முன்கதைச் சுருக்கம்: ஆராதனாவின் அம்மாவை சந்தித்த விஷயத்தை, தன் காதலன் திலகனிடம் சொன்னாள், தீபா. ஆராதனா சொன்னது எல்லாம் கட்டுக்கதையாக இருக்கும். நாம தீவிரமா விசாரிக்கணும் என்றான், திலகன். அதே நேரம், 'தீபா ஷிப்பிங் ஏஜென்சி' பற்றி விசாரிக்க, துப்பரியும் 'ஏஜென்சி'யை அணுகி, ராகேஷ் என்ற துப்பறிவு நிபுணரிடம், அப்பணியை ஒப்படைத்தாள், ஆராதனா. தீபா, தன் முன்னாள் கம்பெனியான, 'தீபா ஷிப்பிங் ஏஜென்சி'யின், ஜி.எம்., முத்துராமனை சந்தித்து, ஆராதனாவின் அம்மா மீது, 'ஆசிட்' வீசிய பணியாளைப் பற்றி விசாரித்தாள். 'தீபா ஷிப்பிங் ஏஜென்சி' ஜி.எம்., முத்துராமன் அதிர்ந்துபோய் தீபாவை பார்த்தார். ''என்னம்மா, நீ? தடார்ன்னு வந்து நிக்கற, 'ஆசிட்' அடிச்சது யாருன்னு கேக்கறே? எனக்கு ஒண்ணும் புரியல.'' ''சரி, நிதானமா சொல்றேன். கேட்டுக்குங்க.'' ஆராதனா வீட்டுக்குப் போனதில் தொடங்கி, எல்லாவற்றையும் சொன்னாள், தீபா. முத்துராமனிடம் எந்தச் சலனமும் இல்லை. கடைசி வரை குழப்பத்தோடு கேட்டார். ''நான் இந்த விஷயத்தை இப்பதான் முதல் முதலாக கேட்கிறேன். நம்ம கம்பெனி, 'ஸ்டாப்' அப்படிப் பண்ணியிருந்தா, எனக்குத் தெரியாமப் போக வாய்ப்பே இல்ல. இது எவ்ளோ பெரிய விஷயம், சார் என்னையோ, எங்க, 'லீகல் அட்வைஸரை'யோ, 'கன்ஸல்ட்' பண்ணாம எந்த முடிவும் எடுத்திருக்க மாட்டாரு.'' ''அப்ப, பத்மனாபன் அங்கிளை கேட்டுச் சொல்லுங்க,'' என்றாள், தீபா. தயக்கத்தோடு போன் எடுத்து, பத்மனாபனுடன் பேசினார், முத்துராமன். ''அங்கிள், போனை, 'ஸ்பீக்கர்'ல போடுங்க, நானும் கேக்கணும்.'' தீபாவை, சற்றே முறைத்து விட்டு, ஸ்பீக்கரை, 'ஆன்' செய்தார், முத்துராமன். ''இல்ல, என் வரைக்கும் இப்படி ஒரு விஷயம் வரவேயில்ல. 'ஆசிட்' அடிச்சா, அது போலீஸ், 'கேஸா'யிருக்கும். நிச்சயம் என்னைக் கூப்பிட்டிருப்பாரு, ஞானசேகர்,'' என்று, பத்மனாபனின் குரல் உறுதியாகச் சொன்னது. ''கம்பெனில வேற யாரைக் கேட்டா, அங்கிள் பதில் கிடைக்கும்?'' என்றாள், தீபா. ''ஆறு வருஷத்துல, 20 பேர் வேலையை விட்டுப் போயிருப்பாங்க. 20 பேர் புதுசா சேர்ந்திருப்பாங்க. அப்படியெல்லாம் யாரையும் கூப்பிட்டுக் கேக்க முடியாதும்மா. உன் அப்பா ஸ்தானத்துல இருந்து சொல்றேன். உன் போக்கு சரியில்ல. ரொம்பப் பதட்டத்துல, தேவையில்லாம நீ என்னென்னவோ செய்யறே.'' என்றார், முத்துராமன். ''விபரம் கேட்டு வந்தா, சொல்ல முடிஞ்சா சொல்லுங்க. அதை விட்டுட்டு, எனக்கு இலவசமா அறிவுரை சொல்லாதீங்க,'' என்று, தீபா பொரிந்ததும், திகைத்துப் பார்த்தார், முத்துராமன். தன்னை நிதானப்படுத்திக்கொண்டு, ''நீ கேட்ட விபரம் என்கிட்ட இல்ல. நானும் விசாரிக்கறேன். தெரிஞ்சதும், சொல்றேன்,'' என்று அடங்கிய குரலில் சொன்னார். சற்று நேரம் தன் கைரேகைகளை ஆராய்ந்த, தீபா, முகத்தில் வலிய ஒரு புன்னகையை கொண்டுவந்து, நிமிர்ந்தாள். ''கம்பெனி பேர் எப்ப மாறும், அங்கிள்?'' ''அதெல்லாம் மாறாதும்மா. இத்தனை ஆண்டுகளா இருந்த அதே பேர்ல தொடரலாம், பேரெல்லாம் மாத்த வேண்டாம்ன்னு, எம்.டி., சொல்லிட்டாரு.'' ''பேரு மட்டும் என்னுது. ஆனா, கம்பெனி யாரோ, மேத்தாவோடது,'' என்று பெருமூச்சுடன் நிமிர்ந்தாள், தீபா. ''கம்பெனி கை மாறியிருக்கலாம். ஆனா, எங்கப்பாகிட்ட உங்களுக்கு விசுவாசம் இருக்கும்ன்னு நெனைக்கறேன்.'' என்ற தீபாவிடம், ''அதில என்னம்மா சந்தேகம்?'' என்றார், முத்துராமன். ''அப்ப, நம்ம ஆபீஸ்ல, 'இன்டர்ன்ஷிப்' பண்ணானே, திலகன், அவன் எம்.பி.ஏ., முடிச்சதும், இங்க ஒரு பெரிய வேலை போட்டுக் குடுப்பீங்க தானே?'' ''அவ்வளவு தானே, தீபா... நிச்சயம் செய்யறேன்,'' என்றார், முத்துராமன். எதிர்முனையில் போன் நீண்ட நேரம் ஒலித்த பின்பே, எடுக்கப்பட்டது. ''மனசுல என்னடா நெனச்சிட்டிருக்கே? ரெண்டு வாரம் ஆச்சு நாம பார்த்து,'' என்று போனில் சீறினாள், தீபா. ''தீபூ, கூல் கூல். 'கோல்டு மெடல்' வாங்கிக் காட்டுன்னு என் 'லவ்வர்' சவால் விட்டிருக்கா. 'ரிசல்ட்' தெரியற வரைக்கும் போன் பேச வேணாம்ன்னு கட்டுப்பாடா இருந்தேன்,'' என்று, திலகனின் குரல் குழைந்து வந்தது... ''ஆமா, என்ன, 'சோப், யூஸ்' பண்றே நீ?'' என்றான். ''ஏன்?'' ''போன்லயே 'கமகம'ன்னு வாசனை துாக்குது.'' ''போடாங்... இந்த வெட்டிப் பேச்சுக்கு ஒண்ணும் குறைவில்ல.'' ''உங்க கம்பெனில வேலை போட்டுத் தரேன்னு நீ சொல்லியிருந்தாலும், 'எக்ஸாம்ஸ்' முடிஞ்ச கையோட, 'கேம்பஸ் இன்டர்வியூ'லாம் போயிட்டிருந்தேன், தீபு. தங்க 'மெடலோ'ட என் தங்கத்தைப் பார்க்க வரேன்.'' ''அதுக்கு முன்னால, நான் சொல்ற படத்துக்கு ரெண்டு டிக்கெட் வாங்கிட்டு வா. வீட்டுல அம்மா, 'டிவி'ன்னு மாத்தி