உள்ளூர் செய்திகள்

தீபாராதனா! (21)

முன்கதைச் சுருக்கம்: ப த்திரிகை அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்திருந்த தீபாவிடம், கட்டுரை ஒன்றை எழுதும்படி கூறினார், உதவி ஆசிரியர், நாதப்ரியன். அந்த கட்டுரையை எப்படியாவது சிறப்பாக எழுத வேண்டும் என்று உறுதியுடன் இருந்தாள், தீபா. தீபா ஷிப்பிங் கம்பெனி முதலாளி, கல்யாண் மேத்தாவை சந்தித்தாள், ஆராதனா. அப்போது, சிங்கப்பூர், லண்டன் மற்றும் நியூஜெர்சி நாடுகளிலுள்ள துறைமுகங்களுக்கு தன்னுடன் வந்து, பிசினஸ் விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்று, ஆராதனாவிடம் கூறினார். வீட்டிற்கு வந்த ஆராதனா, 'உங்கள், 50வது பிறந்த நாளை, வெளியில் சென்று கொண்டாட வேண்டும்...' என்று தன் அம்மாவிடம் கூறினாள். 'வெளியில் செல்ல வேண்டும் என்றால், தீபாவின் அம்மா வீட்டிற்கு அழைத்து செல்!' என்று சொன்னதும், அதிர்ந்தாள், ஆராதனா. அ ம்மாவைத் திகைப்போடு பார்த்தாள், ஆராதனா. ''எது கேட்டாலும் ஏற்பாடு பண்ணுவேன்னு சொன்னியே, இப்ப ஏன் பதிலே இல்ல?'' என்றாள், அம்மா. ''நீ, தீபாவோட அம்மாவைப் பாக்கணும்ன்னு கேட்பேன்னு நெனைக்கலம்மா. அவங்களுக்கும் உன்னை சந்திக்க சம்மதமான்னு கேட்கணும் இல்ல; அதான் தயங்கினேன்.'' ''அவங்க புருஷனை நான் எந்த விதத்துலயும் கைக்குள்ள போட்டுக்கலைன்னு அவங்களுக்கு எடுத்துச் சொல்லணும். அதுக்காகவாவது அவங்களை சந்திக்கணும், ஆராதனா.'' வாசல் கதவு தட்டப்பட்டதும், ஆராதனா எழுந்து கதவை திறந்தாள். ''அம்மா... வருணும் வந்துட்டான்,'' என்றாள். அறைக்குள் நுழைந்ததும், தன் அம்மாவைக் கட்டிப்பிடித்து, தீய்ந்து போன கன்னத்திலேயே அழுத்தமாக முத்தம் பதித்தான், வருண். ''ஏன்டா இந்த அசிங்கம் பிடிச்சவளை இப்படிக் கொஞ்சறே?'' என்று கூசினாள், அம்மா. ''எந்த முகத்தோட இருந்தாலும், எங்கம்மா தான் இந்த உலகத்துலயே பெரிய அழகி,'' என்று அவனிடமிருந்து பதில் வந்தது. ''வார்டன்கிட்ட, 'பர்மிஷன்' வாங்கத்தான் நேரமாயிருச்சு. பனிரெண்டு மணிக்குள்ள வரணுமேன்னு பதறிட்டு வந்தேன்.'' ''அம்மாவோட பொறந்தநாள் ஆசை என்ன தெரியுமா? தீபாவோட அம்மாவைப் பாக்கணுமாம்,'' என, ஆராதனா கூறியதும் உற்சாகம் குறைந்த, வருண் சில நொடிகள் மவுனம் காத்தான். ''அம்மா, உன்கிட்ட மொதல்ல அவங்க கேக்கற கேள்வி என்னவா இருக்கும் தெரியுமா? 'யார் உங்க மேல ஆசிட் அடிச்சாங்க...' என்று கேட்பார்கள். பதில் சொல்வியா?'' என்றான் வருண். ''அதெப்படிடா சொல்ல முடியும்?'' என்றாள், ஆராதனாவின் அம்மா. ''அந்தத் தயக்கம் எனக்கும் இருக்கும்மா,'' என்றாள், ஆராதனா. ''அவங்களை பார்த்து பேசினாத்தான் எனக்கு மனசு சமாதானம் ஆகும், ஆராதனா.'' ''சரி, நான் தீபா அம்மாவைக் கேக்கறேன்மா,'' என்றாள். ''ஓ.கே., ஓ.கே., இப்ப இந்த டாபிக்கை நிறுத்தறோம்க்கா. இன்னும் ரெண்டு நிமிஷத்துல அம்மாவோட, 'பர்த்- டே' பொறந்துரும். கேக் எங்க?'' அம்மாவை இருவரும் இருபுறமும் அணைத்து ஹாலுக்குள் கூட்டி வந்தனர். மேஜை மீது பிறந்தநாள் 'கேக்' தயாராக இருந்தது. உணர்ச்சிவசப்பட்டு அம்மா கண்ணீர் உகுத்தாள். த ன் மடிக்கணினியை மூடினான், திலகன். அலுவலகத்தில் அத்தனை பேரும் போன பின், அவனும், சாதனாவும் மட்டுமே இருந்தனர். பொது மேலாளர் ஒரு குறிப்பிட்ட விளம்பரக் கருத்தைச் சொல்லி, அதை எப்படி சுவாரசியமாக கொடுக்க முடியும் என்று, 'ஐடியா'க்களோடு மறுநாள் சந்திக்க சொல்லியிருந்தார். ''ஏய், சட்டுன்னு எதுவும் தோணல. எனக்கும் நீயே புதுசா ஒரு, 'ஐடியா' யோசிச்சு வை, திலக்,'' என்று, நிமிஷா அவன் கன்னத்தை வருடி, கொஞ்சி விட்டு போயிருந்தாள். அவனுக்கு போட்டியாக கருத்து சொல்ல அவளுக்கு அவனே உதவ வேண்டுமா? ஏற்கவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் தலையாட்டி வைத்திருந்தான், திலகன். வீட்டுக்குக் கூட்டிப்போய் 'டின்னர்' முடித்த கையோடு, 'ஜூஹூ' கடற்கரைக்கு அவளே காரில் அழைத்துப்போன தினத்திலிருந்து, அவனுடன் நெருக்கமாகியிருந்தாள், நிமிஷா. பொதுவில் இருக்கும் போது, தன்னை நெருக்கமாகத் தொடுவதற்கே அனுமதிக்க மாட்டாளே, தீபா! நிமிஷாவோ உரிமையோடு அவன் தோளில் கை போட்டு இறுக்கிக் கொள்கிறாள். மார்பில் செல்லமாகக் குத்துகிறாள். தொடையில் பட்டென்று தட்டுகிறாள். அந்த நெருக்கம் அவனை நிலைகுலைய வைத்தது. ஆனால், பதிலுக்கு அதே உரிமையுடன் அவளைக் கையாள அவன் தயங்கினான். தீபாவிடம் தினம் வீடியோ கால் செய்து பேசுவதாக சொல்லியிருந்தாலும், அவள் முகத்தைப் பார்க்கவே அவனுக்குத் தயக்கமாக இருந்தது. அவள் அழைப்பை பல தடவை அலுவலக வேலை என்று பொய் சொல்லி நிராகரித்தக் குற்ற உணர்ச்சியும் அவனை வதைத்தது. மடிக்கணினியை மூடிவைத்துவிட்டு அவன் திரும்பிப் பார்த்தபோது, சாதனாவும் தான் செய்து முடித்திருந்த வேலையை மறு பரிசீலனை செய்து கொண்டிருப்பதை கவனிக்க முடிந்தது. அவன் பார்ப்பதைப் பார்த்ததும் புன்னகைத்தாள், சாதனா. அவ்வப்போது ஆங்கிலத்தில் வாக்கியம் சொல்லி அதைத் தமிழில் சொல்லித்தா என்று அவனை நச்சரித்துக் கொண்டிருந்தாள். எழுந்து அருகில் வந்தாள். அவன் எழுந்திருக்கும் முன், பின்னாலிருந்து அவன் இரு தோள்களிலும் கையூன்றி, அவன் பின்கழுத்திலிருந்து நடு முதுகு வரை விரல் நுனிகளை அழுந்தத் தேய்த்து உருவினாள். ''ஏய், என்ன செய்யறே, சாதனா?'' என்று எழுந்து விட்டான், திலகன். ''இப்படி எனக்கு 'மசாஜ்' செய்யச் சொல்றேன். காலையிலிருந்து 'கம்ப்யூட்டர்'ல 'ஒர்க்' பண்ணி, முதுகு வலிக்குது, டியர். எனக்குக் கொஞ்சம், 'ஹெல்ப்' பண்ணு,'' என்று திரும்பி நின்று, கூந்தலை முன்புறம் போட்டாள். முதுகைக் காட்டினாள். அன்றைக்குப் பார்த்து புடவையில் வந்திருந்தாள். ஆழமாக வெட்டிய ரவிக்கையில் பின் கழுத்தின் மினுமினுப்பும், பளீரென்ற முதுகும் தெரிந்தன. அவள் வித்தியாசம் பார்க்காதபோது, அவன் மட்டும் வித்தியாசம் பார்த்தால் தப்பாகி விடும் என்று மெல்ல உருவி விட்டான், திலகன். 'சைலன்ட்டில்' போட்டிருந்த போன் கிர்...