உள்ளூர் செய்திகள்

மணி மண்டபம்!

வயலில், களை எடுத்து ஓய்ந்து போனாள், கண்ணாத்தாள். பக்கத்து வயலில் வேலை செய்து கொண்டிருந்த பேச்சியம்மாளை கூவி அழைத்தாள். ''ஏலே பேச்சி... வயிறு பசிக்கலையா... வாடியம்மா கஞ்சிய குடிப்போம்.'' ''இந்தா வாரேன்கா,'' என்ற பேச்சி, வாய்க்காலில் கை, கால் கழுவி சாப்பிட வந்தாள்.சோற்றில் பச்சைப்புளி ரசம் ஊற்றி, தொட்டுக் கொள்ள, கத்தரி வத்தல் மற்றும் சுண்டை வத்தல் எடுத்து வந்திருந்தாள், கண்ணாத்தாள்.''என் மருமக உனக்கும் சேர்த்து சோறு கொடுத்து விட்டுருக்கா... முதல்ல இதை சாப்பிடு,'' என்று பித்தளைத் துாக்கின் மூடி நிறைய சோற்றை அள்ளி வைத்தாள்.பேச்சி எடுத்து வந்திருந்த கத்தரிக்காய் புளிக்குழம்பையும் சேர்த்து சாப்பிட்ட இருவரும், அருகிலிருந்த மர நிழலில், உண்ட மயக்கம் தீர, ஒரு துாக்கம் போட்டனர். இருவரும், 40 ஆண்டு பழக்கத்தில் மிக நெருக்கமானவர்கள். கண்ணாத்தாளுக்கு ஒரு பையனும், ஒரு பொண்ணும். பேச்சிக்கு, மூன்று மகன்கள்; அனைவருக்கும் திருமணமாகி, அருகருகே வசிக்கின்றனர்.துாங்கியெழுந்து, வைக்கோல், இலை தழைகளை ஒரு கட்டாகக் கட்டி, மாடுகளை ஓட்டிக் கொண்டு, மாலையில் வீடு வந்து சேர்ந்தனர். ஊர் திருவிழாவிற்கு அழைப்பதற்காக, கண்ணாத்தாளின் மருமகள் ரேவதியின் அண்ணன் வந்திருந்தான்.''தாராளமா கூட்டிட்டுப் போங்க... பாவம், தோட்டத்தையும், சமையலையுமே பார்த்துக்கிட்டு இருக்குறா. நாலு நாளைக்கு, ஆயி அப்பனோடு சந்தோஷமா இருந்துட்டு வரட்டும்,'' என்று அனுப்பி வைத்தாள்.ஒரு வாரம் சென்ற நிலையில், வயல் வேலை முடித்து, இருவரும் சாப்பிட உட்கார்ந்த போது, சைக்கிளில் வேக வேகமாக மகன் வருவதைப் பார்த்து, ''ஏ அய்யா சின்ராசு... ஏன் இப்படி பறந்துகிட்டு வர்ற,'' என்று பதறினாள், கண்ணாத்தாள். ''உன் மருமகள் உனக்குப் பிடிச்ச தலைக்கறி சமைச்சா. என்னைய உட்காரக் கூட விடாம, நீ சாப்பிடறதுக்குள்ள கொடுத்துட்டு வரச் சொன்னாத்தா,'' என்று சிரித்தான்.அப்படியே நெஞ்சு குளிர்ந்து போய், பேசத் தோன்றாமல், மகனையே பார்க்க, ''என்னாத்தா அப்படிப் பாக்குற... ரெண்டு பேரும் சூடா சாப்பிடுங்க, நான் கிளம்புறேன்,'' என்றான்.''பாத்துப் போயிட்டு வாயா... இந்த வேகாத வெயில்ல இப்படி வரவேணாம்யா... பிடிச்சதை சமைத்து, நீங்க சேர்ந்து சாப்பிடுங்கய்யா,'' என்றாள். ''சரியாத்தா,'' என்று சொல்லி கிளம்பி விட்டான், மகன் சின்னராசு. இருவரும் தாங்கள் எடுத்து வந்திருந்த பழையதை தள்ளி வைத்துவிட்டு, தலைக்கறியும், சுடு சோத்தையும் ஒரு பிடி பிடித்தனர். மாலையில், இருவரும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.