மாத்திப் பார்த்து நொந்துபோச்சு.'' என்றாள், தீபா. திரையரங்கு நிறைந்திருந்தது. நாயகன், 30 பேரை ஒற்றை ஆளாகக் கீழே சாய்த்துக் கொண்டிருந்த நேரத்தில், 'சைலன்ட்டில்' போடப்பட்டிருந்த, தீபாவின் அலைபேசி ஒளிர்ந்தது. வீட்டில் வேலை செய்யும், துரை. மிக அவசரமாயிருந்தாலொழிய அவர், அவளுக்கு போன் செய்ய மாட்டாரே! திலகனிடமிருந்து தன்னை விடுவித்து, போனை எடுத்து, கையைக் குவித்து ஒலியடக்கி, ''ஹலோ,'' என்றாள், மிருதுவாக. ''அம்மா விழுந்துட்டாங்கம்மா,'' என்று மறுமுனையில் பதறினார், துரை. அதிர்ந்தாள், தீபா. ''கவனமா பார்த்துக்குங்க. இதோ வரேன்.'' திலகனின் தொடையில் தட்டினாள், தீபா. ''வா.'' திலகனுக்கு ஏதோ பிரச்னை என்பது மட்டுமே புரிந்தது. வெளியே வந்தனர். குடும்ப டாக்டருக்கு போன் செய்து, விபரத்தைச் சொல்லி, உடனே வீட்டுக்குப் போகச் சொன்னாள். பல கார்களுக்கு நடுவில் பார்க் செய்திருந்த அவளுடைய காரை வெளியே எடுக்க தாமதமானது. ஒரு வழியாக சாலையை தொட்டவுடன், சீறியது கார். வீ ட்டு வாசலில் டாக்டரின் காரை அடுத்து, ஆம்புலன்ஸ் நின்றிருந்தது. திடுக்கிட்டாள், தீபா. ஒரு ஸ்ட்ரெச்சரில், மஞ்சுளாவை வைத்து தள்ளி வந்தபோது, இன்னும் கலக்கமாகி விட்டது. அவள் முகம் கோணியிருந்தது. பதறினாள், தீபா. 'அம்மா, அம்மா...' என, அவள் கன்னத்தில் தட்டினாள். மஞ்சுளாவிடம் அசைவே இல்லை. உலுக்கினாள், சலனம் இல்லை. அவள் மார்பில் காதை வைத்துப் பார்த்தாள், தீபா. இதயத்துடிப்பு மிக மெலிதாய் கேட்டுக் கொண்டிருந்தது. ''என்னாச்சு டாக்டர்?'' ''சாப்பிடறதுக்காக, கட்டிலிலிருந்து இறங்கும் போது விழுந்திருக்காங்க. யாரோ கீழ தடால்ன்னு விழற சத்தம் கேட்டு, துரை ஓடிப்போய்ப் பார்த்திருக்காரு. ''ஏற்கெனவே, 'வீக்'கா இருந்தாங்க, இல்ல? பொட்டுன்னு மயக்கமாயிட்டாங்க. விழுந்ததுல பின் மண்டைல சின்னக் காயம் வேற. உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்திட்டுப் போறது நல்லது.'' என்றார், டாக்டர். ''நானும் ஆம்புலன்ஸ்ல அம்மாகூட வரேன், டாக்டர். திலக், நீ காரை எடுத்திட்டு வா,'' என்றாள், தீபா. மருவத்துவமனையின், உயர் ரக டைல்ஸ் பதித்த, வரவேற்பறையில் தவிப்போடு உட்கார்ந்திருந்தாள், தீபா. தொலைக்காட்சியில் பார்வையைப் பதித்திருந்தான், திலகன். டாக்டர், கண்ணாடி கதவு திறந்து வெளியே வந்ததும், அவரிடம் ஓடினாள், தீபா. ''எப்படியிருக்கு, டாக்டர்?'' ''பார்த்தா, 'ஸ்ட்ரோக்' போலத் தெரியுது. 