ரென்றது. இப்போது பார்த்துதானா, தீபா போன் செய்ய வேண்டும்? எடுக்காமல் தவிர்த்தான். ''பூ போல செய்யாத, அழுத்தி செய்,'' விரல்களில் அவன் அழுத்தம் கொடுத்ததும், சாதனா முதுகை வில்போல் வளைத்து, ஆழமாக மூச்சிழுத்து அதை அனுபவித்தாள். ''திலக், பீருக்கு தமிழ்ல என்ன?'' ''தமிழ்லயும் பீர் தான், சாதனா. பொதுவா சரக்குன்னு சொல்லி சமாளிச்சிருவோம்.'' ''எனக்கு, 'ரிலாக்ஸ்' பண்ணனும். பீர் அடிப்போம் வரியா?'' என்றாள். ''மிட்நைட் ஆச்சு. இப்போ, எந்த பாருக்குப் போறது, சாது?'' ''பார் எதுக்கு? என் அபார்ட்மென்ட்ல ஸ்டாக் இருக்கு. தனியாக் குடிக்க போரடிக்குது. வா போகலாம், திலக்.'' தயங்கினான், திலகன். மறுநாள் முக்கியமான நாள். இவளோடு குடித்துவிட்டு, தெளியாத முகத்துடன் ஜெனரல் மேனேஜரைச் சந்திக்க நேர்ந்தால், தன் புராஜக்ட் நிராகரிக்கப்படலாம். ''இல்ல, டியர். ஜி.எம்., யார் 'புராஜக்டை - அப்ரூவ்' பண்ணாலும், அதை, பீரோட கொண்டாடலாம். இன்னிக்கு வேணாம்,'' என்றான். ''ஷ்யூர்,'' என்றாள், சாதனா. அவள் முகம் ஏமாற்றத்தைப் பிரதிபலித்தது. க ன்னத்தில் மெல்லத் தட்டப்பட்டு, கண் விழித்தாள், தீபா. ''மணி, 8:30 தீபூ. இன்னும் துாங்கிட்டிருக்கே?'' என்று அவளருகில், கோலுான்றியபடி நின்றிருந்தாள், மஞ்சுளா. ''குட் மார்னிங்மா,'' என்றாள். பரபரப்பாக எழுந்தாள். போர்வையை உதறி மடித்தாள். கசங்கிய தலையணையை சரி செய்து, அதன் அருகில் வைத்தாள். ''ரொம்ப மாறிட்டே, தீபா,'' என்று ஆச்சரியப்பட்டாள், மஞ்சுளா. ''நைட் எத்தனை மணிக்குத் துாங்கினே?'' ''நாலு மணி வரைக்கும் மாத்தி மாத்தி எழுதிட்டிருந்தேன்மா. அப்புறம் எப்படியோ, அசந்து துாங்கிட்டேன்.'' கண்ணாடி எதிரில் நின்று பார்த்தாள், தீபா. கண்களில் மெலிதான சிகப்பு இருந்ததே தவிர துாக்கமில்லை. ''இப்ப பேசிட்டிருக்க நேரமில்ல. 20 நிமிஷத்துல 'டைனிங்-டேபிள்ல' 'மீட்' பண்ணுவோம்,'' என்று, குளியலறைக்குள் புயலாக நுழைந்தாள், தீபா. மஞ்சுளா உணவு மேஜையில் காத்திருந்தபோது, போன் ஒலித்தது. செவிலி எடுத்து வந்து கொடுத்தாள். ''ஹலோ.'' ''ஆன்ட்டி. ஆராதனா பேசறேன். அம்மா உங்களைப் பாக்கணும்ன்னு ஆசைப்படறாங்க. வரலாமா?'' என்று கேட்டாள், ஆராதனா. மஞ்சுளாவுக்கு திக்கென்றது. தீபா பார்த்துவிட்டு வந்து சொன்னதிலிருந்து, அவளுக்கும் ஆராதனாவின் அம்மாவைப் பார்க்க வேண்டும் என்ற விருப்பம் வந்து விட்டது. ஆனால், அதை தீபாவிடம் தெரிவிக்க முடியாது என்று அந்த ஆசையைப் புதைத்திருந்தாள். ''தீபா இருந்தா ரசிக்க மாட்டா. அம்மாவை, 'லஞ்ச் ' நேரத்துல கூட்டிட்டு வாம்மா,'' என்றாள், மழலைக் குரலில். தீபா 'ரெடியாகி' உணவு மேஜைக்கு வந்து, 'ஹாட் பேக்'கைத் திறந்தாள். வெள்ளை வெளேரென்ற இட்லிகள். அம்மாவின் தட்டில் இரண்டு, தன் தட்டில் இரண்டு என்று எடுத்து வைத்தாள். ''தீபா, இந்த வேலை உனக்குப் பிடிச்சிருக்குன்னு தெரியுது. பொதுவா நீ அவசரப்பட்டு கோபப்படறே. அதனால சொல்றேன். ஆபீஸ்ல எல்லார்கிட்டயும் கொஞ்சம் மரியாதையா நடந்துக்க. உன்னோட பின்னணி, கடந்த காலம் எல்லாத்தையும் ஆபீஸ் வாசல்ல செருப்போட கழட்டி வெச்சிடு,'' என்று, மஞ்சுளா சொன்னதைப் புன்னகையோடு கேட்டுக்கொண்ட சிரித்தாள், தீபா. ''எங்க ஆபீஸ் கோவில் இல்லம்மா. வாசல்ல செருப்பைக் கழட்டி வைக்க வேண்டாம்,'' என, தீபா கூற, ஈறு தெரிய சிரித்தாள், மஞ்சுளா. 