மாட்டை கையில் பிடித்தவாறே வந்த பேச்சியம்மாள், ''ஏன்கா உனக்கு விஷயம் தெரியுமா... நம்ம மேலத்தெரு, ராஜாத்தி வீட்டுல, கோவில் மண்டபம் கட்டுறாங்களாமே... நாமளும் ஒரு எட்டு பார்த்துட்டு வருவோமா?'' என்று கேட்டாள். ''அது என்னடியாத்தா கோவில் மண்டபம்... சரி வா போவோம்,'' என்று, மேலத்தெரு நோக்கி நடந்தனர்.மேலத்தெரு என்பது வசதி படைத்தவர்கள் இருப்பது. பெரிய முகப்பும், திண்ணையும் என்று பெரிய வீடுகளாக இருக்கும்.போனவர்கள் திகைத்துப் போயினர். 50 பேர் உட்காரும் அளவு மண்டபமும், அதன் பின் கருவறை அமைப்பும், மேலே பெரிய கோபுரமும், துணியால் மூடியபடி ஒரு சிலை இருந்தது. கொஞ்சம் படித்தவளாக அந்த ஊருக்கு வாக்கப்பட்டு வந்தவள் தான், ராஜாத்தி. நல்ல வசதியான குடும்பம். அடுத்தடுத்து, மூன்று மகன்கள் பிறந்தனர். 10 ஆண்டுகளிலேயே கணவன் இறந்து போனாலும், மகன்களை அவர்கள் விருப்பப்படி, வெளியூரில் தங்கி படிக்க வைத்தாள்.ஆனால், அவர்களோ, தாயின் விருப்பத்தை அறியாமலேயே, வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்று விட்டனர். தனியாகவே வாழ்ந்து வந்தாள், ராஜாத்தி. மூன்று மாதங்களுக்கு முன், இறந்து போனாள், ராஜாத்தி. அவளின் நினைவாக, மணி மண்டபம் கட்டிக் கொண்டிருந்தனர்.''ராஜாத்தி கொடுத்து வெச்சவ; செத்த பின்னாடி கூட, அவளுக்காக புள்ளைங்க இப்படி கோவில் கட்டுறாங்களே,'' என்ற பேச்சி, ''ஏக்கா, நாம செத்த பின்னாடி ஒரு மாசமோ, ரெண்டு மாசமோ நம்ம நெனப்பிருக்கும். அப்புறம், அவங்க அவங்க பொழப்புல நம்மள மறந்து தானே போவாக,'' என்றாள். ''செத்த பின்னாடி இப்படி மண்டபம் கட்டினா, அதுல நீ வந்து குடியிருக்கப் போறீயா? மூணு புள்ளைங்கள பெத்து, புருஷன் செத்த பிறகும், அவங்கள கண்ணுக்குள்ள வச்சு வளர்த்தா, ராஜாத்தி... ''ஆனா, அவ சாகுறப்ப, பெத்த புள்ளைங்க ஒண்ணாச்சும் கூட இருந்துச்சுங்களா... ஆளாளுக்கு ஒரு நாட்டில் இருந்தாங்க. 'வர முடியாத சூழ்நிலையா இருக்கு; நீங்க காரியத்தை முடிங்க'ன்னு மாமன்களுக்கு பணத்தை அனுப்பி வச்சாங்க...''ஒரு வருஷமா ராஜாத்தி நடக்க முடியாம படுத்த படுக்கையா, ஒண்ணுக்கு, ரெண்டுக்குக்கு கூட தனியா போக முடியாம கிடந்தது உனக்குத் தெரியாதா?'' என்றாள், கண்ணாத்தாள். ''அதுக்குத் தான் நிறைய சம்பளம் கொடுத்து, வீட்டோட ஒரு சமையக்காரியும், நர்சும் வச்சாகளே...'' என்றாள், பேச்சி.''நாம ஒரு நாள் ராஜாத்திய பாக்கப் போனோமே நெனைவிருக்கா... அவ படுத்திருந்த அறையில அடிச்ச நாத்தத்த, நம்மால் தாங்க முடிஞ்சுச்சா... வேலைக்கு ஆள் வச்சா, நாலு தடவை போனா, ரெண்டு தடவை தான் கழுவுவாக...''சுவரு பூரா, மகன்களோட பேரை எழுதி வெச்சிருந்தாளே... அதைப் பார்த்து ஊரே அழுதுச்சு. ஆனா, உயிர் போகையில, ஒரு சொட்டு கண்ணீர் விட, அவளுக்கென்று உரிமையா ஒருத்தரும் இல்லையே,'' என்றாள், கண்ணாத்தாள். ''நாம இந்தக் கிராமத்துல படுற பாடு, நம்ம புள்ளைங்க படக்கூடாதுன்னு, தானே, அதுகளாச்சும் நல்லாயிருக்கட்டும்ன்னு, துாரம் தொலைவிற்கு அனுப்புறாங்க,'' என்றாள், பேச்சி.''அது தப்பில்ல; ஆனா, பணத்தாசை புடிச்சு நல்லது, கெட்டதுக்கு கூட வர முடியாமல் போயிடறாங்களே... மனுஷப் பிறவிக்கு மட்டும் தான் சாகுற வரைக்கும் புருஷன், புள்ள, எங்காத்தா, எங்கய்யாங்குற சொந்தம்...''ஆடு, மாடு, கோழிக்கெல்லாம் இல்ல. மூணு புள்ளையில ஒருத்தனாச்சும் உயிர் போகையில கூட இருந்திருந்தா, நிம்மதியா போய் சேர்ந்திருப்பா... ''போன வாரம் காய்ச்சல்ன்னு, நீ படுத்தப்ப, உன் புள்ளைங்க தவிச்சுப் போய் நின்னாங்களே... நீ சொல்லி சொல்லி பூரிச்சுப் போனயில்ல. உயிரோடு இருக்கையில ஒரு வாய் கஞ்சி குடிச்சியான்னு கேட்டாலே போதும்; நாம செத்த பின், எரிச்சாலும், பொதச்சாலும் தெரியவா போகுது...''காசு பணத்தை வச்சு கட்டடத்தை கட்டுனதும், அந்த உயிரு, சாந்தி ஆயிடுமா? ராஜாத்தி கடைசி மூச்சில் கூட, என் புள்ளைங்க வந்துட்டாங்களான்னு கேட்டுக்கிட்டே இருந்தாளே... அந்த ஏக்கம் தீருமா?''எவனுக்கோ உழைக்கிறத, இந்த மண்ணுக்காக உழைச்சா, இந்த மண்ணும் உயரும், பெத்த வயிறும் குளிரும். இதை நான் சொன்னா, பொழைக்கத் தெரியாத கேணச்சின்னு சிரிப்பாங்க,'' என்று, வெகு யதார்த்தமாக கூறிக் கொண்டே, மாட்டைப் பிடித்தபடி நடந்தாள், கண்ணாத்தாள்!சுமதி நடராஜன்வயது: 63, படிப்பு: எம்.எஸ்.சி., எம்.பில்., பி.எட்., ஓய்வு பெற்ற ஆசிரியை.இச்சிறுகதை போட்டிகளில், மூன்று முறை ஆறுதல் பரிசு பெற்றுள்ளார்.சமுதாயத்துக்கு பயன்படும் வகையில், நாவல் ஒன்று எழுத வேண்டும் என்பது, இவரது லட்சியம். கதைக்கரு பிறந்த விதம்: நம் நாட்டு இளைஞர்கள், வெளிநாட்டு மோகத்தால், அங்கு சென்று குடியேறுகின்றனர். அவர்களது எண்ணத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று சிந்தித்ததன் விளைவு, இச்சிறுகதை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !