சந்தோஷம்!
வெள்ளிக்கிழமை காலை, 7:00 மணி. காலை, 5:00 மணிக்கே எழுந்து குளித்து, பூஜை முடித்து சமையலறைக்கு வந்தாள், கோகிலம். டிபனுக்கு பொங்கல் செய்துவிட்டு, சட்னிக்கு தாளித்துக் கொண்டிருந்தாள்.கோகிலத்தின் காதில், 'அத்தை...' என்று, அழைத்துக் கொண்டே உள்ளே வந்த, மருமகள் சுதாவின் குரல் ஒலித்தது.''என்ன டிபன் செஞ்சிருக்கீங்க?'' குரலில் அதிகார தோரணை.''பொங்கல் பண்ணிருக்கேன்மா.''''காலைல டிபனுக்கு பூரில்ல பண்ண சொன்னேன்? பொங்கல் பண்ணிருக்கீங்க?'' ''ராத்திரி வேலையெல்லாம் முடிச்சிட்டு படுக்க கொஞ்சம், 'லேட்' ஆயிடுச்சு. அதான், 'சிம்பிளா' பண்ணிட்டேன்.'' ''ஏன் நேரமா எழறதுக்கென்ன? ச்சே, இந்த வீட்ல பிடிச்சத வாய்க்கு ருசியா சாப்பிட முடியுதா?'' அவள் சத்தமாக கேட்டுக் கொண்டிருக்கும் போதே உள்ளே வந்தான், கணேஷ். கோகிலத்தின் மகன், சுதாவின் கணவன்.''என்ன சுதா கத்திக்கிட்டிருக்கே? ஏன் அவங்க தான் செய்யணுமா? வேணும்ன்னா நீ செய்யலாம்ல? இப்படி, ஏழு மணிக்கு எழுந்து வர்றியே. கொஞ்சம் முன்னால எழுந்து வந்து அவங்களுக்கு, உதவியாச்சும் பண்ணிருக்கலாம் தானே?'' கோபமாய் கேட்டான்.''என்ன பேசுறீங்க? நானும், வேலைக்கு போறேன். வீட்ல ஒண்ணும் சும்மா இல்லை.''''அம்மாவும் வீட்ல சும்மா இல்லை. சமைக்கறது, துவைக்கறது, ஸ்கூல் போற பையனை தயார் பண்றது, மார்க்கெட் போறது, திரும்பவும் ராத்திரி சமையல்ன்னு, ராத்திரி, 11:00 மணி வரைக்கும் வேலை செஞ்சுட்டுத்தான் இருக்காங்க. சமைக்கறத பேசாம சாப்பிடு.''அவர்களின் பேச்சு கோபமாவதை கண்ட, கோகிலம், ''விடு கணேஷ். காலைல, 'டென்ஷன்' ஆகாத,'' என்று, சமாதானப்படுத்தினாள்.காபியை எடுத்து, தன்னுடைய அறைக்கு சென்றான், கணேஷ்.''வருண் எழுந்துட்டானா?'' என கேட்டாள், கோகிலம்.''ம். எழுப்பி அவனை, 'ஹோம் ஒர்க்' பண்ண வெச்சிருக்கேன்,'' என்றாள், சுதா.''இன்னைக்கு மட்டும் அவனை குளிக்க வச்சி சாப்பிட வச்சுடறியா?''வழக்கமாக இந்த வேலைகளையும், கோகிலம் தான் செய்வாள். இன்று நேரமாகி விட்டதால், சுதாவை செய்ய சொன்னாள்.சுதா, எதுவும் பேசாமல் வெளியே வந்து, ''வாக்கிங் போன மாமா வந்துட்டாரா?'' என்றாள்.கோகிலத்தின் கணவர், பரசுராமன். வாக்கிங் போனவர் இன்னும் வராதது அப்போது தான், கோகிலத்தின் நினைவுக்கு வந்தது.''இன்னும் வரலம்மா.''''சே, கொஞ்சம் கூட பொறுப்பில்லாத மனுஷன். மணி, 7:30 ஆகப் போகுது. பேரனை ஸ்கூல் கூட்டிட்டுப் போய் விடணும்ங்கற பொறுப்பு இருக்கா. வாக்கிங் போனமா வந்தமான்னு இல்லாம, அங்க யாரிடமாவது நின்னு ஊர் கதை பேசிட்டு வருவார். இவர் வாக்கிங் போகலன்னு யார் அழுதா?''சுதா அப்படி பேசியதும், கோகிலத்துக்கு கோபம் சுறுசுறுவென வந்தது. கணேஷுக்காக அடக்கிக் கொண்டாள்.''இப்ப வந்துடுவார்மா. அதுக்குள்ள, வருணை தயார் பண்ணிடு,'' என்றாள்.பல் விளக்க பாத்ரூம் போன, கணேஷ், ''சத்தம் போடாத. அப்பா வர, 'லேட்'டானா நான் போய் வருணை விட்டுட்டு வரேன்,'' என்றான்.''உங்களுக்கு, 'லேட்' ஆகாதா?''''அதை நான் பார்த்துக்கறேன்.''சற்று நேரத்தில், பரசுராமன் வந்து விட, தயாராக இருந்த பேரனை அழைத்து, பள்ளிக்கு கிளம்பினார்.கணேஷும், சுதாவும் தயாராகி, டைனிங் டேபிளுக்கு வந்த போது மணி, 8:30.கோகிலம் கொண்டு வைத்த பொங்கலை, வேண்டா வெறுப்பாக சாப்பிட ஆரம்பித்தாள், சுதா. 10:00 மணிக்கு மேல் தான் சாப்பிடுவார், பரசுராமன். ஹாலில் உட்கார்ந்து பேப்பர் பார்த்துக் கொண்டு இருந்தார்.''அத்தை, வீடெல்லாம் பிசு பிசுன்னு இருக்கு. சுத்தமா கழுவி, 'மாப்' போட்டு விட்ருங்க. அப்புறம் மார்க்கெட் போய் காய்கறி வாங்கிட்டு வந்துடுங்க. அப்புறம், ரெண்டு நாளா துணி எதுவும் துவைக்கல போல. அழுக்கு துணி நிறைய சேர்ந்து போயிருக்கு. அதையும் துவைச்சிடுங்க. வருணோட சாக்ஸ் எல்லாமே அழுக்கு.'' ''சரிம்மா.''''சுதா. ஞாயிற்றுக்கிழமை இதெல்லாம் செய்யலாமே. அன்னைக்கு, நீயும் வீட்டுல இருப்ப. அம்மாவும், நீயும் சேர்ந்து செய்தால் வேலைகளும் சீக்கிரம் முடியும். அம்மாவுக்கு உதவியாவும் இருக்கும்ல?'' என்றான், கணேஷ்,''அன்னைக்கு ஒருநாள் தான் எனக்கு ஓய்வு. அதையும் கெடுக்க பார்க்காதீங்க. என்னால முடியாது.''''பரவால்ல விடுப்பா.'' ''இன்னைக்கு ரேஷன்ல சர்க்கரை, பாமாயில், கோதுமை போடுவாங்களே,'' என்ற, சுதா, ''மாமா.. இன்னைக்கு ரேஷனுக்கு போயிட்டு வந்துடுங்க,'' என்றாள்.''சரிம்மா.''எல்லாவற்றையும் ஒரு முகச் சுழிப்போடும், பொங்கி வந்த கோபத்தோடும் கேட்டுக் கொண்டிருந்தான், கணேஷ்.சாப்பிட்டு முடித்தவர்கள் கை கழுவி எழுந்தனர். அடுத்த, கால் மணி நேரத்தில் இருவரும் தயாராகி ஆபீசுக்கு கிளம்பினர்.இருவரும் சென்ற பின், வெளியே வந்த, கோகிலத்திடம், ''என்ன, முதலாளியம்மா வேலை சொல்லிட்டு போயிட்டாங்களா?'' என்று கேட்டார், பரசுராமன். ''சும்மாயிருங்க.''''இங்க நடக்கறது எனக்கு ஒண்ணும் பிடிக்கல, கோகிலம். வர வர ரொம்ப அதிகாரம் பண்றா, உன் மருமக. மாமனார், மாமியார்ங்கற மரியாதை சுத்தமா இல்லை. ஏதோ வேலைக்காரங்கன்னு நினைச்சுருக்கா போல.''காலைல நான், 'வாக்கிங்' போயிட்டு, 'லேட்'டா வந்ததுக்கு திட்டினாளா?''''அது வந்து...'' இழுத்தாள், கோகிலம்.''ஸ்கூலுக்கு போறப்ப எல்லாத்தையும் சொல்லிட்டான், வருண். 'ஏன், தாத்தா, 'லேட்'டா வறீங்க? அம்மா உங்கள எப்படி திட்டினாங்க தெரியுமா?'ன்னு கேட்டான். என் நண்பன் ஒருவரை ரொம்ப நாள் கழிச்சு பார்த்தேன். பேசிட்டு வர, 'லேட்' ஆயிடுச்சி. இவ என்ன கேட்கறது?'' அவரின் குரல் உயர்ந்தது.''சும்மா இருங்க.''''என்னை அடக்காத, கோகிலம். நாம தனியா வீடு பார்த்துட்டு போயிடலாம்ன்னு சொன்னாலும் கேட்க மாட்டேங்கற. யாரையும் எதிர்பார்த்து நாம வாழ வேண்டியதில்லை. எனக்கு வர்ற பென்ஷனே நமக்கு தாராளம்,'' என்றவரை கோபமாய் பார்த்தாள், கோகிலம்.''அந்த பேச்சை மட்டும் திரும்ப பேசாதீங்க. என் மகனையும், பேரனையும் பார்க்காம என்னால ஒருநாள் கூட இருக்க முடியாது. நான் மட்டுமென்ன சந்தோஷமாவா இருக்கேன்?''இவ்வளவு கஷ்டப்பட்டாலும் சகிச்சிக்கிட்டு இங்கேயே இருக்க காரணம், அவங்க ரெண்டு பேருக்காகத்தான். சரி, சரி நேரமாச்சு எழுந்திருங்க. உங்களுக்கு பசிக்கும். எனக்கும் நிறைய வேலை இருக்கு.'' ''எப்போ கேட்டாலும் இதையே சொல்லி என் வாயை அடைச்சுடு,'' என்றபடி எழுந்தார், பரசுராமன்.அரசு பணியில் இருந்து ஓய்வுப் பெற்றவர், பரசுராமன்.பரசுராமன் - கோகிலம் தம்பதிக்கு, கணேஷ் ஒரே மகன். ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கிறான். சுதாவும் தான். சுதாவை பெண் பார்க்க போகும் போதே அவர்கள் போட்ட ஒரே நிபந்தனை. 'கல்யாணத்துக்கு பிறகும் வேலைக்கு போவாள்...' என்பதே.'சுதாவுக்கு சமையல் சுத்தமாக தெரியாது...' என்றனர்.'அதுக்கென்னங்க... எனக்கு நல்லா சமைக்க தெரியும். நான் பார்த்துக்கறேன். அப்படியே அவளுக்கு கொஞ்சம், கொஞ்சமா சமைக்கவும் கத்து கொடுத்துடறேன்...' என, சுதாவை ரொம்பவும் பிடித்திருந்ததால் சொன்னாள், கோகிலம்.கல்யாணமும் ஆனது. சுதா வேலைக்கு போய் கொண்டிருக்க, கோகிலம் வீட்டு வேலை செய்ய ஆரம்பித்தாள்.சுதா ஆபீஸ் போய்விட்டு வந்து, சோர்வாக இருப்பதாய் சொல்லி படுத்துக் கொள்ள, வீட்டு வேலை முழுவதும், கோகிலத்தின் தலையில் விடிந்தது. சமையலறை பக்கம் வந்தால் தானே ஏதாவது கற்றுக் கொள்ள முடியும்.அதற்கு பின், சுதாவின் கர்ப்பம், குழந்தை, ப்ரமோஷன் என்று போய் விட, கோகிலத்துக்கு வீட்டு வேலை நிரந்தரமானது.'ஏம்மா. ஒரு வேலைக்காரிய வச்சுக்கலாமா?' என்று, அம்மாவிடம் பலமுறை வற்புறுத்தி இருக்கிறான், கணேஷ்.'வீட்ல நான் நல்லாத்தான இருக்கேன். எல்லாம் நானே பார்த்துக்குறன். வேலைக்காரி எல்லாம் வேணாம்...' என்று, கண்டிப்பாக சொல்லி விடுவாள், கோகிலம்.ஒரு வாரம் சென்ற நிலையில், அன்று இரவு சாப்பாட்டின் போது, ''கணேஷ்... காசி முதல் கன்னியாகுமரி வரைக்கும் ஒரு வாரம், 'டூர்' போறாங்களாம். ஒருத்தருக்கு பத்தாயிரம் ரூபாய் மட்டும் தான். நானும், அம்மாவும் போயிட்டு வரலாம்ன்னு இருக்கோம்.''நம்ம, 'டூர் ஏஜென்ட்' ராமலிங்கம் கேட்டார். நான் உன்னை கேட்டுட்டு சொல்றதா சொல்லி இருக்கேன். போயிட்டு வரவா?'' என்றார், பரசுராமன்.''அதனாலென்ன, தாராளமா போயிட்டு வாங்கப்பா.''''என்னது, இருபதாயிரமா? செலவுக்கு இன்னொரு இருபதாயிரம் வச்சுக்கிட்டா கூட, நாற்பதாயிரம் ஆயிடும். கட்ட வேண்டிய, இ.எம்.ஐ., எல்லாம் ஞாபகம் இருக்கா? அதெல்லாம் ஒண்ணும் வேணாம்,'' என்றாள், சுதா.பரசுராமன், கோகிலம் இருவரின் முகங்களும் சுருங்கி விட்டது. கடைசியில், சுதாவின் முடிவு தான் வென்றது.அடுத்த நாள், சாப்பிட்டு விட்டு படுக்கைக்கு வந்த, கணேஷ், ''சுதா, காலைல இருந்து ஒரு யோசனை. நாம தனிக்குடித்தனம் போகலாம்ன்னு நினைக்கிறேன். என்ன சொல்ற?''அவளால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. ''நிஜமாவா சொல்றீங்க. நம்ப முடியலை,'' என்றாள், சந்தோஷமாக.''ஆமா, எவ்வளவு நாள் தான் ஒண்ணா இருக்கறது. நாமளும் கொஞ்ச நாள் தனியா சந்தோஷமா இருப்போமே.''''அப்பா, இப்பவாவது புரிஞ்சுதே. சீக்கிரம் பாருங்க.''முயன்று தேடியதில், இரண்டு வாரங்களில் நல்ல வீடாக அமைந்தது.''என்னடா சொல்ற... தனிக்குடித்தனம் போறீங்களா? என்னால அனுமதிக்க முடியாது,'' என, கண்ணில் கண்ணீருடன் சொன்னாள், கோகிலம். ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தார், பரசுராமன்.அழுது கொண்டே பிடிவாதமாக மறுத்த அம்மாவிடம், என்னென்னமோ பேசி மனதை மாற்றி சதம்மதம் வாங்கி விட்டான், கணேஷ்.அடுத்து வந்த ஒரு நல்ல நாளில் பால் காய்ச்சி, புது வீட்டுக்கு குடி போயினர், கணேசும், சுதாவும்.அடுத்த நாள், மாலை ஆபீஸ் முடிந்து பெற்றவர்களை பார்க்க வந்தான், கணேஷ். கோகிலம் அவனிடம் பேசவில்லை. அம்மாவிடம் வந்தவன் பேச ஆரம்பித்தான். ''அம்மா, என் மேல கோவமா இருப்பீங்கனு தெரியும். நீங்க சந்தோஷமா இருக்கணும் என்பதற்காகத்தான் நாங்க தனியா குடித்தனம் போனோம்.''''என்னடா சொல்றே... உன்னை, என் பேரனை விட்டுட்டு, பார்க்காம வாழறது எங்களுக்கு சந்தோஷமா?'' ஆற்றாமையுடன் கேட்டாள், கோகிலம்.''ஆமாம்மா. நான் சின்ன வயசா இருக்கறப்ப ரொம்ப கஷ்டப்பட்டு வளர்த்தீங்க. அப்பாவுக்கும் அப்ப சம்பளம் கம்மி. நீங்க சமையல் வேலை பண்ணி என்னை படிக்க வச்சி ஆளாக்கினீங்க. என்னை ஆளாக்க நீங்க காலம் பூரா அடுப்படி புகையில நின்னீங்க. அப்பா தொண்டை தண்ணி வத்த கத்தி வாத்தியார் வேலை பார்த்தார்.''எனக்கு தெரிஞ்சி நீங்க, உங்க சந்தோஷத்த பத்தியே யோசிக்கல. ஒரு சினிமா, டிராமான்னு போனதில்லை. டூர், அது இதுன்னு ஊர் சுத்தி பார்த்ததில்லை. நல்ல டிரஸ் நீங்க ரெண்டு பேரும் போட்டதில்லை.''உங்க தேவை, சந்தோஷம் எல்லாம் சுருக்கிக்கிட்டு, மறைச்சுக்கிட்டு என்னை ஆளாக்கறதுலயே கவனமா இருந்தீங்க. நான் வளர்ந்தேன், படிச்சேன், நல்ல வேலைக்கு போனேன். அதுக்கு பிறகாவது உங்க ரெண்டு பேரையும் சந்தோஷமா, சுகமா வச்சுக்க ஆசைப்பட்டேன். ஆனா, அந்த வீட்ல நீங்க இருக்கற வரைக்கும் அது முடியாதும்மா...'' என்ற கணேஷ், தொடர்ந்தான்...''கல்யாணம் பண்றது எதுக்கு? தங்களோட வேலை கொஞ்சம் குறையும்ன்னு எதிர்பார்த்து தானே? ஆனா, உங்க ரெண்டு பேருக்கும் வேலை குறையல. அடிமை மாதிரி நடத்தினா. அதை கூட, எனக்காக பொறுத்துப்பீங்கன்னு தெரியும். ஆனா மரியாதை? செய்யற வேலைக்கு ஒரு அங்கீகாரம், பாராட்டு இல்லையே!''காலைல இருந்து ராத்திரி படுக்கற வரை எல்லா வேலைகளும் நீங்க தான் செய்வீங்க. அதோட முக்கியத்துவம் அவளுக்கு தெரியலை. வீட்டு வேலைகளை அவ சாதாரணமா நினைச்சுட்டா. இப்போ எல்லா வேலைகளையும் அவதானே செஞ்சாகணும்? இப்போ உங்க முக்கியத்துவம், தேவை, உழைப்பை தெரிஞ்சுப்பா தானே? அவ தெரிஞ்சுக்கணும் என்பதற்காகத்தான் தனிகுடித்தனம் போனேன்.''நானும், அவளுக்கு பலமுறை சொல்லிட்டேம்மா. அவ உணரலை. நம்மை மதிச்சு மரியாதை தர்றவங்ககிட்ட அடிமையா கூட இருக்கலாம். ஆனா, தன்னோட சுயநலத்துக்காக அடுத்தவங்க உணர்வுகளை புரிஞ்சுக்காம கஷ்டப்படுத்தறவங்க, என்ன சொன்னாலும் திருந்த மாட்டாங்க. அவங்களுக்கு பாடம் புகட்டணும். அப்போ தான் மாறுவாங்க.''பெத்தவங்கள கடைசி காலத்துல சந்தோஷமா பார்த்துக்கறது ஒவ்வொருத்தரோட கடமை. அது கூட வச்சிருந்தே சந்தோஷப் படுத்தணுங்கறது இல்லை. இப்படி தனியா போய், பெத்தவங்கள சுதந்திரமா, அவங்களோட விருப்பப்படி வாழ வச்சும் சந்தோஷப்படுத்தலாம்.''இனி நீங்க, 4:00 மணிக்கு எழ தேவை இல்லை. பரபரப்பா சமைக்க தேவை இல்லை. உங்க தேவைகளுக்காக யார் அனுமதியும் கேட்க தேவை இல்லை. வாய்க்கு ருசியா சாப்பிட யாரையும் எதிர்பார்க்க தேவை இல்லை.''நிதானமா முடிஞ்ச நேரத்துல எழுந்து, விருப்பப்பட்டத நிதானமா சமைச்சு சாப்பிட்டு, ஆசைப்பட்ட கோவில், குளம், 'டூர்'ன்னு, நாலு இடம் சுத்திப்பார்த்து சந்தோஷமா இருக்கலாம். யார் கையும் எதிர்பார்த்து நீங்க இல்லை.''பேரனை பார்க்கணும்மா, எப்ப வேண்டுமானாலும் சொல்லுங்க. கூட்டிட்டு வர்றேன். இனியாவது யாருக்கும் பயப்படாம, சந்தோஷமா விருப்பப்பட்ட வாழ்வை, சுநந்திரமா உங்களுக்காக வாழுங்க. வரேன்,'' என சொல்லிவிட்டு வெளியே நடந்தவனை பெருமிதமாக பார்த்தனர், இருவரும்.கே. ஆனந்தன்