'இப்படி சந்தோஷமாக இருக்கும் தீபாவைப் பார்த்து எவ்ளோ நாளாச்சு,'' என்றாள், மஞ்சுளா. ''வேலைல, 'ஸ்மார்ட்டா' இருக்கணும். கடைசி மூச்சிருக்கற வரைக்கும் நமக்கு தெரியாத ஏதோ ஒண்ணை கத்துக்கிட்டு தான் இருப்போம். ஆபீஸ்ல மத்தவங்களைப் பத்தி வம்பு பேசக் கூடாது. இதெல்லாம் எங்க எடிட்டர் எனக்கு சொல்லிக் குடுத்திருக்காரும்மா. இன்னிக்கு என் மேட்டரைப் படிச்சிட்டு அவர் அசரணும்,'' என்று உற்சாகமாகப் பேசியபடி, சாப்பிட்டு கை கழுவினாள். அப்பாவின் படத்திற்கு எதிரே போய் நின்று, கண்களை மூடிக்கொண்டாள். 'என்கிட்டேர்ந்து எது எதையோ தட்டிப் பறிச்சுட்டீங்கன்னு கோபப்பட்டேன். ஆனா, நீங்க குடுத்த படிப்பு தான் எனக்கு இன்னிக்குத் துணையா இருக்கு...' என்று முணுமுணுத்துவிட்டு, வெளியில் வந்தாள். கார் இருந்தாலும், தன் வேலைக்கு அது சரியாக இருக்காது என்று, ஆட்டோ பிடித்தாள். ஆ ராதனா கார் கதவைத் திறந்து பிடிக்க, வருணோடு கோத்திருந்த கையை விடுவித்து கொண்டாள், அம்மா. பர்தா அணிந்திருப்பது சற்று உறுத்தலாக இருந்தாலும், வெளியுலக காற்றை ஆழமாக மூச்சிழுத்துப் பயணம் செய்ததை ரசித்தாள். ''இப்ப நாம, 'ஷாப்பிங் மால்' வந்திருக்கோம். ஜாலியா சுத்தறோம். 'லன்ச்' நேரத்துல, தீபாவோட அம்மாவைப் பாக்கப் போலாம்.'' ''ஆராதனா, நீ எவ்ளோ அழகா கார் ஓட்டறே!'' என்று அம்மா நெஞ்சில் கை வைத்துச் சொன்னாள். அந்தப் பெரிய மாலில் அவளுடைய அம்மா சுற்றி வரும்போது, சிறு குழந்தைபோல் இடதும், வலதும் குதுாகலமாக வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தாள். பர்தா ஐடியா தனக்கு ஏன் முன்பே தோன்றாமல் போயிற்று என்று வருத்தப்பட்டாள், ஆராதனா. சில கடைகளை கடக்கும்போது, அம்மாவுக்கு கசப்பான பழைய நினைவுகள் கிளறப்படக் கூடும் என்று, ஆராதனாவுக்குத் தெரியும். ஆனால், பழைய கசப்புகளை அவள் கடந்து வந்ததுபோல், அம்மாவும் கடந்து வரவேண்டும் என்றால், தயக்கங்களை எல்லாம் அவள் ஒவ்வொன்றாக உதறியாக வேண்டும். கடைகளில் அம்மா பிடிவாதமாக தனக்கு எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டாள். மாலில் மாட்டியிருந்த கடிகாரத்தைக் காட்டினாள். ''நேரமாச்சு, போலாமா?'' என்றாள், ஆராதனா. மீண்டும் காரில் ஏறினர். ''நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன், செல்லங்களா,'' என்று அம்மா சொன்னபோது, ஆராதனாவைப் போல், வருணுக்கும் நிறைவாயிருந்தது. ஹோட்டலில் சாப்பிட்டு முடித்து, தீபாவின் வீட்டு வாசலை நெருங்கியநேரம். சர்ரென்று அவர்கள் காரை மறித்தபடி, ஓர் ஆட்டோ வந்து நின்றது. அதிலிருந்து பரபரவென்று இறங்கினாள், தீபா. - தொடரும். சுபா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !