு கூர்ந்தார். அதை கேட்ட போது, எத்தனை கஷ்டங்களை தாண்டி, 'நடிகர் திலகம்' என்ற பட்டத்தை அடைந்திருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. டா க்டர், போலீஸ் அதிகாரி, கலெக்டர் போன்ற தொழில் ரீதியான வேடங்களில் நடிப்பது பெரிய விஷயமில்லை. நாதஸ்வரம், மிருதங்கம், கிடார் மற்றும் பியானோ போன்ற இசைக்கருவிகளை வாசிக்கத் தெரியாமல், ஆனால், தேர்ந்த இசைக்கலைஞர் எப்படி வாசிப்பாரோ அப்படி வாசிப்பது போல நடிப்பது, சிவாஜிக்கு கைவந்த கலை. இதை, தில்லானா மோகனாம்பாள் முதல், பல படங்களில் பார்த்து, நான் வியந்திருக்கிறேன். 'சிவாஜி, இது எப்படி உங்களுக்கு சாத்தியமாகிறது?' என, ஒரு தடவை, சிவாஜியிடம் கேட்டார், என் அம்மா. இந்த கேள்வியைக் கேட்டதும், சிவாஜிக்கு உற்சாகம் வந்து விட்டது. 'அவற்றையும் நான் கதாபாத்திரமாகவே பார்க்கிறேன். நாதஸ்வரம், வீணை, கிடார், மிருதங்கம், பியானோ மற்றும் புல்லாங்குழல் என, பல வாத்தியங்களை படங்களில் நான் வாசித்திருப்பதாக, சொல்ல மாட்டேன். வாசிப்பது போல நடித்திருக்கிறேன் என்று, தான் சொல்வேன். 'ஒரு நடிகன், ஒரு வாத்தியத்தை வாசிக்கக் கற்றுக் கொண்ட பிறகு தான், அந்த வேடத்தில் நடிக்க வேண்டும் என்றால் அது சாத்தியமா? அந்த வாத்தியங்களை வாசிப்பது போல நடிக்க வேண்டியது தான், அவனுடைய வேலை. 'அந்த வாத்தியத்தை அந்த நடிகர் உண்மையாகவே வாசிப்பதாக நம்பும்படி, கண் அசைவுகளையும், முகபாவங்களையும், விரல் அசைவுகளையும் கொடுக்க வேண்டும். தில்லானா மோகனாம்பாள் படத்தில், மதுரை சேதுராமன், பொன்னுசாமி சகோதரர்கள் தான், நாதஸ்வரம் வாசித்தனர் என்பது எல்லாருக்கும் தெரியும். 'ஆனால், திரையில் பார்க்கிறபோது, நான் வாசிப்பது போல தத்ரூபமாக நடிக்க வேண்டும். 'பாட்டும் நானே பாவமும் நானே...' பாட்டில் நான், பல வாத்தியங்களை வாசிப்பது போன்ற காட்சிகள் வரும். எல்லாமே முகபாவம் தான், நடிப்பு தான்...' எனக் கூறினார், சிவாஜி. உண்மை தான், அவர் நடித்த படங்களில் உண்மையான இசைக்கலைஞர் போல் தான் தெரிவார். அது தான், சிவாஜி. சி வாஜியை அமெரிக்காவுக்கு வரவழைத்து, அவருடைய பலவீனமான இதயத்துக்கு அறுவை சிகிச்சை இல்லாமல், நவீன மருந்துகள் மட்டுமே கொடுத்ததில் நன்றாகவே முன்னேற்றம் ஏற்பட்டது. இதய பாதிப்பை பொறுத்தவரை, ஆபரேஷன் செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி, தொடர்ந்து மாத்திரைகள் எடுத்து, கவனமாக பராமரிக்க வேண்டும். சிவாஜியைப் பொறுத்தவரை, அவரது இதயம் அவருக்கு பிரச்னை கொடுக்கா விட்டாலும், பின்னாட்களில் அவருக்கு ஏற்பட்ட சிறுநீரக பாதிப்பு, அதை தொடர்ந்து நடந்த, 'டயாலிசிஸ்' எல்லாம், அவரை நாம் இழப்பதற்கு முக்கியமான காரணங்களாக மாறின. இதில் எனக்கு மிகுந்த வருத்தமே! ஒரு மருத்துவராக தான், சிவாஜிக்கு நான் அறிமுகமானேன். ஆனால், சில நாட்களிலேயே அவருடைய குடும்ப நண்பராக மாறிப் போனேன். அமெரிக்காவில் எங்கள் வீட்டில் சிவாஜி தங்கியிருந்த போது, குடும்ப உறுப்பினராகவே அவர் மாறிப் போனார். அந்த நட்பும், உறவும் இன்றும், சிவாஜி குடும்பத்தினருடன் நீடிக்கிறது. சிவாஜி என்ற மகா கலைஞனுடன் பழகிய நாட்கள், மறக்க முடியாதவை; மறக்க கூடாதவை. இன்று என் மனதில் நிறைந்திருப்பவை. - முற்றும் எஸ். சந்திரமவுலி'இ தயத்தை தொட்டுட்டார்...' எனச் சொல்வதை, நாம் அனைவருமே கேட்டிருப்போம்; படித்திருப்போம். ஆனால், நான் நிஜமாகவே இதயத்தை தொட்டிருக்கிறேன். காரணம், நான் இதய மருத்துவர். ஆயிரக்கணக்கான இதயங்களை தொட்டிருந்தாலும், என் இதயத்தை தொட்டவர்கள் மிகச் சிலரே. அவர்களில் முக்கியமானவர், சிவாஜி கணேசன். யாருக்கும் கிடைக்காத அனுபவமாய் எனக்கு, அவருடன் நெருங்கிப் பழக அதிக வாய்ப்புகள் கிடைத்தன. அதுவும், தமிழகத்தின் பரபரப்புகள் இல்லாமல் அமெரிக்காவில், அமைதியாய், என் வீட்டில், என்னுடன் அவர் தங்கியிருந்த காலங்கள் மறக்க முடியாதவை. அவரை அங்கே முழுமையாக அறிந்து கொள்ள முடிந்தது. உங்களது, சிவாஜி அனுபவங்களை எழுத முடியுமா என, ரவி தமிழ்வாணன் ஆர்வமாய் கேட்ட போது, என்னால் மறுக்க இயலவில்லை. தீவிர மருத்துவப் பணிகளின் இடையே, இந்த தொடரை துவங்கினேன். இனிய பாராட்டுக்களுடன் முடித்திருக்கிறேன். எழுத்தில் எனக்கு உதவியாய் இருந்த, சந்திரமவுலிக்கு நன்றி. மிக முக்கியமாய் இந்த தொடரை, 'தினமலர்' வாரமலர் இதழில் எழுத வாய்ப்பளித்த, தினமலர் ஆசிரியர் என் நண்பர், ராமசுப்புவுக்கு அன்பான நன்றிகள். என் தந்தை, எடிட்டர் எஸ்.ஏ.பி., எப்போதுமே சொல்வார். வாசகர்கள் தாம் நம் முதலாளிகள் என்று. அதை எப்போதுமே மதிப்பவன் நான். கடந்த, 20 வாரங்கள், இந்த தொடர் வெற்றிகரமாக வந்ததற்கு வாசகர்களாகிய நீங்கள் தந்த ஊக்கமும், காட்டிய உற்சாகமும் தான் காரணம். உங்கள் கருத்துக்களை உங்களுடைய கடிதங்கள் மூலம், தொலைபேசி அழைப்புகள் மூலமும் தெரிந்து கொண்டே இருந்தேன். உங்களுக்கு என் தீரா அன்பும் நன்றியும். மற்றொரு நல்ல தொடரில் உங்களை மீண்டும் சந்திக்கிறேன். வணக்கம்.
அருமையான பதிவு, நன்றிகள்