'நியூரோ சர்ஜன்' பாத்திட்டிருக்காரு,'' என்றார், டாக்டர். ''ஹார்ட் அட்டாக்கா?'' என்று கேட்டான், திலகன். ''இல்லப்பா. மூளைக்குப் போற ரத்தம் ஏதோ தடைப்பட்டு, ஒரு பக்க முகமே கோணியிருக்கு. பக்கவாதமாயிருக்கும்ன்னு தோணுது.'' ''ஐயையோ.'' ''பதறாத, தீபா. இப்ப எல்லாத்தையும் சரிசெய்ய முடியும்,'' என்று, டாக்டர் விளக்கம் கொடுத்து கொண்டிருக்கும் போதே, அதே கண்ணாடிக் கதவு திறந்து ஒரு செவிலி வந்து, சைகையாலேயே டாக்டரை உடனே வரச் சொன்னாள். தளர்த்தியிருந்த முகக்கவசத்தைப் பொருத்திக்கொண்டு உள்ளே விரைந்தார், டாக்டர். மீண்டும் காத்திருப்பு. பொதுவாக எதற்கெடுத்தாலும், கடவுளை நாடும் வழக்கமில்லை. ஆனால், அப்போதிருந்த மனநிலையில் மருத்துவமனையில் இருந்த பிள்ளையாருக்கு முன் நின்று, மவுனமாகக் கண்ணீர் உகுத்தாள், தீபா. மீண்டும் இருக்கைக்கு வந்து காத்திருந்தாள். ஏதோ போன் பேசிவிட்டு வந்தான், திலகன். ''தீபு, மும்பையிலிருந்து ஒரு பெரிய, 'பிசினஸ்மேன்' வந்து எங்களுக்கு, 'கிளாஸ்' எடுத்தாரு, படிச்சு முடிச்சதும் அவங்க கம்பெனிக்கு, 'அப்ளை' பண்ணச் சொன்னாருன்னு சொன்னேனில்ல?'' என்று அவளை நெருங்கி உட்கார்ந்து மெல்லிய குரலில் சொன்னான். ''ம்ம்,'' என்றாள், தீபா அசுவாரசியமாக. ''அந்தக் கம்பெனி ஹெச்.ஆர்., சென்னை வந்திருக்காராம். அவரை, சந்திக்க, ஹோட்டலுக்கு என்னை கூப்புடறாரு,'' என்றான், தயக்கத்தோடு. ''போ, நீயும் போ... எல்லாரும் என்னைத் தனியா விட்டுட்டுப் போங்க.'' ''தீபு, 'மீட்' பண்ணிட்டு உடனே இங்க ஓடி வந்துடறேன்.'' அவள் மேற்கொண்டு மறுப்பு சொல்வதற்குள், அவன் எழுந்து விட்டான். முகத்தை திருப்பிக் கொண்டாள், தீபா. ஆனாலும், அவன் நிற்காமல் போய் விட்டான். நாற்பது நிமிடம் கடந்ததும், சில காகிதங்களுடன் வெளியே வந்தார், டாக்டர். தீபாவை நெருங்கி, ''கேஸ் கொஞ்சம் சிக்கலாயிருக்கும்மா. கபாலத்துக்குள்ள மூளை கொஞ்சம் வீங்கியிருக்கு. நல்ல வேளை, 'நியூரோ சர்ஜன்' கூடவே இருக்காரு. ஒரு, 'எமர்ஜன்சி சர்ஜரி' செய்தே ஆகவேண்டும். 'லேட்' பண்ணா, அம்மா, 'கோமா'வுல போயிடுவாங்க,'' என்றார், டாக்டர். அதிர்ந்து உட்கார்ந்தாள், தீபா. ''இந்த பேப்பர்ஸ்ல கையெழுத்து போடு.'' கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, அவர் சொன்ன இடங்களில் எல்லாம் கையொப்பமிட்டாள், தீபா. ''தீபா, இந்த, 'சிஸ்டர்' உங்க, கூட வருவாங்க. 'கவுன்ட்டர்'ல போய் முன்பணமா, 2 லட்சம் ரூபாய் கட்டிடு. சாயந்தரத்துக்குள்ள மொத்தம் எவ்ளோ ஆகும், என்னன்னு சொல்றேன்,'' என்று கூறி போய் விட்டார், டாக்டர். இரண்டு லட்சமா? எந்தக் கணக்கில் இருக்கிறது? அவளுடைய கணக்கில் இருப்பு, 40 ஆயிரம் என்று காட்டியது. அம்மாவின் வங்கிக்கணக்கைப் பற்றி இப்போது அவளிடம் கேட்க முடியாது. ''ஏம்மா... 'இன்ஷூரன்ஸ்' இருக்கா?'' என்று அந்த மூத்த செவிலி கேட்டதும் நிமிர்ந்தாள், தீபா. முத்துராமனுக்கு போன் செய்தாள். ''நான் ஒரு, 'மீட்டிங்'ல இருக்கேன்மா,'' என்று தாழ்ந்த குரல் வந்தது. ''அவசரம், அங்கிள். அம்மாவை ஆஸ்பத்திரில சேர்த்திருக்கு,'' என்று, தழுதழுத்த குரலில் சொன்னாள், தீபா. முத்துராமன் மன்னிப்பு கேட்டு வெளியில் வரும்வரை பதற்றத்துடன் காத்திருந்தாள். அவள் சொன்னதைக் கேட்டுக்கொண்ட, முத்துராமன் தயங்கி மெல்லச் சொன்னார்... ''இந்த வருஷம் கம்பெனியில், 'மெடிக்கல் இன்ஷூரன்ஸ்' 'ரென்யூ' பண்ணல, தீபா. ''நஷ்டத்துல இருக்கும்போது, அதுக்கு வேற எதுக்கு தண்டமா பணம் அழுதுகிட்டுன்னு அப்பா தடுத்திட்டாரு. எவ்ளோ வேணும் சொல்லு.'' ''ரெண்டு லட்சம், அங்கிள்.'' ''உன் கணக்குக்கு அம்பதாயிரம் ரூபாய் நான் பர்சனலா அனுப்பறேம்மா. மீட்டிங்கை பாதில விட்டு வந்திருக்கேன். போகணும்.'' சில நொடிகளில், அவள் வங்கி கணக்குக்கு அவர் சொன்ன தொகை வந்தது. 'ச்சே, யார் யாரிடமோ பிச்சை எடுக்கும் நிலைமைக்குத் தள்ளி விட்டாரே, இந்த அப்பா!' என்று நினைத்தவாரே, 'கவுன்ட்டரு'க்கு நடந்தாள். தன் கடன் அட்டையைத் தேய்த்து ஒரு லட்சம் ரூபாய்கட்டினாள். தன் வங்கி கணக்கிலிருந்து, 75 ஆயிரம் ரூபாய் செலுத்தினாள். ''நாளைக்கு மிச்சத்தைக் கட்டறேன்.'' என்றாள். ''மூளையில கை வெச்சா, கொறைஞ்சது, 14, 15 லட்சம் ரூபாய் செலவு ஆகும். தயார் பண்ணிக்குங்கம்மா,'' என்று சொல்லி, தீபா, பணம் கட்டிய ரசீதை வாங்கிக் கொண்டாள், செவிலி. காலடியில் பூமி நழுவுவது போலிருந்தது. மயங்கி, 'பொத்'தென்று பளிங்குத்தரையில் விழுந்தாள், தீபா. - தொடரும்.சுபா